புதன், 27 பிப்ரவரி, 2019

ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகம் அருகில் லாரி மோதி பெண் உடல் நசுங்கி பலி கணவர் கண் எதிரே பரிதாபம்

ஸ்ரீவைகுண்டத்தில் லாரி மோதி பெண் உடல் நசுங்கி பலி கணவர் கண் எதிரே பரிதாபம்
ஸ்ரீவைகுண்டத்தில் கணவர் கண் எதிரே லாரி மோதி பெண் உடல் நசுங்கி பலியானார்.
ஸ்ரீவைகுண்டம்,

நெல்லை பாளையங்கோட்டை விநாயகர் தெருவில் வசிப்பவர் ஜிந்தா மதார். இவர் அப்பகுதியில் பேன்சி கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி அனிஷ் மும்தாஜ் (வயது 45). இவர்களுக்கு அனிஷ் (18), தனிஷ் (16) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். அனிஷ், நெல்லையில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியிலும், தனிஷ் பிளஸ்-1 வகுப்பும் படித்து வருகின்றனர்.
ஜிந்தா மதாரின் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பேட்மாநகரத்தில் நேற்று உறவினர் ஒருவர் இறந்து விட்டார். இதையடுத்து ஜிந்தா மதார் தன்னுடைய மனைவியுடன் மொபட்டில் பேட்மாநகரத்துக்கு புறப்பட்டு சென்றார்.

பேட்மாநகரத்தில் உறவினரின் துக்க வீட்டுக்கு சென்ற பின்னர், மாலையில் ஜிந்தா மதார் தன்னுடைய மனைவியுடன் பாளையங்கோட்டைக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகம் அருகில் சென்றபோது, எதிரே வந்த லாரி எதிர்பாராதவிதமாக மொபட்டின் மீது மோதியது.

இதில் சாலையில் விழுந்த அனிஷ் மும்தாஜின் மீது லாரியின் பின்பக்க டயர் ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். தனது கண் எதிரே மனைவி இறந்ததை பார்த்த ஜிந்தா மதார் கதறி அழுதார். உடனே லாரியை நிறுத்தி விட்டு, டிரைவரும், கிளனரும் தப்பி ஓடி விட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜட்சன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். விபத்தில் இறந்த அனிஷ் மும்தாஜின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவரான ஸ்ரீவைகுண்டம் தெற்கு யாதவர் தெருவைச் சேர்ந்த நடராஜனை (48) வலைவீசி தேடி வருகின்றனர். நுகர்பொருள் வாணிப கிடங்கில் அரிசி மூட்டைகளை ஏற்றிய லாரி, ஸ்ரீவைகுண்டம் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் அவற்றை வினியோகம் செய்ய சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்தது. கணவர் கண் எதிரே லாரி மோதி பெண் உடல் நசுங்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது. 

சனி, 23 பிப்ரவரி, 2019

ஏரல் அருகே தி.மு.க. வாக்குசாவடி முகவர்கள் கூட்டம் கனிமொழி எம்.பி. பங்கேற்பு

ஏரல் அருகே தி.மு.க. வாக்குசாவடி முகவர்கள் கூட்டம் கனிமொழி எம்.பி. பங்கேற்பு
ஏரல் அருகே தி.மு.க. வாக்குசாவடி முகவர்கள் கூட்டம் நடந்தது. இதில் கனிமொழி எம்.பி. பங்கேற்றார்.
ஏரல், 

ஏரல் அருகே சிவகளையில் தி.மு.க. வாக்குசாவடி முகவர்கள் கூட்டம் நடந்தது. தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. பேசினார். அவர் பேசுகையில், தி.மு.க. சார்பில் ஒவ்வொரு வாக்குசாவடிக்கும் 20 வாக்குசாவடி முகவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஒவ்வொரு வாக்குசாவடி முகவரும் 10 முதல் 15 வாக்காளர்களை உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்க செய்ய வேண்டும். மத்திய, மாநில அரசின் மக்கள் விரோத கொள்கைகளால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்களிடம் விளக்கி கூறி, உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரிக்க வேண்டும் என்று கூறினார். பின்னர் அவர், பொதுமக்களுக்கு தையல் எந்திரம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மாநில பொதுக்குழு உறுப்பினர் சொர்ணகுமார், ஒன்றிய செயலாளர்கள் ரவி, ஜோசப், பார்த்தீபன், ஒன்றிய துணை செயலாளர் வாழவள்ளான், நட்டாத்தி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பண்டாரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக உடன்குடி அருகே மணப்பாடு திருச்சிலுவை ஆலயம் முன்பு கனிமொழி எம்.பி. தனது பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.9 லட்சம் செலவில் உயர்கோபுர மின்விளக்கு அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார்.

வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

ஸ்ரீவைகுண்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அரசாணை வெளியிட வேண்டும்” ஏறுதழுவுதல் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தல்


“ஸ்ரீவைகுண்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அரசாணை வெளியிட வேண்டும்” ஏறுதழுவுதல் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தல்
ஸ்ரீவைகுண்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அரசாணை வெளியிட வேண்டும் என்று கலெக்டரிடம், ஏறுதழுவுதல் பாதுகாப்பு இயக்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.அப்போது தூத்துக்குடி மாவட்ட தமிழ்புலிகள் கட்சி சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், ‘தூத்துக்குடி தாலுகா தெற்கு சிலுக்கன்பட்டி கிராமத்தில் 40 அருந்ததியர் குடும்பங்கள் உள்ளன. தற்போது இந்த பகுதியில் கழிவுநீரை தேக்கி வைக்க திட்டம் வகுக்கப்பட்டு உள்ளதாகவும், குப்பை மேடு அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிகிறது. இதனால் சுகாதார கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அதனை தடுத்து நிறுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.
இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் செல்வசுந்தர் கொடுத்த மனுவில், ‘தூத்துக்குடி சிவன் கோவிலில் தேர் இழுத்து வரும் வீதியாக குறிப்பிட்ட சில வீதிகள் உள்ளன. அதில் ஜக்கம்மாள் கோவில் தெருவும் ஒன்று. தற்போது கோவிலில் உழவார பணிகள் நடந்து வருகிறது. கோவில் பணி நடைபெற்று வரும் பகுதியில் ஜக்கம்மாள் கோவில் தெருவை சேர்ந்த 3 பேர், பசுமை வீடு அனுமதி வாங்கி கோவிலின் ரத வீதியில் பசுமை வீட்டை கட்டி வருகிறார்கள். இதனால் அந்த வழியாக கோவில் தேர் இழுத்து செல்லும் போது சிரமம் ஏற்படும். கோவில் தேர் செல்ல இடையூறாக இருக்கும் கட்டிடங்களை நீக்க வேண்டும்’ என்று கூறி இருந்தார்.

ஏறு தழுவுதல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜா மற்றும் பலர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என பல ஆண்டுகளாக பொதுமக்கள், பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 13 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்கள் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடமாக அரசு அறிவிக்கப்படாத காலம் இருந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்தவும், இந்த ஆண்டு ஈரோடு மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்தவும் அரசு அனுமதி வழங்கி உள்ளது.அதே போல் பாரம்பரிய கலாசாரத்தை பாதுகாக்க தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அரசாணை வெளியிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த திருநங்கைகள் பலர் நேற்று காலையில் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுக்க வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அனைவரையும் உள்ளே அனுப்ப மறுத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த திருநங்கைகள் 10-க்கும் மேற்பட்டவர்கள், கலெக்டர் அலுவலகம்முன்பு நெல்லை- தூத்துக்குடி சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், கடந்த 10 ஆண்டுகளாக இலவச பட்டா, வேலை வாய்ப்பு கேட்டு தொடர்ந்து மனு கொடுத்து வருகிறோம். எங்களுக்கு இதுவரை வேலை வாய்ப்பும், வீட்டுமனை பட்டாவும் வழங்கப்படவில்லை. எங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேலைவாய்ப்பும், வீட்டுமனை பட்டாவும் வழங்க வேண்டும் என்று கூறினர். அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டுவிட்டு மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனுவை கொடுத்தனர். திருநங்கைகளின் திடீர் சாலை மறியல் போராட்டத்தால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.



ஏரல் அருகே மயானத்துக்கு செல்ல பாலம் இல்லை: இறந்தவர் உடலை தோளில் சுமந்து வாய்க்காலை கடக்கும் கிராம மக்கள் சாலைமறியலால் பரபரப்பு


ஏரல் அருகே மயானத்துக்கு செல்ல பாலம் இல்லை: இறந்தவர் உடலை தோளில் சுமந்து வாய்க்காலை கடக்கும் கிராம மக்கள் சாலைமறியலால் பரபரப்பு
ஏரல் அருகே மயானத்துக்கு செல்ல பாலம் இல்லாததால், இறந்தவரின் உடலை தோளில் சுமந்து வாய்க்காலை கிராம மக்கள் கடந்து சென்றனர். அங்கு வாய்க்காலின் குறுக்கே பாலம் அமைக்க வலியுறுத்தி, சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஏரல்,

தூத்துக்குடி மாவட்டம் ஏரலை அடுத்த சிறுத்தொண்டநல்லூர் பஞ்சாயத்து காமராஜநல்லூர் பகுதி மக்கள், தங்களது மயானத்துக்கு செல்லும் வழியில் உள்ள பெருங்குளம் மறுகால் வாய்க்காலின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அங்கு பாலம் அமைக்கப்படவில்லை.


இதனால் அப்பகுதியில் யாரேனும் இறந்தால், அவரது உடலை வாய்க்கால் தண்ணீரின் வழியாக சுமந்து சென்று, மயானத்தில் அடக்கம் செய்கின்றனர். மழைக்காலத்தில் வாய்க்காலில் தண்ணீர் அதிகமாக செல்லும்போது, இறந்தவரின் உடலை மயானத்தில் அடக்கம் செய்ய பெரிதும் சிரமப்படுகின்றனர்.

இந்த நிலையில் காமராஜநல்லூரைச் சேர்ந்த சித்திரைவேல் மனைவி சொர்ணம் (வயது 70) என்பவர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் இறந்தார். நேற்று மதியம் அவரது உடலை அடக்கம் செய்வதற்காக, இறுதி யாத்திரை வாகனத்தில் வைத்து ஊர்வலமாக கொண்டு சென்றனர்.

ஏரல் மரப்பாலம் பகுதியில் சென்றபோது, பொதுமக்கள் தங்களது மயானத்துக்கு செல்வதற்கு பாலம் அமைத்து தர வேண்டும் என்று வலியுறுத்தி, சொர்ணத்தின் உடல் இருந்த இறுதி யாத்திரை வாகனத்துடன் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

உடனே ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாணி, துணை தாசில்தார் சேகர், வருவாய் ஆய்வாளர் முத்துலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பெருங்குளம் மறுகால் வாய்க்காலின் தெற்கு பகுதியில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளதா?, மயானத்துக்கு செல்வதற்கு மாற்றுப்பாதை உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து சாலைமறியல் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர்.

பின்னர் சொர்ணத்தின் உடலுடன் கூடிய சவப்பெட்டியை பொதுமக்கள் தோளில் சுமந்தவாறு, வாய்க்கால் தண்ணீரை கடந்து சென்று, மயானத்தில் அடக்கம் செய்தனர்.

இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. 


ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...