புதன், 26 ஜூன், 2019

ஏரல் சிவன் கோயில் அருகில் ஆபத்தான மின்கம்பம்



ஏரல், ஜூன் 26: ஏரல் சிவன் கோயில் அருகில் சாலையோரத்தில் ஆபத்தான நிலையில் இருந்த மின்கம்பம் தினகரன் செய்தி எதிரொலியாக மாற்றப்பட்டது. ஏரலில் பஸ்நிலையம் செல்லும் சாலையில் சிவன் கோயில் அருகில் சாக்கடை கால்வாய் ஓரத்தில் தடுப்பு சுவர் இல்லாததனால் விபத்து ஏற்பட்டு வருகிறது. அப்பகுதியில் உள்ள இரும்பிலான மின்கம்பத்தில் வாகனங்கள் மோதி வளைந்து ஆபத்தான நிலையில் இருந்தது. இதுகுறித்து தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது.ஏரல் மின் அலுவலக உதவி பொறியாளர் முஜ்பூர் ரகுமான் உத்தரவின் பேரில் நேற்று போர்மென் பாலசுந்தர், மின்பாக ஆய்வாளர்கள் ஜெயசங்கர், பரமசிவம், கம்பியாளர்கள் வடிவேல், அக்னிமுத்து, சவுந்தர், செல்லத்துரை, உதவியாளர் சாமுவேல் ஆகியோர் ஆபத்தான மின்கம்பத்தை மாற்றி, புதிய மின்கம்பம் நட்டினர். இதேபோல் அரசும் நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாய் ஓரத்தில் தடுப்புச்சுவர் அமைத்து விபத்து ஏற்பட்டு வருவதை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதன், 12 ஜூன், 2019

ஏரல் தாலுகா வாழவல்லானிலும் அம்மா திட்ட முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்
தூத்துக்குடி மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:–

அம்மா திட்ட முகாம் அனைத்து கிராமங்களிலும் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்க தமிழக அரசு, அம்மா திட்ட சிறப்பு முகாமை வாரம் தோறும் வெள்ளிக்கிழமைகளில் அந்தந்த தாசில்தார்கள் தலைமையில் நடத்தி வருகிறது. இந்த வாரத்துக்கான முகாம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

அதன்படி தூத்துக்குடி தாலுகா சங்கரப்பேரி, புலிப்பாஞ்சான்குளம் கிராமத்திலும், ஸ்ரீவைகுண்டம் தாலுகா ஸ்ரீமூலக்கரை கிராமத்திலும், திருச்செந்தூர் தாலுகா உடன்குடியிலும், சாத்தான்குளம் தாலுகா பழங்குளத்திலும், கோவில்பட்டி தாலுகா கோவில்பட்டியிலும், விளாத்திகுளம் தாலுகா ஜமீன்செங்கல்படை கிராமத்திலும், எட்டயபுரம் தாலுகா சோழபுரத்திலும், ஓட்டப்பிடாரம் தாலுகா காட்டுநாயக்கன்பட்டியிலும், கயத்தாறு தாலுகா சரவணாபுரம் கிராமத்திலும், ஏரல் தாலுகா வாழவல்லானிலும் முகாம் நடக்கிறது.

கோரிக்கை மனுக்கள் 

இந்த முகாம்களில் மக்கள் குறைகளை தீர்க்கும் வகையில் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு–இறப்பு சான்றுகள், சாதிச்சான்றுகள் மற்றும் வருவாய் துறையினரால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு உடனடியாக நிறைவேற்றப்பட உள்ளன. எனவே மக்கள் இந்த முகாம்களில் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 






செவ்வாய், 11 ஜூன், 2019

ஏரல்- மங்கலகுறிச்சி சாலையில் வடகால் வாய்க்கால் கரையோர பள்ளத்தால் விபத்து அபாயம்



ஏரல்,  ஜூன் 11:  ஏரல்- மங்களகுறிச்சி சாலையில் வடகால் வாய்க்கால் கரையோரம் பராமரிப்பின்றி உருவான ராட்சத பள்ளத்தால் விபத்து  அபாயம் நிலவுகிறது. ஏரலில்  இருந்து மங்கலகுறிச்சி செல்லும் சாலையில் வடிகால் மடை அருகே சாலையோரத்தில் வைகுண்டம் வடகால் வாய்க்காலில் மக்கள் குளிப்பதற்காக  அமைக்கப்பட்டுள்ள பாதையில் மண் அரிப்பு ஏற்பட்டதோடு சாலையோரத்தில் ராட்சத பள்ளமும்  உருவானது. இச்சாலையில் ஏரலில் இருந்து வைகுண்டம், நெல்லை, பெருங்குளம், பண்டாரவிளை, சாயர்புரம் வழியாக தூத்துக்குடிக்கும்  ஏராளமான அளவில் வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் மங்கலகுறிச்சி, மேல மங்கலகுறிச்சி,  மங்களாபுரம், பெருங்குளம் உட்பட பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட  மாணவ, மாணவிகள் ஏரல் பள்ளி மற்றும் மகளிர் பள்ளியில் படித்து வருகின்றனர்.  இவர்கள் அனைவரும் சைக்கிளில் இந்த சாலை வழியாகத்தான் சென்று வருகின்றனர். அத்துடன் இந்த சாலையோரங்களில் உள்ள விளை நிலங்களுக்கு விவசாயிகளும் விவசாய பணிகளுக்கு  சென்றுவர வேண்டியுள்ளது.

 இவ்வாறு போக்குவரத்திற்கு பஞ்சமில்லா இச்சாலையில் வடகால் வாய்க்கால் கரையோரம் பராமரிப்பின்றி உருவான ராட்சத பள்ளத்தால் விபத்து அபாயம் நிலவுகிறது. குறிப்பாக இச்சாலையில் செல்லும் வாகனஓட்டிகள் எதிரே வரும் கனரக வாகனங்களுக்கு  வழிவிடும்போது இந்த ராட்சத பள்ளத்தில் விழுந்து விபத்துக்கு உள்ளாகின்றனர். அத்துடன் சாலையோரத்தில் மின்விளக்கு வசதி இல்லாததால் இரவு இருண் மண்டுகிறது. அவ்வேளையில் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் சாலையோரத்தில் இறங்கும்  போது இந்த ராட்சத பள்ளம் இருப்பது தெரியாமல் விழுந்து பலத்த காயமடைகின்றனர்.
 எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவிஷயத்தில் இனியாவது தனிக்கவனம் செலுத்தி ராட்சத பள்ளத்தில் அதில் லாரிகளில் மணல் கொண்டு வந்து கொட்டி  சாலையோரத்தை அகலப்படுத்துவதுடன், அங்கு தடுப்புச் சுவர்  அல்லது தடுப்பு கம்பிகள் அமைக்க முன்வரவேண்டும். இதேபோல் இந்த சாலையில்  ஓரத்தில் கோட்டைகாடு விலக்கு அருகிலும் வயலுக்கு தண்ணீர் செல்லும்  வாய்க்கால் கரையோரத்திலும் உள்ள மெகா பள்ளம் ஏற்பட்டுள்ள இடத்திலும்  தடுப்பு கம்பிகள் அமைக்க வேண்டும். இதுவே வாகன ஓட்டிகள் உள்ளிட்ட அனைவரது எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

ஏரல் அருகேபறவைகள் மீது பரிவு காட்டும் இளைஞர்கள்மரங்கள் தோறும் பாட்டிலில் தண்ணீர் ஊற்றி வைக்கின்றனர்

ஏரல் அருகேபறவைகள் மீது பரிவு காட்டும் இளைஞர்கள்மரங்கள் தோறும் பாட்டிலில் தண்ணீர் ஊற்றி வைக்கின்றனர்
ஏரல் அருகே பறவைகள் மீது இளைஞர்கள் பரிவு காட்டி வருகிறார்கள். மரங்கள் தோறும் பாட்டிலில் தண்ணீர் ஊற்றி வைக்கின்றனர்.
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள மேலமங்கலகுறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் வீரமுத்துராஜ். என்ஜினீயரிங் படித்து வரும் இவர் கோடை வெயிலில் தவிக்கும் பறவைகள், விலங்குகளுக்கு தண்ணீர் கிடைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். இந்த பணிக்காக அந்த பகுதி சிறுவர்கள், இளைஞர்களை ஒருங்கிணைத்து உள்ளார். அந்த பகுதியை சேர்ந்த 8 பேர் இணைந்தனர். அவர்கள் தேவையில்லாத காலி பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்தனர். அந்த பாட்டில்களை தண்ணீர் ஊற்றி வைக்கும் பாத்திரமாக மாற்றினர். அந்த பகுதிகளில் உள்ள மரங்களில் பாட்டில்களை கட்டி வைத்து தண்ணீரை ஊற்றத் தொடங்கினர்

இதுபோன்ற அந்த பகுதியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட மரங்களில் பாட்டில்களை கட்டி வைத்து தண்ணீர் ஊற்றி உள்ளனர். இந்த தண்ணீரை குருவிகள், காக்கைகள் உள்ளிட்ட பறவைகள் குடித்து செல்கின்றன. தினந்தோறும் இளைஞர்கள் மரங்களில் உள்ள பாட்டில்களில் தண்ணீர் ஊற்றி பறவைகள் மீது பரிவு காட்டி வருகின்றனர். இதுகுறித்து வீரமுத்துராஜ் கூறும் போது, கோடை காலத்தில் விலங்குகள், பறவைகள் தண்ணீருக்காக அலைந்து திரியும் நிலையை பார்த்தேன். இதனால் அந்த உயிரினங்களுக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்பதற்காக எங்கள் ஊர் இளைஞர்களுடன் சேர்ந்து மரங்களில் பழைய காலி பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலம் தண்ணீர் வைக்கத் தொடங்கினோம். அதற்கு நல்ல பலன் கிடைத்து உள்ளது. ஏராளமான பறவைகள், அணில்கள் தண்ணீரை குடித்து செல்வதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. இதற்கு எங்கள் வீட்டிலும் ஒத்துழைப்பு தருகின்றனர்.

இதேபோன்று அனைவரும் முடிந்த அளவுக்கு பறவைகளுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்று கூறினார்.

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...