திங்கள், 20 ஆகஸ்ட், 2018

#Hajj2018 Live HD | الحج 1439 هـ البث المباشر | Pilgrimage to Makkah Eid...

தூத்துக்குடி மாவட்டத்தில் 50 சதவீதம் குளங்கள் நிரம்பி உள்ளன



தூத்துக்குடி மாவட்டத்தில் 50 சதவீதம் குளங்கள் நிரம்பி உள்ளன
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குளங்களில் 50 சதவீதம் குளங்கள் நிரம்பி உள்ளன என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
தூத்துக்குடி, 

இதுகுறித்து அவர் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவுப்படி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ரசாயன பொருட்கள் அகற்றும் பணி நிறுத்தப்பட்டது. அதேபோன்று நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஆலை கமிட்டியின் பிரதிநிதிக்கு அனுமதி அளிக்குமாறு கூறப்பட்டு இருந்தது. அதன்படி ஸ்டெர்லைட் ஆலையின் பிரதிநிதியை மாவட்ட கண்காணிப்பு குழுவில் ஏற்கனவே சேர்த்து உள்ளோம். அவர் நிர்வாக பணிகளை மேற்கொள்வதற்கு, அனுமதி அளிக்க தயாராக இருக்கிறோம்.
துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டு உள்ளது. ஆனால் சி.பி.ஐ. விசாரணை தொடர்பாக எந்தவித தகவல்களும் வரவில்லை.

தாமிரபரணி ஆற்றில் கடந்த சில நாட்களாக 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேறியது. தூத்துக்குடி மாவட்டத்தில் 4 கால்வாய் உள்ளன. இந்த கால்வாய்களில் 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் எடுக்க முடியும். அதன் மூலம் 53 குளங்களையும் நிரப்பி வருகிறோம். தற்போது 50 சதவீதம் குளங்கள் நிரம்பி உள்ளன. இதே போன்று 15 நாட்கள் தொடர்ந்து தண்ணீர் வந்தால் அனைத்து குளங்களும் நிரம்பி விடும். வெள்ளம் பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்து கால்வாய்களும் தூர்வாரப்பட்டு உள்ளன. கோரம்பள்ளம் குளம் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. அங்கும் அதிக அளவில் தண்ணீர் சேகரிக்கப்படும்.

கேரளாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. இதுவரை 10 லாரிகளில் ரூ.1 கோடியே 3 லட்சம் மதிப்பிலான பொருட்களை அனுப்பி உள்ளோம். மேலும் முகாமில் இருந்து வீடு திரும்பும் மக்களுக்கு தேவையான பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்குவதற்கான பணி தருவை மைதானத்தில் நடந்து வருகிறது. அந்த பொருட்களும் விரைவில் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஸ்ரீவைகுண்டம் வடகால் மூலம் பாசன வசதி பெறும் குளங்களில் ஆறுமுகமங்கலம், பேய்க்குளம் நிரம்பியது. தொடர்ந்து தூத்துக்குடி புதுக்கோட்டை அருகே உள்ள குலையன்கரிசல் குளத்துக்கு தண்ணீர் செல்கிறது. அந்த குளம் நிரம்பிய பின்னர் தூத்துக்குடி கோரம்பள்ளம் குளத்துக்கு தண்ணீர் செல்லும். ஸ்ரீவைகுண்டம் தென்கால் மூலம் பாசன வசதி பெறும் குளங்களில் தென்திருப்பேரை கடம்பாகுளம் முதல் திருச்செந்தூர் எல்லப்பநாயக்கன்குளம் வரையிலான குளங்களுக்கு தண்ணீர் வந்த வண்ணம் உள்ளது. எல்லப்பநாயக்கன்குளத்தில் குறைந்த அளவே தண்ணீர் உள்ளது.

மருதூர் மேலக்கால் மூலம் பாசன வசதி பெறும் குளங்களில் வெள்ளூர் குளத்தில் இருந்து செம்பூர் பெரிய குளத்துக்கு தண்ணீர் செல்கிறது. இந்த குளம் நிரம்பினால்தான் சடையநேரிகுளம், புத்தன்தருவை குளத்துக்கு தண்ணீர் செல்லும். 

ஏரல் தரைமட்ட பாலம் மீண்டும் அரித்து செல்லப்பட்டது



ஏரல் தரைமட்ட பாலம் மீண்டும் அரித்து செல்லப்பட்டது
தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், ஏரல் தரைமட்ட பாலம் மீண்டும் அரித்து செல்லப்பட்டது.
ஏரல், 

நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையால் பெரும்பாலான அணைகள் நிரம்பின. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணையான ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையை தாண்டி விழுந்து ஆர்ப்பரித்து செல்லும் தண்ணீரானது ஏரல், ஆத்தூர் வழியாக புன்னக்காயல் கடலில் சங்கமிக்கிறது.

ஏரலில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே பழமைவாய்ந்த தரைமட்ட தாம்போதி பாலம் உள்ளது. கடந்த 2015, 2016-ம் ஆண்டுகளில் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், ஏரல் தரைமட்ட தாம்போதி பாலத்தின் நடுவில் அரித்து செல்லப்பட்டது. வெள்ளம் வடிந்த பின்னர், பாலம் அரித்து செல்லப்பட்ட இடத்தில் ஜல்லி கற்கள் மற்றும் சரள் மண்ணை நிரப்பி சீரமைத்தனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஏரல் தரைமட்ட தாம்போதி பாலத்தை வெள்ளம் மூழ்கடித்து சென்றது. இதனால் அதன் அருகில் உள்ள உயர்மட்ட பாலத்தின் வழியாகவே அனைத்து வாகனங்களும் செல்கின்றன. ஆற்றில் தண்ணீரின் அளவு சற்று குறைவாக சென்றது. அப்போது தரைமட்ட பாலத்தில் ஏற்கனவே சேதம் அடைந்த பகுதி மீண்டும் வெள்ளத்தில் அரித்து செல்லப்பட்டது தெரிய வந்தது. எனவே ஏரல் தரைமட்ட தாம்போதி பாலத்தில் வெள்ளம் அரித்து சென்ற பகுதியை காங்கிரீட் கலவையால் முறையாக சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர். 

ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2018

ஏரல் அருகே தாமிரபரணி ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாலிபர்



தாமிரபரணி ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாலிபர்
ஏரல் அருகே தாமிரபரணி ஆற்று வெள்ளத்தில் வாலிபர் அடித்து செல்லப்பட்டார்.
ஏரல், 


தூத்துக்குடி மாவட்டம் வடக்கு ஆத்தூர் பரதர் தெருவை சேர்ந்தவர் ஜான். இவருடைய மகன் ராகேஷ் (வயது 21). இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று மதியம் தனது நண்பர்களான சென்னையை சேர்ந்த அன்பு (28), ஆத்தூரை சேர்ந்த ஜெராசின் (24) ஆகியோருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டார். அவர்கள் 3 பேரும் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தை பார்ப்பதற்காக சொக்கப்பழகரைக்கு வந்தனர். பின்னர் 3 பேரும் அங்கு உள்ள தடுப்பணையின் மேல் பகுதியில் தண்ணீரில் இறங்கினர். அப்போது எதிர்பாராத விதமாக ராகேசை தண்ணீர் அடித்து சென்றது. இதில் நிலை தடுமாறிய அவர் தடுப்பணையின் கீழ் பகுதிக்கு சென்று ஆற்றின் நடுவில் உள்ள ஒரு கருவேல மரத்தை பிடித்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாணி, சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அவர்கள் ராகேசை மீட்க ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து ராகேசை மீட்க முயன்றனர். ஆனால் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் அவர்களால் தண்ணீரில் இறங்க முடியவில்லை. இதனையடுத்து புன்னகாயல் பகுதியில் இருந்து படகு கொண்டு வர முடிவு எடுக்கப்பட்டது.

இந்த நிலையில் சுமார் 3 மணி நேரம் தண்ணீரில் கருவேல மரத்தை பிடித்து கொண்டு போராடிய அந்த வாலிபர் ஒரு வழியாக ஆற்றை நீந்தி கடந்து வாழவல்லான் கரைக்கு திரும்பினார்.

இதனையடுத்து போலீசார், ராகேசிடம் அறிவுரை கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

ஏரலில் சர்வ கட்சியினர் மவுன ஊர்வலம் வாஜ்பாய் மறைவையொட்டி





ஏரல், ஆக.19: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி ஏரலில் சர்வ கட்சியினர் மற்றும் வியாபாரிகள் மவுன ஊர்வலம் நடத்தினர். 
இதில் பாஜ மாவட்ட அமைப்பு சாரா செயலாளர் முத்துமாலை, முன்னாள் விவசாய அணி அமைப்பாளர் கருப்பசாமி, நகர தலைவர் பரமசிவன், பொது செயலாளர் வெங்கடேஷ், ஒன்றிய செயலாளர் செந்தில், பொருளாளர் சந்திரசேகர், இளைஞரணி தலைவர் சுரேஷ் உட்பட நிர்வாகிகளும், அதிமுக நகர செயலாளர் ஆத்திப்பழம், பேச்சாளர் லில்லிராஜ், முன்னாள் கவுன்சிலர்கள் சிவக்குமார், அசோக்குமார் மற்றும் காளிமுத்து, நவநீதன், திமுக சார்பில் வைகுண்டம் கிழக்கு ஒன்றிய செயலாளர் பிஜி.ரவி, ஏரல் நகர செயலாளர் பார்த்திபன், ஏரல் முன்னாள் பேரூராட்சி தலைவர் பாலகிருஷ்ணன், முன்னாள் துணைத்தலைவர் மணிவண்ணன், மாவட்ட பிரதிநிதி செந்தில் ஆறுமுகம், கார்த்தீசன், அமமுக சார்பில் ஏரல் ரமேஷ், சமக துணை செயலாளர் மாரியப்பன், சமூக ஆர்வலர் ஜெயபாலன், ஏரல் வியாபாரிகள் சங்கம் பொருளாளர் வில்சன் வெள்ளையா உட்பட சர்வா கட்சி பிரமுகர்கள் மற்றும் வியாபாரிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

சனி, 18 ஆகஸ்ட், 2018

ஏரல்!--தூத்துக்குடி மாவட்டத்தின் 10வது தாலுகாவானது ஏரல்! - கோரிக்கை நிறைவேறிய மகிழ்ச்சியில் மக்கள்

தூத்துக்குடி மாவட்டத்தின் 10 வது புதிய தாலுகாவாக ஏரல் அறிவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்ட நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி காணொலிக்காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார். ஏரலில் தற்காலிகத் தாலுகா அலுவலத்தை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி திறந்து வைத்தார். 
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டியை அடுத்து 3-வது பெரிய வணிக நகரமாக விளங்கி வருகிறது ஏரல் பேரூராட்சி. இங்கு, சில்வர் பாத்திரங்கள், பித்தளைப் பொருள்கள், ஜவுளிகள், தங்கநகைகள், வெள்ளிப் பொருள்கள் உட்பட 1,000-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. வியாபாரத்துக்காக ஏரலைச் சுற்றிலும் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தினசரி ஏரலுக்கு வந்து செல்கின்றனர். இந்தப் பெரிய நகரைச் சுற்றி உள்ள 40-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தாலுகா அலுவலகத்துக்காக, 20 கி.மீ தொலைவில் உள்ள ஸ்ரீவைகுண்டம் மற்றும் திருச்செந்துாருக்கும் செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது. இதனால், அப்பகுதி மக்கள், பல்வேறு சிக்களுக்கு உள்ளாவதுடன், ஒருநாள் முழுவதும் செலவிடும் நிலை இருந்தது. மக்களின் சிரமத்தைப் போக்கும் வகையில் ஏரல் சுற்றுவட்டாரப்பகுதி, ஏரலை தலைமையிடமாகக் கொண்டு தனித் தாலுகாவாக அரசு அறிவிக்க வேண்டும் என இப்பகுதி வியாபாரிகள், அனைத்துக் கட்சித்தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். 
இந்நிலையில், தூத்துக்குடியில் கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் தூத்துக்குடி மாவட்டத்தின் 10-வது தாலுகாவாக, ஏரலை தலைமையிடமாகக் கொண்டு தனித் தாலுகா அறிவிக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி, கடந்த மாதம் ஏரலை தனித் தாலுகாவாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டது. இந்நிலையில், ஏரல் தாலுகாவாக அறிவிக்கும் விழா கடந்த 1-ம் தேதி நடப்பதாக திட்டமிடப்பட்டு அறிவிக்கப்பட்டது. அன்று, திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ மறைவால், அந்த விழா ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து, தி.மு.க தலைவர் கருணாநிதியின் இறப்பையொட்டி 7 நாள்கள் துக்கம் அனுசரிப்பதாக அரசு அறிவித்தது.
இந்நிலையில், அரசு அறிவித்த துக்கம் முடிவடைந்த நிலையில், இன்று துாத்துக்குடி மாவட்டத்தின் 10-வது புதிய தாலுகாவாக ஏரல் தனித் தாலுகாவாக அறிவிக்கப்பட்டது. சென்னை தலைமைச் செயககத்தில் முதல்வர் பழனிசாமி காணொலிக் காட்சி  மூலம் இதைத் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து ஏரல் தற்காலிகத் தாலுகா அலுவலகத்தை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி திறந்து வைத்தார். 
ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் இருந்த ஆறுமுகமங்கலம் குறுவட்டத்தில் உள்ள 17 வருவாய் கிராமங்கள், பெருங்குளம் குறுவட்டத்தில் உள்ள 11 வருவாய் கிராமங்கள் மற்றும் திருச்செந்தூர் தாலுகாவில் இருந்த  ஆழ்வார்திருநகரி குறுவட்டத்தில் 17 வருவாய் கிராமங்கள் என மூன்று குறுவட்டத்தில் உள்ள  45  வருவாய் கிராமங்கள் உள்ளடக்கி ஏரல் தனித் தாலுகாவாக உருவாக்கப்பட்டு தொடங்கப்பட்டுள்ளது.இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறியதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

ஏரல் அருகே பெட்டிக்கடையில்இளம்பெண்ணிடம் நகை பறிப்பு



பெட்டிக்கடையில் இளம்பெண்ணிடம் நகை பறிப்பு
ஏரல் அருகே பெட்டிக்கடையில் பொருட்கள் வாங்குவது போல் நடித்து இளம்பெண்ணிடம் ஒரு பவுன் சங்கிலியை பறித்து சென்ற 2 மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
ஏரல், 


ஏரல் அருகே கணபதிசமுத்திரம் புது தெருவைச் சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 61). இவர் தனது வீட்டின் முன்பு பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் காலையில் தனது கடைக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக ஏரலுக்கு சென்றார். அப்போது அவருடைய மகள் பேச்சியம்மாள் (21) பெட்டிக்கடையை கவனித்து கொண்டார்.

அப்போது அங்கு முகத்தை கைக்குட்டையை வைத்து மறைத்தவாறு 2 மர்மநபர்கள் வந்தனர். அவர்களில் ஒருவர், கடையில் பொருட்கள் வாங்குவது போன்று பேச்சியம்மாளிடம் நைசாக பேச்சு கொடுத்தார். அப்போது அந்த நபர் திடீரென்று பேச்சியம்மாளின் கழுத்தில் கிடந்த ஒரு பவுன் தங்க சங்கிலியை பறித்தார். அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டார். அவருடைய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு கடைக்கு வருவதற்குள், நகையை பறித்தவர் உள்பட 2 மர்ம நபர்களும் அங்கிருந்து மின்னல் வேகத்தில் ஓடி தப்பி விட்டனர். இதுகுறித்து ஏரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இளம்பெண்ணிடம் நகை பறித்தவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

பெட்டிக்கடையில் இருந்த இளம்பெண்ணிடம் துணிகரமாக மர்ம நபர்கள் சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தூத்துக்குடி விமான நிலைய கட்டிடம் விரைவில் விரிவாக்கம்


தூத்துக்குடி விமான நிலைய கட்டிடம் விரைவில் விரிவாக்கம்
தூத்துக்குடி விமான நிலைய கட்டிடம் விரைவில் விரிவாக்கம் செய்யப்படும் என்று விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி, 


தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தில் சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், தூத்துக்குடி விமான நிலையம் விரிவாக்கத்துக்கான நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலத்துக்கு விரைவில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட உள்ளது. அதே போன்று தூத்துக்குடி விமான நிலையத்துக்கு தினமும் 6 விமானங்கள் வந்து செல்கின்றன. இதனால் பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது.

தற்போது 1,100 சதுர மீட்டர் பரப்பில் விமான நிலைய கட்டிடம் அமைந்து உள்ளது. இந்த கட்டிடம் பயணிகளின் வசதிக்காக 2 ஆயிரத்து 150 சதுர மீட்டராக விரிவாக்கம் செய்ய விமான நிலைய ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. விரைவில் விரிவாக்கப் பணிகள் தொடங்க உள்ளன என்று தெரிவித்தார்.
தொடர்ந்து விழாவையொட்டி விமான நிலைய ஊழியர்கள், விமான நிறுவன ஊழியர்கள், போலீசாருக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில் விமான நிலைய உதவி இயக்குனர் கார்த்திகேயன், மேலாளர் ஜெயராமன் மற்றும் விமான நிறுவன ஊழியர்கள், போலீசார் கலந்து கொண்டனர். 

தாமிரபரணி வெள்ளத்தால் தூத்துக்குடி மாவட்டத்திற்கு


தாமிரபரணி வெள்ளத்தால் தூத்துக்குடி மாவட்டத்திற்கு பாதிப்பு இல்லை
தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிப்பு இல்லை என்று மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
ஸ்ரீவைகுண்டம், 


நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக, அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணையான ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையை கடந்து வினாடிக்கு சுமார் 12 ஆயிரம் கன அடி தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது.

இந்த நிலையில் மாவட்ட பேரிடர் கண்காணிப்பு அலுவலர் குமார் ஜெயந்த், மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி மற்றும் அதிகாரிகள் நேற்று மாலையில் வல்லநாடு அருகே உள்ள மருதூர் தடுப்பணை மற்றும் ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களிடம் கூறியதாவது:-

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையால் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. பாபநாசம் அணையில் இருந்து வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் தாமிரபரணி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மருதூர் அணையில் இருந்து மேலக்கால், கீழக்கால் மூலமும், ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து வடகால், தென்கால் மூலமும் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

இந்த 4 கால்வாய்களில் உள்ள 53 குளங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. அவற்றின் வழியாக மொத்தம் 5 ஆயிரம் கன அடி தண்ணீர் செல்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை. வெள்ள பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக, தூத்துக்குடி உதவி கலெக்டர் பிரசாந்த் தலைமையில், பொதுப்பணித்துறையினர், வருவாய்துறையினர், தீயணைப்பு துறையினர் ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அவருடன் தூத்துக்குடி உதவி கலெக்டர் பிரசாந்த், ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் சந்திரன், வருவாய் ஆய்வாளர் பாண்டியராஜன் மற்றும் பலர் உடன் இருந்தனர். 

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...