புதன், 5 டிசம்பர், 2018

ஏரல் அருகே பேட்மாநகரம் - பாம்பு கடித்து மாணவி சாவு


ஸ்ரீவைகுண்டம் அருகே
பாம்பு கடித்து மாணவி சாவு
ஸ்ரீவைகுண்டம் அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த பள்ளி மாணவி பாம்பு கடித்து இறந்து போனார்.
ஸ்ரீவைகுண்டம், 

ஸ்ரீவைகுண்டம் அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த பள்ளி மாணவி பாம்பு கடித்து இறந்து போனார்.

பள்ளி மாணவி

ஸ்ரீவைகுண்டம் அருகே பேட்மாநகரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் காஜா முகைதீன். இவர் நெல்லையில் உள்ள ஓட்டலில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி பரகத் நிஷா. இவர்களுக்கு ரமலத் ஹமிதா (வயது 13) என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். அங்குள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் ரமலத் ஹமிதா 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் பரகத் நிஷாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. எனவே அவர் கடந்த சில நாட்களாக தன்னுடைய குழந்தைகளுடன் நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உள்ள தன்னுடைய பெற்றோரின் வீட்டில் தங்கியிருந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

பின்னர் நேற்று முன்தினம் மதியம் அவர் தன்னுடைய குழந்தைகளுடன் பேட்மாநகரத்தில் உள்ள தனது வீட்டுக்கு வந்தார்.

பாம்பு கடித்தது

அங்கு இரவில் அனைவரும் தூங்கினர். அப்போது நள்ளிரவில் ரமலத் ஹமிதாவின் காலில் பாம்பு கடித்தது. இதனால் அவர் அலறியவாறு கண் விழித்தார். உடனே குடும்பத்தினர் அனைவரும் கண் விழித்து மின் விளக்கை எரிய செய்தனர். ஆனால் அதற்குள் பாம்பு வெளியே தப்பி சென்றது. உடனே அவரை ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்.

பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




வெள்ளி, 30 நவம்பர், 2018

ஏரல் அருகே சொத்து தகராறில் பெண்ணுக்கு கத்திக்குத்து 2 பேர் கைது


ஏரல் அருகே சொத்து தகராறில் பெண்ணுக்கு கத்திக்குத்து 2 பேர் கைது
ஏரல் அருகே சொத்து தகராறில் பெண்ணுக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஏரல், 

ஏரல் அருகே சொத்து தகராறில் பெண்ணுக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மெடிக்கல் கடை உரிமையாளர் 

ஏரல் அருகே வாழவல்லான் மேலூரைச் சேர்ந்தவர் தனுஷ்கோடி. இவருடைய மகன் கணேசன் (வயது 39). இவர் ஏரல் பஸ் நிலையத்தில் மெடிக்கல் கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ராஜபூ (36).

ஏரல் ஓடக்கரை தெருவைச் சேர்ந்தவர் மகேசுவரன் (51). இவர் கணேசனின் அக்காளை திருமணம் செய்துள்ளார். மகேசுவரன், கணேசனிடம் தன்னுடைய மனைவிக்குரிய சொத்துகளை பிரித்து தருமாறு கூறி தகராறு செய்து வந்தார்.

கத்திக்குத்து 

நேற்று முன்தினம் மதியம் ராஜபூ தனது மொபட்டில் வாழவல்லான் நான்கு முக்கு பகுதியில் சென்றார். அப்போது அங்கு ஆட்டோவில் வந்த மகேசுவரன், ராஜபூவை வழிமறித்து அவதூறாக பேசி தகராறு செய்தார். அப்போது ஆட்டோ டிரைவரான ஏரல் அருகே சூழைவாய்க்கால் 4–வது தெருவைச் சேர்ந்த பதுருதீன் மகன் ஆசிக் அலி (31) கத்தியால் ராஜபூவை சரமாரியாக குத்தினார்.

இதில் பலத்த காயம் அடைந்த ராஜபூவை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பத்மகுமாரி வழக்குப்பதிவு செய்து, மகேசுவரன், ஆசிக் அலி ஆகிய 2 பேரையும் கைது செய்தார். மகேசுவரனுக்கு சொந்தமான ஆட்டோவை ஆசிக் அலி ஓட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 27 நவம்பர், 2018

ஏரல் அருகே கொல்லப்பட்ட ரவுடியின் நண்பரும் படுகொலை ஒரே நாளில் தீர்த்துக்கட்டியது அம்பலம்; 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை


ஏரல் அருகே கொல்லப்பட்ட
ரவுடியின் நண்பரும் படுகொலை
ஒரே நாளில் தீர்த்துக்கட்டியது அம்பலம்; 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை
ஏரல் அருகே கொல்லப்பட்ட ரவுடியின் நண்பரும் படுகொலை செய்யப்பட்டார். அவர்கள் இருவரையும் ஒரே நாளில் தீர்த்துக்கட்டியது அம்பலமாகி உள்ளது. இதுதொடர்பாக, 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏரல், 

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பேட்மாநகரம் வீரன் சுந்தரலிங்கம் நகர் நடுத்தெருவைச் சேர்ந்தவர் இசக்கியப்பன். இவருடைய மகன் வினோத் (வயது 28). பிரபல ரவுடியான இவர் கடந்த 24-ந்தேதி இரவில் ஏரல் அருகே மேல மங்களகுறிச்சி தாமிரபரணி ஆற்றங்கரையில் சுடுகாட்டு பகுதியில் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து ஏரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், வினோத் தன்னுடைய நண்பரான ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவில் தெருவைச் சேர்ந்த தனுஷ்கோடியின் (30) மனைவியிடம் தவறாக நடக்க முயன்றதும், இதனை அறிந்த தனுஷ்கோடி தன்னுடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து வினோத்தை கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவான தனுஷ்கோடியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் மேலமங்களகுறிச்சியில் வினோத் கொலை செய்யப்பட்ட சுடுகாட்டு பகுதியின் அருகில் தாமிரபரணி ஆற்றில் நேற்று அதிகாலையில் வாலிபர் ஒருவர் பிணமாக மிதந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது. கழுத்தில் பலத்த வெட்டுக்காயம் இருந்தது.

இதுகுறித்து அப்பகுதியினர் ஏரல் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் விசாரணையில், ஆற்றில் பிணமாக மிதந்த வாலிபர் குரும்பூர் அருகே கல்லாம்பாறையைச் சேர்ந்த துரைராஜ் மகன் ராமச்சந்திரன் (வயது 22) என்பதும், இவர் வினோத், தனுஷ்கோடி ஆகியோரின் நண்பர் என்பதும் தெரியவந்தது.

வினோத், தனுஷ்கோடி, ராமச்சந்திரன் ஆகிய 3 பேரும் எப்போதும் ஒன்றாகவே சுற்றி திரிந்துள்ளனர். இவர்கள் தாமிரபரணி ஆற்றங்கரையில் இரவில் மது அருந்துவது வழக்கம். கடந்த 24-ந்தேதி வினோத் கொலை செய்யப்பட்ட நாளில் இருந்தே ராமச்சந்திரன் மாயமாகி உள்ளார். எனவே, வினோத்தை கொலை செய்தபோதே ராமச்சந்திரனையும் படுகொலை செய்துள்ளனர் என்பது அம்பலமாகி உள்ளது. இதையடுத்து போலீசார் இரட்டை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வினோத், ராமச்சந்திரன் இரட்டை கொலை வழக்கில் கூலிப்படைக்கு தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். தனுஷ்கோடி தன்னுடைய நண்பர்களான வினோத், ராமச்சந்திரன் ஆகிய 2 பேரையும் வழக்கமாக மது அருந்தும் இடத்துக்கு வரவழைத்து, கூலிப்படையை ஏவி, அவர்களை தீர்த்து கட்டி இருக்கலாம். பின்னர் கூலிப்படையினர் அவர்களது உடல்களை தனித்தனியாக வீசிச் சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மேலும் பரபரப்பு தகவலாக தனுஷ்கோடி, வினோத், ராமச்சந்திரன் ஆகியோர் மோட்டார் சைக்கிள்களில் இரவில் அடிக்கடி மணல் கடத்தியதாக கூறப்படுகிறது. எனவே, மணல் கடத்தலில் ஏற்பட்ட தகராறில் இரட்டைக்கொலை நடந்ததா? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். தனுஷ்கோடியை கைது செய்த பின்னரே இந்த இரட்டை கொலை வழக்கில் மேலும் தகவல்கள் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே, இந்த கொலை தொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரவுடியும், அவருடைய நண்பரும் ஒரே நாளில் தீர்த்துக் கட்டப்பட்ட பயங்கர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






திங்கள், 26 நவம்பர், 2018

ஏரல் அருகே கழுத்தை அறுத்து கொல்லப்பட்ட ரவுடியின் நண்பரும் படுகொலை

ஏரல் அருகே கழுத்தை அறுத்து கொல்லப்பட்ட ரவுடியின் நண்பரும் படுகொலை


















ஏரல்:

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பேட்மாநகரம் வீரன் சுந்தரலிங்கம் நகரை சேர்ந்தவர் வினோத் (வயது28). பிரபல ரவுடியான இவர் மீது ஸ்ரீவைகுண்டம், ஏரல் போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. போலீசாரின் ரவுடி பட்டியலிலும் இவர் பெயர் உள்ளது.

இவரும் ஏரல் சேர்மன் கோவில் தெருவை சேர்ந்த தனுஷ்கோடி (30) என்பவரும் நண்பர்கள். தனுஷ்கோடியின் வீட்டிற்கு வினோத் அடிக்கடி செல்வது வழக்கம். ஏற்கனவே ஒரு வழக்கு தொடர்பாக தனுஷ்கோடி சிறையில் இருந்தார். அப்போது அவரது வீட்டிற்கு வினோத் அடிக்கடி சென்றார். அப்போது தனுஷ்கோடியின் மனைவியிடம் அவர் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இதை கணவரிடம் தனுஷ்கோடியின் மனைவி கூறினார். இதனால் வினோத் மீது தனுஷ்கோடி ஆத்திரம் அடைந்தார். மேலும் சிறையில் இருந்து வெளியில் வந்ததும் வினோத்தை கொலை செய்யவும் அவர் திட்டமிட்டார். இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு தனுஷ்கோடி சிறையில் இருந்து வெளியில் வந்தார்.

தனுஷ்கோடி, வினோத் மற்றும் சில ரவுடிகள் சேர்ந்து ஏரல் அருகே உள்ள மங்களகுறிச்சி தாமிரபரணி ஆற்றங்கரையில் மது குடிப்பது வழக்கம். இதேபோல் சம்பவத்தன்று வினோத் அங்கு மது குடித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தனுஷ்கோடி வினோத்தின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பியோடி விட்டார்.

இதுபற்றி தகவல் அறிந்த ஏரல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

வினோத்தின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் நேற்று அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த கொலையில் தனுஷ் கோடியுடன் சேர்ந்து மேலும் சிலரும் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் வினோத் கொலை தொடர்பாக நேற்று முக்கிய கொலையாளிகள் 2 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் வினோத் கொலை செய்யப்பட்ட அன்று அவருடன் சேர்ந்து மது குடித்த வினோத்தின் நெருங்கிய நண்பர் ராமச்சந்திரன் (25) என்பவரையும் கும்பல் கொலை செய்த திடுக்கிடும் தகவல் வெளியானது.

ராமச்சந்திரனின் சொந்த ஊர் குரும்பூர் அருகே உள்ள கள்ளம்பாறை. இவர் எப்போதும் வினோத்துடன் சுற்றி திரிவாராம். சம்பவத்தன்று வினோத்துடன் மது குடித்த போது அவரை கொலை செய்த கும்பல் தடுக்க வந்த ராமச்சந்திரனையும் கொடூரமாக கொன்றுள்ளனர். ராமச்சந்திரன் உடலை அதே பகுதியில் ஆற்றில் அமலை செடிகளுக்கு நடுவே வீசியுள்ளனர்.

இந்த தகவலை பிடிபட்ட 2 பேரும் தெரிவித்தனர். இதையடுத்து ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. சகாய ஜோஸ், ஏரல் இன்ஸ்பெக்டர் பட்டாணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராமச்சந்திரன் உடலை மீட்டனர்.

கொலை நடந்து 3 நாட்களுக்கு மேல் ஆனதால் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. இதைத் தொடர்ந்து ராமச்சந்திரன் உடல் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஒரே நாளில் ரவுடி மற்றும் அவரது நண்பர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஸ்ரீவைகுண்டம், ஏரல், குரும்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமச்சந்திரனின் சொந்த ஊரான கள்ளம்பாறையில் பதட்டம் நிலவுகிறது. இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே வினோத், ராமச்சந்திரன் கொலை தொடர்பாக பிடிபட்ட 2 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த கொலையில் தொடர்புடையவர்கள் யார்? யார்? கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை எங்கே வைத்துள்ளனர்? என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு உரங்களை விற்றால் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை


கூடுதல் விலைக்கு உரங்களை விற்றால் கடும் நடவடிக்கை
விற்பனையாளர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை
தூத்துக்குடி மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு உரங்களை விற்றால் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு உரங்களை விற்றால் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
நாற்றங்கால் தயாரிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் மானாவாரி பகுதியில் சோளம், மக்காச்சோளம், கம்பு, உளுந்து, பாசிப்பயறு, எள், நிலக்கடலை, சூரியகாந்தி மற்றும் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. தாமிரபரணி பாசனப் பகுதிகளில் நெல் நாற்றாங்கால் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த ஆண்டு நல்ல மழை பெய்து உள்ளதாலும், மண்ணில் ஈரப்பதம் இருப்பதாலும், விவசாயிகள் மானாவாரிப் பயிர்களுக்கும் நஞ்சையில் வாழைப் பயிருக்கும் மேலுரமாக யூரியா இட்டு வருகின்றனர். இதைக் கருத்தில் கொண்டு இந்த பருவத்துக்கான உரத்தேவையை கணக்கிட்டு தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் போதுமான உரம் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி தற்போது, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் 750 டன் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் 1422 டன் யூரியா இருப்பு வைக்கப்பட்டு உள்ளது.

நடவடிக்கை

உர விற்பனையாளர்கள் உரக்கட்டுப்பாடு சட்டத்தின்படி தங்களிடம் உள்ள உர இருப்பு மற்றும் விற்பனை விலையை விற்பனை நிலையத்துக்கு முன்பாக விளம்பரப் பலகையில் எழுதி வைக்க வேண்டும். உரங்களை விற்பனை முனைய கருவி மூலமாக பட்டியலிட்டு அந்தந்த உரத்துக்கான கட்டுப்பாட்டு விலையில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டும் நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக் கூடாது. கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்வது தெரிய வந்தால் உரக்கட்டுப்பாடு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பறக்கும்படை

இது தொடர்பாக ஆய்வாளர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்ட போது, விளாத்திகுளம், பேய்க்குளம் ஆகிய இடங்களில் உள்ள 2 உர விற்பனை நிலையங்கள் உரக்கட்டுப்பாட்டு சட்டத்தை மீறி உரம் விற்பனை செய்து இருப்பது தெரியவந்தது. இதனால் 2 விற்பனை நிலையங்களுக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

உர விற்பனையை கண்காணிக்க வேளாண்துறை அதிகாரிகளை கொண்டு பறக்கும் படை அமைத்து விதிகளை மீறும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

எனவே விவசாயிகள் தாங்கள் வாங்கும் உர மூட்டையில் குறிப்பிடப்பட்டு உள்ள விற்பனை விலைக்கு கூடுதலாக விற்பனை செய்தால், உடனடியாக வேளாண் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

தற்போது, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் பருவத்துக்கு தேவையான ரசாயன உரங்கள் இருப்பு வைக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. எனவே விவசாயிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களை அதிக அளவில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இருப்பு வைப்பு

மேலும் இந்த மாத தேவையை பூர்த்தி செய்ய 4 ஆயிரம் டன் யூரியா ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதுவரை 2 ஆயிரத்து 300 டன் வினியோகம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் 1700 டன் வினியோகம் செய்யப்பட உள்ளது. எனவே விவசாயத்துக்கு உரம் தட்டுப்பாடு இன்றி கிடைக்க, போதிய அளவு உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. இதனை விவசாயிகள் மண்வள அட்டை பரிந்துரையின்படி பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.


திருச்செந்தூர்-ஸ்ரீவைகுண்டம் இடையே 2-வது முறையாக நீராவி என்ஜின் ரெயில் இயக்கம் கலெக்டர் சந்தீப் நந்தூரி குடும்பத்தினருடன் பயணம்



திருச்செந்தூர்-ஸ்ரீவைகுண்டம் இடையே
2-வது முறையாக நீராவி என்ஜின் ரெயில் இயக்கம்
கலெக்டர் சந்தீப் நந்தூரி குடும்பத்தினருடன் பயணம்
திருச்செந்தூர்- ஸ்ரீவைகுண்டம் இடையே 2-வது முறையாக இயக் கப்பட்ட பழமையான நீராவி என்ஜின் ரெயிலில் கலெக்டர் சந்தீப் நந்தூரி குடும்பத்தினருடன் பயணம் செய்தார்.
திருச்செந்தூர், 

திருச்செந்தூர்- ஸ்ரீவைகுண்டம் இடையே 2-வது முறையாக இயக் கப்பட்ட பழமையான நீராவி என்ஜின் ரெயிலில் கலெக்டர் சந்தீப் நந்தூரி குடும்பத்தினருடன் பயணம் செய்தார்.

பழமையான ரெயில்

இங்கிலாந்து நாட்டில் 1855-ம் ஆண்டில் இ.ஐ.ஆர்.21 மற்றும் இ.ஐ.ஆர்.22 என்ற 2 நீராவி என்ஜின் கொண்ட ஹெரிடேஜ் ரெயில்கள் தயாரிக்கப்பட்டன. இவை 1857-ம் ஆண்டு இந்தியா கொண்டு வரப்பட்டு குறிப்பிட்ட ரெயில் வழித்தடங்களில் சேவையாற்றியது. சுமார் 55 ஆண்டுகள் சேவைக்கு பிறகு இந்த நீராவி என்ஜின்கள் ஹவுரா மற்றும் ஜமால்பூரில் நிறுத்தப்பட்டன. அங்கு சிதிலமடைந்து நீராவி என்ஜின் பாகங்கள் காணாமல் போனது.
இதனையடுத்து தெற்கு ரெயில்வே நிர்வாகம் இ.ஐ.ஆர்.21 நீராவி ரெயில் என்ஜினை பராமரிப்பு செய்தது. பின்னர் பாரம்பரிய ரெயில் சேவை திட்டத்தில் உலகிலேயே பழமையான நீராவி என்ஜின் உள்ள இந்த ரெயில், குறிப்பிட்ட வழித்தடங்களில் அவ்வப்போது இயக்கப்பட்டு வருகின்றன.

2-வது முறை

கடந்த 17-ந் தேதி ஏற்கனவே திருச்செந்தூர்-ஸ்ரீவைகுண்டம் இடையே இந்த ரெயில் இயக்கப்பட்டது. இந்த நிலையில் ரெயில் பயணிகளை மகிழ்விக்க 2-வது முறையாக இந்த தடத்தில் நேற்று இயக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி ரெயிலை நேற்று திருச்செந்தூர் ரெயில் நிலையத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருச்செந்தூரில் இருந்து ஸ்ரீவைகுண்டம் வரை இந்த ரெயில் 2-வது முறையாக இயக்கப்படுகிறது. இந்த இ.ஐ.ஆர்.21 நீராவி என்ஜின் ரெயில் மிகவும் பழமையானது. இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டு இந்தியா கொண்டுவரப்பட்டு நீண்ட காலம் ரெயில்வேயில் சேவையாற்றியது. அதன்பிறகு இதனை ரெயில்வே நிர்வாகம் பழமையான ரெயில் சேவையை போற்றும் வகையில் தமிழகம் முழுவதும் இயக்கி வருகிறது. இந்த ரெயிலுடன் இணைந்து தயாரிக்கப்பட்ட இ.ஐ.ஆர்.22 பழமையான நீராவி என்ஜின் ரெயில் உலக அளவில் கின்னஸ் சாதனை படைத்தது. தற்போது இந்த பழமையான நீராவி என்ஜின் ரெயிலில் பயணம் செய்வது சிறந்த அனுபவத்தை தரும். இதேபோல் மேலும் 2 முறை இயக்கப்பட உள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்ட மக்கள் பயணம் செய்யலாம்.

இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து கலெக்டரின் மனைவி பரிதா அட்ஷா கூறும்போது, உண்மையிலேயே இந்த பழமையான நீராவி என்ஜின் ரெயிலில் பயணம் செய்வது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.

யார்-யார்?

இந்த நிகழ்ச்சியில் திருச்செந்தூர் உதவி கலெக்டர் கோவிந்தராசு, தாசில்தார் தில்லைபாண்டி, மண்டல துணை தாசில்தார் கோமதிசங்கர், ரெயில்வே கோச்சிங் டிப்போ அதிகாரி கர்ஷா, ரெயில்வே போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியம், வணிக இன்ஸ்பெக்டர் மாணிக்கம், திருச்செந்தூர் ரெயில் நிலைய மேலாளர் ஜேம்ஸ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ரெயிலில் கலெக்டர் சந்தீப் நந்தூரி, அவருடைய மனைவி பரிதா அட்ஷா, 6 வயது மகன் சம்மரத் நந்தூரி, ரெயில்வே அதிகாரிகள் மற்றும் 10 பெண்கள் உள்பட 35 பயணிகள் பயணம் செய்தனர். திருச்செந்தூரில் இருந்து காலை 10.15 மணிக்கு ரெயில் புறப்பட்டு ஸ்ரீவைகுண்டத்திற்கு மதியம் 12.50 மணிக்கு சென்றடைந்தது.





ஏரல் அருகே ரவுடி கொலை: குற்றவாளியை பிடிக்க போலீஸ் தீவிரம்



ஏரல் அருகே ரவுடி கொலை:
குற்றவாளியை பிடிக்க போலீஸ் தீவிரம்
ஏரல் அருகே நடந்த ரவுடி கொலை வழக்கில் குற்றவாளியை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
ஏரல், 

ஏரல் அருகே நடந்த ரவுடி கொலை வழக்கில் குற்றவாளியை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

பிரபல ரவுடி

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பேட்மாநகரம் வீரன்சுந்தரலிங்கம் நகரை சேர்ந்தவர் இசக்கியப்பன். இவருடைய மகன் வினோத் (வயது 28). பிரபல ரவுடி. இவரும் ஏரல் சேர்மன் கோவில் தெருவை சேர்ந்த முனியசாமி மகன் ரவுடி தனுஷ்கோடியும் (30) நண்பர்கள். வினோத் அடிக்கடி தனுஷ்கோடியின் வீட்டுக்கு செல்வது வழக்கம்.

கழுத்தை அறுத்து கொலை

ஏற்கனவே தனுஷ்கோடி ஒரு வழக்கு தொடர்பாக சிறையில் இருந்தார். அப்போது அவரது வீட்டுக்கு வினோத் சென்றுள்ளார். அங்கு இருந்த தனுஷ்கோடி மனைவியிடம் அவர் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த தனுஷ்கோடி வினோத் மீது கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்த தனுஷ்கோடி, வினோத்தை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். சம்பவத்தன்று ஏரல் அருகே உள்ள மங்களகுறிச்சி தாமிரபரணி ஆற்றங்கரையில் வினோத்தை தனுஷ்கோடி கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.

போலீஸ் வலைவீச்சு

இதுகுறித்து தகவல் அறிந்த ஏரல் போலீசார், அவருடைய உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் நேற்று காலையில் வினோத் உடல், அவர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஏரல் போலீசார் தனுஷ்கோடி மீது வழக்குப்பதிவு செய்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் இந்த வழக்கில் தனுஷ்கோடியின் கூட்டாளிகள் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகிறார்கள். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






சனி, 24 நவம்பர், 2018

இயக்கப்பற்றே பெரிய சவால் - ஏரல் பீர்முஹம்மது பாகவி

திரு. வைகோ அவர்களின் மீலாது பேருரை ஜமாஅத்துல்உலமா சென்னை

ஏரல் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் ரவுடி கழுத்தை அறுத்து கொலை

ஏரல் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் ரவுடி கழுத்தை அறுத்து கொலை

















ஏரல்:

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள பேட்மாநகரத்தை சேர்ந்தவர் வினோத்(வயது28). பிரபல ரவுடியான இவர் மீது ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன.
நேற்று இவர் மோட்டார்சைக்கிளில் தனது நண்பரை பார்க்க ஏரல் அருகேயுள்ள மேலமங்களகுறிச்சி பகுதிக்கு சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அவரது உறவினர்கள் அக்கம்பக்கத்தில் தேடினர்.

இதனிடையே அவரது மோட்டார்சைக்கிள் மட்டும் அங்குள்ள காட்டுப்பகுதியில் கிடந்தது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஏரல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மோட்டார்சைக்கிளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

இதனிடையே இன்று காலை அங்குள்ள சுடுகாட்டுக்கு செல்லும் பாதையில் வினோத் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. ஏரல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு வினோத் மேலாடைகள் இல்லாமல் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

அவரது ஆடைகள் அப்பகுதியில் சிதறி கிடந்தன. மர்ம நபர்கள் நள்ளிரவில் வினோத்தை கழுத்து அறுத்து கொலை செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. வினோத்தின் நண்பர் ஏரலில் வசித்து வருகிறார். இவரது வீட்டுக்கு வினோத் அடிக்கடி வருவாராம்.

அப்போது வினோத்துக்கும் நண்பரின் மனைவிக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதுபற்றி நண்பருக்கு தெரியவந்தது. அவர் வினோத்தை கண்டித்தார்.

அதன்பிறகும் அவர்களது தொடர்பு நீடித்தது. இதனால் ஆத்திரம் அடைந்த நண்பர் தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து வினோத்தை கழுத்தை அறுத்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

தொடர்ந்து இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகிறார்கள். இந்த கொலை சம்பவம் ஏரல், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 




ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...