
ஆறுமுகநேரியில் அறிவியல் கண்காட்சி ரெயிலை 18 ஆயிரம் மாணவர்கள் பார்வையிட்டனர்.
ஆறுமுகநேரி,
ஆறுமுகநேரியில் அறிவியல் கண்காட்சி ரெயிலை 18 ஆயிரம் மாணவர்கள் பார்வையிட்டனர்.
அறிவியல் கண்காட்சி ரெயில்
இந்திய ரெயில்வே சார்பில், மாணவ– மாணவிகள், ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் அறிவியல் கண்காட்சி எக்ஸ்பிரஸ் ரெயில் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த ரெயிலில் உள்ள 13 பெட்டிகளில் பல்வேறு விதமான அறிவியல் கண்டுபிடிப்புகள் தொடர்பான காட்சிகள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த அறிவியல் கண்காட்சி ரெயில் தமிழகத்தில் சேலம் மாவட்டம் ஆத்தூர், கரூர், கொடைக்கானல் ரோடு, விருதுநகர் ஆகிய 4 இடங்களில் மாணவ– மாணவிகள், ஆசிரியர்கள், பொதுமக்கள் பார்வைக்காக நிறுத்தி வைக்கப்பட்டது.
தொடர்ந்து இந்த அறிவியல் கண்காட்சி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலையில் ஆறுமுகநேரிக்கு வந்தது. இந்த ரெயிலுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த ரெயில், ஆறுமுகநேரி ரெயில் நிலையத்தில் 3–வது பிளாட்பாரத்தில் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது. அறிவியல் கண்காட்சி ரெயிலை பார்வையிடுவதற்காக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பல்வேறு பள்ளிக்கூடங்களைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான மாணவ– மாணவிகள் ஏராளமான வேன்கள், பஸ்களில் வந்தனர். அவர்கள் ஆறுமுகநேரி ரெயில் நிலையத்தில் இருந்து மெயின் பஜார் வரையிலும் சுமார் 500 மீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து வரிசையாக நின்றனர்.
தொடக்க விழா
காலை 10.15 மணி அளவில் அறிவியல் கண்காட்சி ரெயிலில் தொடக்க விழா நடந்தது. தூத்துக்குடி உதவி கலெக்டர் தீபக் ஜேக்கப், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அனிதா, சாகுபுரம் டி.சி.டபிள்யு. தொழிற்சாலை நிர்வாக உதவி தலைவர் ஜெயகுமார், திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி முதல்வர் சுப்பிரமணியம் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி, கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.
தொடக்க விழாவில் பா.ஜ.க. மாநில வர்த்தக அணி தலைவர் ராஜகண்ணன், ஒன்றிய செயலாளர் தங்கபாண்டியன், நகர தலைவர் மகேந்திரன், பெர்ல்ஸ் பள்ளிக்கூட நிர்வாகி மபத்லால், ஆத்தூர் பள்ளிக்கூட நிர்வாகி ரஞ்சித்சிங், கோசல்ராம் பேரவை தலைவர் பற்குணபெருமாள், ரெயில் நிலைய வளர்ச்சி குழு ஒருங்கிணைப்பாளர் தங்கமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த ரெயிலில் உள்ள 13 பெட்டிகளில் வானிலை மாற்றத்துக்கான புரிந்துணர்வு, அதனை சீர்படுத்துதல், உலகளாவிய வானிலை மாற்றத்துக்கான புரிதல், உயிர்வள ஆதாரம், இயற்கை பாதுகாப்பிற்கான உயிர் தொழில்நுட்பம், வானிலையை சீர்படுத்துவதற்கான இந்தியாவின் பங்களிப்பு, அறிவியல் தொழில்நுட்பத்தின் கண்டுபிடிப்புகள், அறிவியலில் ஒளிந்திருக்கும் அதிசயங்கள், புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்துதல், குழந்தைகள் பகுதி என பல்வேறு வகையான அறிவியல் தொடர்பான காட்சிகளும் இடம் பெற்று இருந்தன.
18 ஆயிரம் மாணவர்கள்
ஒவ்வொரு ரெயில் பெட்டிகளிலும் உள்ள அறிவியல் தொடர்பான படங்கள், காட்சிகளையும் வல்லுனர் குழுவினர் தமிழிலும், ஆங்கிலத்திலும் விளக்கி கூறினர். மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர். அனைத்து ரெயில் பெட்டிகளும் குளிரூட்டப்பட்டு, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. இதனால் மாணவ– மாணவிகள் ஒவ்வொரு ரெயில் பெட்டியிலும் உள்ள அறிவியல் தொடர்பான கண்காட்சி படங்களையும் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.
ரெயில் நிலைய நுழைவு வாயிலில் மாணவர்களின் பெயர் விவரம் பதிவு செய்யப்பட்டது. ரெயிலின் முதல் பெட்டியில் ஏறி, கண்காட்சியை பார்வையிட்ட பின்னர் கடைசி பெட்டியில் இறங்கி செல்லும் வகையில் அமைக்கப்பட்டு இருந்தது. நேற்று ஒரே நாளில் சுமார் 18 ஆயிரம் மாணவ– மாணவிகள் அறிவியல் கண்காட்சி ரெயிலை பார்வையிட்டனர். ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது. மாணவ– மாணவிகளுக்கு குடிநீர், குளிர்பானம் போன்றவற்றை தன்னார்வலர்கள் வழங்கினர்.
மாலையில் பொதுமக்களும் அறிவியல் கண்காட்சி ரெயிலை ஆர்வமுடன் பார்வையிட்டனர். ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோசப், ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) அறிவியல் கண்காட்சி ரெயில், ஆறுமுகநேரி ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படும். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாணவ– மாணவிகள், ஆசிரியர்கள், பொதுமக்கள் அறிவியல் கண்காட்சி ரெயிலை பார்வையிடலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக