சனி, 27 ஏப்ரல், 2019

ஏரல் அருகே குரும்பூர் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் ஜமீன் (வயது 52) எலக்ட்ரீசியன் பரிதாபமாக உயிரிழந்தார்.

குரும்பூரில் மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி

குரும்பூரில் மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி
குரும்பூரில் மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலியானார். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-
தென்திருப்பேரை,

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் ஜமீன் (வயது 52) எலக்ட்ரீசியன். இவர் சம்பவத்தன்று தனது வீட்டில் பழுதடைந்த மின்விசிறியை பழுது நீக்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக ஜமீன் மீது மின்சாரம் தாக்கியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு உயிருக்கு போராடினார்.

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே ஜமீன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில், குரும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி இறந்த ஜமீனுக்கு ஹமீதா பேகம் என்ற மனைவியும், செய்யது அபுதாஹிர் (14) என்ற மகனும் உள்ளனர்.

வியாழன், 25 ஏப்ரல், 2019

ஏரல் அருகே பள்ளிக்கூட வேனை ஓட்டியபோது மாரடைப்பு:21 மாணவர்களை காப்பாற்றி உயிர் விட்ட டிரைவர்

பள்ளிக்கூட வேனை ஓட்டியபோது மாரடைப்பு:21 மாணவர்களை காப்பாற்றி உயிர் விட்ட டிரைவர்வீட்டு சுற்றுச்சுவரில் மோதி நின்றதால் பெரும் விபத்து தவிர்ப்பு
ஆறுமுகநேரியில் ஓடும் பள்ளிக்கூட வேனில் டிரைவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவர் வேகத்தை குறைத்ததால் வேன் வீட்டு சுற்றுச்சுவரில் மோதி நின்றது. அதில் இருந்த 21 மாணவர்களை காப்பாற்றிவிட்டு அவர் உயிர் நீத்தார்.
ஆறுமுகநேரி, 

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர்-புன்னக்காயல் ரோடு பகுதியில் வசித்தவர் மோகன்ராஜ் (வயது 45). இவர் ஆறுமுகநேரியில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் டிரைவராக வேலை செய்து வந்தார். நேற்று காலையில் இவர் வழக்கம்போல் ஆத்தூரில் இருந்து பள்ளிக்கூட வேனில் மாணவ-மாணவிகளை ஏற்றிக் கொண்டு, பள்ளிக்கூடத்துக்கு சென்று கொண்டிருந்தார். அந்த வேனில் 21 மாணவ-மாணவிகள் மற்றும் 2 ஆசிரியைகள் இருந்தனர்.
ஆறுமுகநேரி பள்ளிவாசல் பஜாரைக் கடந்து காமராஜபுரம் பகுதியில் சென்றபோது, திடீரென்று மோகன்ராஜிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவர் வேனின் வேகத்தை குறைத்தவாறு, இடது பக்கமாக வேனை திருப்பிய நிலையில், ஸ்டீயரிங் மீது மயங்கி விழுந்தார். அப்போது சாலையின் இடதுபுறமாக இருந்த வீட்டின் சுற்றுச்சுவர் மீது வேன் மோதி நின்றது. இதில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. வேனில் இருந்த மாணவ-மாணவிகள், ஆசிரியைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

வேனில் மயங்கிய நிலையில் கிடந்த மோகன்ராஜை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்செந்தூர் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். சுற்றுச்சுவர் மீது மோதியதில் பள்ளிக்கூட வேனில் இருந்த 6 மாணவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் ஆறுமுகநேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். மாரடைப்பில் உயிரிழந்த மோகன்ராஜின் உடலை ஆறுமுகநேரி போலீசார் கைப்பற்றி பரிசோதனைக்காக காயல்பட்டினம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மோகன்ராஜிக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது, சிரமத்துடன் மாணவ-மாணவிகளின் உயிரை காப்பாற்ற போராடியுள்ளார். உயிருக்கு போராடிய நிலையிலும் வேனின் வேகத்தை குறைத்து இடது பக்கமாக திருப்பியதால், எதிரே வந்த வாகனங்களின் மீது வேன் மோதி விபத்துக்கு உள்ளாவதை தவிர்த்தார். தொடர்ந்து சாலையின் ஓரத்தில் இருந்த டிரான்ஸ்பார்ம் மீதும் வேனை மோதவிடாமல் போராடி இருக்கிறார். அவர் சுயநினைவு இழந்த நிலையில் வேன் சாலையோரத்தில் இருந்த வீட்டின் சுற்றுச்சுவரில் மோதி நின்றது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தன்னுடைய உயிர் பிரியும் தருவாயிலும் வேனில் இருந்த மாணவ-மாணவிகளின் உயிரை காப்பாற்ற போராடிய டிரைவரை பொதுமக்கள் கண்ணீர் மல்க நினைவு கூர்ந்தனர்.

இறந்த வேன் டிரைவர் மோகன்ராஜூக்கு சொந்த ஊர் ஆத்தூர் அருகே உள்ள செல்வன்புதியனூர் ஆகும். இவருக்கு சுப்புலட்சுமி (35) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இந்த விபத்து குறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


ஏரல் அருகே சாயர்புரத்தில் ஜியு போப் 200வது பிறந்த தின விழா



















4/25/2019 6:49:15 AM
தூத்துக்குடி, ஏப்.25: சாயர்புரத்தில் நடந்த ஜி.யு.போப் 200வது ஆண்டு பிறந்த தினவிழாவில் பேராயர் தேவசகாயம் கலந்து கொண்டார். ஜி.யு. போப் 200வது பிறந்த தினவிழா சாயர்புரத்தில் உள்ள போப் கல்வியியல் கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது.  தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல பேராயர் தேவசகாயம் தலைமை வகித்தார். சாயர்புரம் சேகரத்தலைவர் குரோவ்ஸ் பர்னபாஸ் ஆரம்ப ஜெபம் செய்தார். போப் கல்வியியல் கல்லூரி தாளாளர் கிறிஸ்டோபெல் ஆனந்த் வரவேற்றார். சாயர்புரத்தைச் சேர்ந்த ஜேக்கப் ராஜன், ஜி.யு. போப் குறித்து பேசினார். கல்லூரி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் போப் கல்வியியல் கல்லூரியில் பல்கலைக்கழக தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு போப் பொறியியல் கல்லூரி தாளாளரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சிறுபான்மைப் பிரிவு துணை அமைப்பாளருமான ராஜேஷ் ரவிசந்தரின் தந்தை ராஜாமணி நினைவாக வழங்கப்படும் தங்கப்பதக்கங்களை நார்வே பேராசிரியர் டேனியல் கருணாகரன் வழங்கினார்.

கல்லூரி முதல்வர் உமா சித்ரா நன்றி கூறினார். தொடர்ந்து சாயர்புரத்தில் தூய ரபாயேல் மருத்துவமனையில் 15 படுக்கைவசதியுடன் புதிய வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வார்டினை தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல பேராயர் தேவசகாயம் திறந்து வைத்து ஆசீர்வதித்தார். விழாவில், தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலத்திற்குட்பட்ட குருமார்கள், செயற்குழு உறுப்பினர்கள், திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள், சேகர மன்ற உறுப்பினர்கள், கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள், தாளாளர்கள் மற்றும் சபை மக்கள் திரளாக கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சாயர்புரம் சேகரத்தலைவர் குரோவ்ஸ் பர்னபாஸ், திருமண்டல செயற்குழு உறுப்பினர் ராஜேஷ் ரவிசந்தர், நார்வே பேராசிரியர் டாக்டர் டேனியல் கருணாகரன், சாயர்புரம் சேகர திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள், சேகர மன்ற உறுப்பினர்கள், போப் கல்வியியல் கல்லூரி பேராசிரியர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

ஏரல் அருகே பெருங்குளத்தில் குளத்து சாலையோரம் தடுப்பு சுவர் இல்லாததால் விபத்து அபாயம்



ஏரல், ஏப். 25: ஏரல் அருகேயுள்ள பெருங்குளம் குளம் இப்பகுதியில் பரப்பளவில் பெரிய குளமாக இருந்து வருகிறது. இந்த குளத்தை நம்பி பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் நெல், வாழை விவசாயம் செய்து வருகின்றனர். ஏரலில் இருந்து சிவகளை, ஸ்ரீவைகுண்டம் மற்றும் திருநெல்வேலிக்கு செல்லும் பஸ் மற்றும் வாகனங்கள் அனைத்தும் பெருங்குளம் வழியாக வந்து குளத்து கரையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள சாலை வழியாக சென்று வருகிறது. இதேபோல் தூத்துக்குடியில் இருந்து புதுக்கோட்டை, சாயர்புரம் வழியாக வைகுண்டத்திற்கு சென்று வரும் பஸ்களும் இந்த குளக்கரை சாலை வழியாக சென்று வருகிறது. மேலும் குளத்து கரையோரப் பகுதியில் அதிக அளவு விவசாய நிலங்கள் உள்ளதால் விவசாயிகள் தங்கள் வயல்களில் உள்ள வாழைத்தார்களை வெட்டி கொண்டு செல்வதற்கும், உரம் கொண்டு செல்லுவதற்கும் வாகனங்கள் இந்த குளத்து கரையோர சாலையை பயன்படுத்தி வருவதால் இந்த சாலையில் எப்போதும் போக்குவரத்து அதிக அளவு நடந்து வருகிறது. 

பெருங்குளம் வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும் இங்குள்ள சிவன் கோயில் அருகே குளத்துக்கரை சாலையில் ஏறியவுடன் அருகில் உள்ள நவதிருப்பதி கோயிலில் ஒன்றான மாயக்கூத்தர் கோயில் குளத்துக்கரை படித்துறை வரை சாலை மிக குறுகலாக உள்ளது. இந்த இடத்தில் வாகனங்கள் வரும் போது எதிரே வரும் வாகனத்திற்கு வழிவிடும் போது பஸ் குளத்தில் விழுந்துவிடுமோ? என்ற நிலையில் மிக ஆபத்தான நிலையில் சென்று வருகிறது. இதனால் பஸ் பயணிகள் உயிரை கையில் பிடித்து கொண்டு பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் பெருங்குளம் குளத்து கரையோரப் பகுதியில் தடுப்பு சுவர் அல்லது தடுப்பு கம்பிகள் அமைத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும். இதில் குறிப்பாக பெருங்குளம் சிவன் கோயில் அருகில் குளத்துக்கரை சாலையில் பஸ் ஏறும் இடத்தில் இருந்து மாயக்கூத்தர் கோயில் குளத்து படித்துறை வரையில் போர்கால அடிப்படையில் முதலில் தடுப்பு சுவர் அமைத்திட வேண்டும் என பெருங்குளம் பகுதி மக்கள் மற்றம் வாகன ஓட்டிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.





செவ்வாய், 23 ஏப்ரல், 2019

ஏரல் அருகே போக்குவரத்துக்கு லாயக்கற்ற குரங்கணி -நாசரேத்-சாலை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

நாசரேத், ஏப்.23:  போக்குவரத்துக்கு லாயக்கற்ற நாசரேத்-குரங்கணி  சாலையை விரைவில் சீரமைக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாசரேத்-ஏரல் இடையே உள்ள குளத்துக்குடியிருப்பு, கடையனோடை, மாவடிப்பண்ணை, குரங்கணி சாலை பல மாதங்களாக குண்டும் குழியுமாகவும், பெரிய பள்ளங்கள் நிறைந்தும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் காணப்படுகிறது. இந்த வழியாக செல்லும் பஸ்கள், லாரிகள் மற்றும் வாகனங்கள் மிகவும் சிரமப்படுகின்றன.   இரு சக்கர வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். எனவே  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தக்க  நடவடிக்கை எடுத்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில்உள்ள நாசரேத் -ஏரல் சாலையை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏரல்-குரும்பூர் சாலைப்பணி பாதியில் நிறுத்தம் கிராம மக்கள் அவதி


ஏரல், ஏப். 23: ஏரலில் இருந்து குரும்பூர் செல்லும் மெயின் சாலை பணி பாதியில் நிறுத்தப்பட்டதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். ஏரலில் இருந்து குரும்பூர் செல்லும் முக்கிய சாலை 7 கி.மீ. தூரம் உள்ளது. இந்த சாலையானது குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருந்து வந்தது. இதனால் இந்த சாலை வழியாக குரும்பூர், காரவிளை, சேதுசுப்பிரமணியபுரம், சேதுக்குவாய்த்தான், ராஜபதி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து ஏரல் பள்ளிகளில் படித்து வரும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் அவதிப்பட்டு வந்தனர். மேலும் இந்த சாலை வழியாக பிரசித்திபெற்ற ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயில் மற்றும் நாலூமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியத்திற்கும், வனதிருப்பதி கோயிலுக்கும் செல்லும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் அவதிப்பட்டு வந்தனர்.  தினமும் இவ்வழியாக ஏராளமான வாகனங்கள் தட்டுதடுமாறி சாலையில் ஊர்ந்து சென்று வந்தன. எனவே ஏரல்-குரும்பூர் சாலையை சீரமைக்க கோரி பல்வேறு தரப்பட்ட மக்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். 

 இதையடுத்து கடந்த ஆண்டு ஏரல்-குரும்பூர் சாலை புதியதாக அமைக்கப்பட்டது. இதனால் இப்பகுதி மக்கள், பள்ளி மாணவ, மாணவிகள், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் இந்த தார்ரோடு குரும்பூரில் இருந்து ஏரல் வரை முழுவதும் போடப்படாமல் குரும்பூரில் இருந்து சேதுசுப்பிரமணியபுரம் வரை மட்டும் போடப்பட்டது. இதனால் இந்த ரோட்டில் சேதுசுப்பிரமணியபுரத்தில் இருந்து சேதுக்குவாய்த்தான் வழியாக ஏரல் வரை சுமார் 2 கி.மீ சாலை பணி கிடப்பில் போடப்பட்டது. மீதமுள்ள இந்த சாலையானது ஒரு மாதத்தில் அமைக்கப்படும் என மக்கள் நினைத்த நிலையில் ஒருவருடத்திற்கு மேல் ஆகியும் மீதமுள்ள இந்த சாலை போடப்படுவதற்கான அறிகுறி இல்லை. ஏற்கனவே குண்டும், குழியுமாக இந்த சாலை அரிப்பு ஏற்பட்டு இருந்த இடம் தெரியாமல் படுகுழியாக உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏரல்-குரும்பூர் ரோட்டில் கிடப்பில் போடப்பட்டுள்ள மீதமுள்ள சேதுசுப்பிரமணியபுரத்தில் இருந்து ஏரல் வரை தார்ரோட்டை உடனே அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெள்ளி, 19 ஏப்ரல், 2019

ஏரல் சிவன் கோயில் சித்திரை திருவிழாவில் கற்பக பொன் சப்பரத்தில் சுவாமி, அம்பாள் வீதிஉலா

ஏரல், ஏப். 19: ஏரல் மீனாட்சி அம்பாள் சமேத சொக்கலிங்க சுவாமி கோயில் சித்திரை திருவிழா கடந்த 8ம்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள் திருவிழா நடந்தது. திருவிழா காலங்களில் தினசரி காலை யாகவேள்வி பூஜை, சிறப்பு அபிசேகம், உற்சவ மூர்த்தி அலங்காரம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தது. இரவு சிறப்பு நிகழ்ச்சியாக பக்தி இசை, வழக்காடு மன்றம், பரதநாட்டியம் உட்பட கலை நிகழ்ச்சிகள் நடந்தன. நிறைவு நாள் விழா 17ம்தேதி நடந்தது. அன்று அதிகாலையில் மகாகணபதி ஹோமம், வருஷாபிஷேகம், தீர்த்தவாரி நடந்தது. தொடர்ந்து மீனாட்சி அம்பாள்-சொக்கலிங்க சுவாமி திருக்கல்யாணம வைபவம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி அம்பாளை தரிசனம் செய்தனர். இதையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் பிரதோஷம் பூஜையும், தொடர்ந்து மீனாட்சி அம்பாள்-சொக்கலிங்க சுவாமி திருக்கல்யாண கோலத்தில் கற்பக பொன் சப்பரத்தில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.

தூத்துக்குடி தொகுதியில் 61 வாக்குச்சாவடி மையங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பழுதுபொதுமக்கள் காத்திருந்து வாக்களித்தனர்

61 வாக்குச்சாவடி மையங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பழுதுபொதுமக்கள் காத்திருந்து வாக்களித்தனர்
தூத்துக்குடி தொகுதியில் 61 வாக்குச்சாவடி மையங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்களில் திடீர் பழுது ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் காத்திருந்து வாக்களித்தனர்.
தூத்துக்குடி, 

தூத்துக்குடி தொகுதியில் 61 வாக்குச்சாவடி மையங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்களில் திடீர் பழுது ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் காத்திருந்து வாக்களித்தனர்.

ஓட்டுப்பதிவு

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் நேற்று காலை 6 மணிக்கு வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மாதிரி ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டது. தொடர்ந்து 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
தூத்துக்குடியில் காலை முதல் வாக்குச்சாவடிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அதே நேரத்தில் மாவட்டத்தின் பிற இடங்களில் மிதமான வாக்குப்பதிவு நடந்தது.

திடீர் பழுது

தூத்துக்குடி டூவிபுரம், ஹோலிகிராஸ் தொடக்கப்பள்ளி, போல்பேட்டை தங்கம் நடுநிலைப்பள்ளி, அத்திமரப்பட்டி, கழுகுமலை கே.வேலாயுதபுரம், குளத்தூர், ஆழ்வார்தோப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டு இருந்த 61 வாக்குச்சாவடி மையங்களில் இருந்த ஓட்டுப்பதிவு எந்திரங்களில் திடீரென பழுது ஏற்பட்டது. இதனால் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பழுதை சரி செய்தபின் வாக்களித்தனர்.

ஆழ்வார்தோப்பு வாக்குச்சாவடியில் அ.ம.மு.க. வேட்பாளர் புவனேசுவரன் வாக்குப்பதிவு செய்வதற்காக சென்றார். அப்போது எந்திரம் பழுதடைந்ததால் நீண்ட நேரம் காத்திருந்தார். உடனடியாக மண்டல அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும், பெல் நிறுவன என்ஜினீயர்களும் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு விரைந்து சென்று வாக்குப்பதிவு எந்திரத்தை சரி செய்தனர். பழுது உடனடியாக சரி செய்ய முடியாத எந்திரங்கள் மாற்றப்பட்டன. 10 வாக்குப்பதிவு எந்திரங்கள் ஓட்டுப்பதிவு நடந்து கொண்டு இருந்தபோது பழுதடைந்தது. அந்த வாக்குச்சாவடிகளில் புதிய வாக்குப்பதிவு எந்திரங்கள் பொருத்தப்பட்டன. 3 வாக்குச்சாவடிகளில் சுமார் 1 மணி நேரம் தாமதமாக ஓட்டுப்பதிவு தொடங்கி நடந்தது.

மெஞ்ஞானபுரம்

மெஞ்ஞானபுரம் அருகே கீழ ராமசாமியாபுரம் புனித அன்னாள் உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரம் பழுதடைந்த நிலையில் இருந்தது. இதனால் அங்கு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கவில்லை. தொடர்ந்து தேர்தல் அலுவலர்கள், என்ஜினீயர்கள் வாக்குப்பதிவு எந்திரத்தை பழுது நீக்க முயன்றனர். ஆனாலும் அதனை பழுதுநீக்க முடியவில்லை. இதையடுத்து திருச்செந்தூர் தாலுகா அலுவலகத்தில் இருந்து மாற்று வாக்குப்பதிவு எந்திரம் கொண்டு வரப்பட்டு பொருத்தப்பட்டது. சுமார் 3½ மணி நேரம் தாமதமாக காலை 10.30 மணி அளவில் வாக்குப்பதிவு தொடங்கியது.

மெஞ்ஞானபுரம் அம்புரோஸ் மேல்நிலைப்பள்ளியில் காலை 9 மணி அளவில் வாக்குப்பதிவு எந்திரம் பழுதடைந்தது. அதனை தேர்தல் அலுவலர்கள் சரி செய்தனர். தொடர்ந்து காலை 10 மணியில் இருந்து வாக்குப்பதிவு மீண்டும் நடந்தது.

கோவில்பட்டி

கோவில்பட்டி லாயல் மில் காலனி அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரம் பழுதடைந்த நிலையில் இருந்தது. இதனால் அங்கு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கவில்லை. இதையடுத்து தேர்தல் அலுவலர்கள், என்ஜினீயர்கள் வாக்குப்பதிவு எந்திரத்தை பழுது நீக்கினர். தொடர்ந்து காலை 9 மணி அளவில் வாக்குப்பதிவு எந்திரம் சரி செய்யப்பட்டு, வாக்குப்பதிவு தொடங்கியது.

கோவில்பட்டி வேலாயுதபுரம் ஈ.வெ.அ.வள்ளிமுத்து தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியிலும் வாக்குப்பதிவு எந்திரம் பழுதடைந்ததால் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கவில்லை. தொடர்ந்து அதனை அதிகாரிகள் சரி செய்த பின்னர் காலை 8 மணிக்கு அங்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா, கோவில்பட்டி உதவி கலெக்டர் அமுதா, தேர்தல் பார்வையாளர் சுகி ஷியாம் பெய்க் மற்றும் அதிகாரிகள் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்டனர்.

சாத்தான்குளம்

சாத்தான்குளம் நகர பஞ்சாயத்து அலுவலக வாக்குச்சாவடி, 3-வது வார்டு டி.டி.டி.ஏ. ஸ்டீபன் தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி, தாமரைமொழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகியவற்றிலும் வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதடைந்த நிலையில் இருந்ததால், அதனை அதிகாரிகள் சரிசெய்தனர். இதனால் அங்கு சுமார் ¾ மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.

பேய்க்குளம் பெருமாள்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் காலை 8.30 மணி அளவில் வாக்களிக்க சென்ற மூதாட்டி, வாக்குப்பதிவு எந்திரத்தில் நீண்ட நேரமாக பட்டனை அழுத்தியதால் வாக்குப்பதிவு எந்திரம் பழுதடைந்தது. இதையடுத்து தேர்தல் அலுவலர்கள் வாக்குப்பதிவு எந்திரத்தை சரிசெய்து, காலை 9 மணி அளவில் மீண்டும் வாக்குப்பதிவை தொடங்கினர்.

கலெக்டர் பேட்டி

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 1,595 வாக்குச்சாவடிகளில் காலையில் மாதிரி ஓட்டுப்பதிவு நடந்தது. தொடர்ந்து 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதில் சில இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்களில் பழுது ஏற்பட்டது. அந்த பழுது நீக்கப்பட்டு உள்ளது. சில இடங்களில் எந்திரங்கள் மாற்றப்பட்டு உள்ளன. ஒவ்வொரு தொகுதியிலும் 2 இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் வைத்து உள்ளோம். பெல் நிறுவன என்ஜினீயர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு பழுதடைந்த எந்திரங்கள் மாற்றப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

தூத்துக்குடி தொகுதியில் அமைதியான வாக்குப்பதிவுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஓட்டு போட்டனர்

தூத்துக்குடி தொகுதியில் அமைதியான வாக்குப்பதிவுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஓட்டு போட்டனர்
தூத்துக்குடி தொகுதியில் நேற்று அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்தது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஓட்டு போட்டனர்.
தூத்துக்குடி, 

தூத்துக்குடி தொகுதியில் நேற்று அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்தது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஓட்டு போட்டனர்.

நாடாளுமன்ற தேர்தல்

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தன. இந்த தொகுதியில் 37 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்கள் கடந்த 16-ந் தேதி மாலை 6 மணி வரை பிரசாரம் செய்தனர். இதைத்தொடர்ந்து ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
தூத்துக்குடி தொகுதியில் 14 லட்சத்து 25 ஆயிரத்து 401 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க வசதியாக 1,595 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இந்த வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் நேற்று முன்தினம் இரவு முடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருந்தது.

நீண்ட வரிசையில்...

ஆனாலும் தூத்துக்குடி தொகுதியில் பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் மக்கள் குடும்பத்தோடு வந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர். வாக்குச்சாவடிகளில் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் உப்பு கரைசல் வழங்கப்பட்டது.

வாக்காளர் சீட்டு வழங்குவதற்காக வாக்குச்சாவடி அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் இருந்து பணியாற்றினார். பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று வாக்களித்தனர். ஊனமுற்றவர்கள், முதியவர்கள் தங்களது உறவினர்களின் உதவியோடு வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தனர்.

கலெக்டர் ஓட்டு போட்டார்

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் காலை 10-30 மணியளவில் வரிசையில் நின்று ஓட்டு போட்டார். செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், அ.தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளருமான அமைச்சர் கடம்பூர் ராஜூ, கடம்பூர் சிதம்பராபுரம் இந்து தொடக்கப்பள்ளியில் வாக்களித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்றார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. காலை 7-30 மணியளவில் போல்பேட்டையில் உள்ள கீதா பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று வாக்களித்தார். உடன்குடி அருகே தண்டுபத்து ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. வாக்களித்தார். ஏரல் அருகே பண்ணைவிளை தக்கர் மேல்நிலைப்பள்ளியில் அ.தி.மு.க தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் எம்.எல்.ஏ. வாக்களித்தார். காயல்பட்டினம் முகைதீன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளரும், கடையநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான முகம்மது அபுபக்கர் வாக்களித்தார். தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி மக்கள் நீதிமய்யம் கட்சி வேட்பாளர் பொன்குமரன் தூத்துக்குடி டி.டி.டி.ஏ. நடுநிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார்.

4 ஆயிரம் போலீசார்

தேர்தலையொட்டி சுமார் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பணியமர்த்தப்பட்டு இருந்தனர். வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர் தூரத்துக்குள் வாகனங்கள் நிறுத்துவதை தவிர்க்க போலீசார் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தபடி இருந்தனர்.

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் நேற்று காலையில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக இருந்தது. விளாத்திகுளம், கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் ஓட்டுப்பதிவு மந்தமாக தொடங்கியது. ஆனால் அதன்பிறகு இந்த 3 தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு சூடுபிடித்தது. தொடர்ந்து ஓட்டுப்பதிவு சதவீதம் மளமளவென உயர்ந்தது. தூத்துக்குடி தொகுதியில் அமைதியான முறையில் தேர்தல் நடந்து முடிந்தது.


கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு ஆளுங்கட்சியினர் சொல்வதையே தேர்தல் ஆணையம் செய்கிறது”

“ஆளுங்கட்சியினர் சொல்வதையே தேர்தல் ஆணையம் செய்கிறது”கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு
“ஆளுங்கட்சியினர் சொல்வதையே தேர்தல் ஆணையம் செய்கிறது” என்று கனிமொழி எம்.பி. குற்றம் சாட்டினார்.
தூத்துக்குடி, 

“ஆளுங்கட்சியினர் சொல்வதையே தேர்தல் ஆணையம் செய்கிறது” என்று கனிமொழி எம்.பி. குற்றம் சாட்டினார்.

கனிமொழி பார்வையிட்டார்

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி எம்.பி. நேற்று காலையில் தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தை பார்வையிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நெருக்கடி

தமிழகத்தில் மதசார்பற்ற கூட்டணி வேட்பாளர்கள் அனைவருக்கும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஆனால் தூத்துக்குடியில் தமிழிசை சவுந்தரராஜன், அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோரால் முடுக்கிவிடப்பட்ட காவல்துறையினர் தி.மு.க.வினருக்கு பல நெருக்கடிகளை கொடுத்து வருகிறார்கள். ஆனால் அதையும் தாண்டி அவர்கள் சிறப்பாக பணியாற்றி கொண்டு இருக்கிறார்கள். தேர்தல் ஆணையம் தொடர்ந்து ஆளுங்கட்சியினர் சொல்வதையே செய்து வருகிறது. வயதானவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் தேர்தல் ஆணையம் இன்னும் சற்று கூடுதலாக சரியாக வசதிகளை செய்து கொடுத்து இருக்கலாம்.

வளர்ந்த நாடுகளும் தற்போது காகித முறை மூலம் ஓட்டுப்பதிவு செய்யும் நடைமுறைக்கு வந்து விட்டன. ஆனால் பா.ஜனதா அரசு வாக்குப்பதிவு எந்திரத்தை பயன்படுத்த வேண்டும் என பிடிவாதமாக இருப்பது மக்களுக்கு அச்சத்தையும், நம்பிக்கையின்மையையும் தருகிறது. ஜனநாயகம் என்பது சந்தேகங்களுக்கு இடம் கொடுக்காத வகையில் இருக்க வேண்டும். வாக்குப்பதிவு எந்திரங்கள் அடிக்கடி பழுதாவதால், மீண்டும் காகித முறை வாக்குப்பதிவு மேற்கொள்ள வேண்டும் என்பது அனைவரின் கருத்தாக இருக்கிறது.

கூடுதல் நேரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குப்பதிவு எந்திரம் பழுது காரணமாக குறிப்பிட்ட நேரத்தில் வாக்குப்பதிவு தொடங்காத மையங்களில் கூடுதல் நேரம் வாக்காளர்கள் வாக்களிக்க ஒதுக்க வேண்டும் என்று கேட்டு உள்ளோம். மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகிறார்கள். மத்தியில் இருக்கும் ஆட்சியை மாற்ற வேண்டும், மாநில ஆட்சியை மாற்ற வேண்டும் என்பதில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். மக்கள் மாற்றம் வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ., பொதுக்குழு உறுப்பினர் ஜெகன், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர். பின்னர் கனிமொழி விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியை பார்வையிட்டார்.

இதற்கிடையே, தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. தேர்தல் முகவர் அன்புநிதி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சந்தீப் நந்தூரியிடம் ஒரு மனு கொடுத்தார். அதில், “தூத்துக்குடி தொகுதியில் மொத்தம் 22 இடங்களில் எந்திர கோளாறு காரணமாக தேர்தல் தாமதமாக தொடங்கி உள்ளது. அந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் நேரம் அளிக்க வேண்டும்“ என்று தெரிவித்து இருந்தார்.




வெள்ளி, 12 ஏப்ரல், 2019

ராகுல் காந்தியின் உருக்கமான பேச்சு..! | Rahul Gandhi about Neet Anitha |...

தூத்துக்குடியில் தமிழிசை மீது மீண்டும் ஓரு பரபரப்பு புகார் பரபரப்பு

தூத்துக்குடி தொகுதி மக்களின் குரல் | ராகுல் vs மோடி | Thoothukudi Consti...

கிருஷ்ணகிரியிலிருந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தேர்தல் பிரச்சா...

புதன், 10 ஏப்ரல், 2019

ஏரல் அருகே பிணமாக கிடந்தவர்கள் அடையாளம் தெரிந்தது,

ஏரல் அருகே பிணமாக கிடந்தவர்கள் அடையாளம் தெரிந்தது, தம்பதி விஷம் குடித்து தற்கொலை - திருமணத்திற்கு மகள் மறுத்ததால் பரிதாபம்
ஏரல் அருகே பிணமாக கிடந்தவர்கள் திருப்பூர் தம்பதி என்று தெரியவந்துள்ளது. மகள் திருமணத்திற்கு மறுத்ததால் அவர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர்.
ஏரல்,

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உமரிக்காடு மெயின் ரோட்டில் அரசு சிமெண்டு குடோன் உள்ளது. இதன் அருகில் தாமிரபரணி ஆற்றங்கரையில் சீமை கருவேல மரங்கள் நிறைந்த காட்டு பகுதியில் நேற்று முன்தினம் ஆண், பெண் பிணங்கள் கிடந்தன. இறந்து ஒரு வாரத்துக்கு மேல் ஆனதால் உடல்கள் அழுகிய நிலையில் காணப்பட்டன. அவர்களின் உடல்களை காட்டு விலங்குகள் தின்றதால் உருக்குலைந்த நிலையில் இருந்தன.
இதுகுறித்து உமரிக்காடு கிராம நிர்வாக அலுவலர் முத்துமாரி ஏரல் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு சகாய ஜோஸ், ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாணி மற்றும் போலீசார் சென்றனர். பின்னர் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஏரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுகா குங்காருபாளையத்தை சேர்ந்த சிவசுப்பிரமணியன் (வயது 66), அவருடைய மனைவி பாலாமணி (55) என்பது தெரியவந்தது.

விவசாயியான சிவசுப்பிரமணியனுக்கு ஒரு மகள் உள்ளார். அவர் படித்து முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு வீட்டில் திருமணம் பேசியதாக தெரிகிறது. ஆனால் அவர் திருமணத்திற்கு மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மனமுடைந்த சிவசுப்பிரமணியன், பாலாமணி ஆகியோர் கடந்த 4-ந் தேதி வீட்டில் இருந்து யாரிடமும் சொல்லாமல் வெளியே சென்று விட்டனர். வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த மகள் வீட்டில் தனது பெற்றோர்கள் இல்லாததால் அதிர்ச்சி அடைந்தார். மேலும் காங்கேயம் போலீஸ் நிலையத்திலும் புகார் செய்தார்.

காங்கேயம் போலீசார் சிவசுப்பிரமணியனின் செல்போன் எண்ணை வைத்து அவர் இருக்கும் இருப்பிடத்தை அறிய முயன்றனர்.

அப்போது அவர் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் காவல்நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து காங்கேயம் போலீசார், ஆத்தூர் போலீஸ் நிலையம் வந்து, காணாமல் போன கணவன்-மனைவி புகைப்படத்தை கொடுத்துவிட்டு தகவல் தெரிவிக்க சொல்லிவிட்டு சென்று விட்டனர்.

இந்த நிலையில் அவர்கள் உமரிக்காடு காட்டுப்பகுதியில் ஆற்றங்கரையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணத்திற்கு மகள் மறுத்ததால் தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.





தூத்துக்குடி - சாணக்யா நடத்திய பிரம்மாண்ட கருத்து கணிப்பு முடிவுகள்.

தூத்துக்குடியில் மு.க.ஸ்டாலின்- அதிமுக- பா.ஜனதா அரசுகளுக்கு தேர்தலில் தக்க தண்டனை தர வேண்டும்


அதிமுக- பா.ஜனதா அரசுகளுக்கு தேர்தலில் தக்க தண்டனை தர வேண்டும்: மு.க.ஸ்டாலின்
கோப்புப்படம்



















தூத்துக்குடி:

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

நேற்று அவர் பாளை, சங்கரன்கோவிலில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். பின்பு இரவில் நெல்லை தாழையூத்தில் உள்ள தனியார் விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுத்தார். இன்று காலை அவர் தூத்துக்குடி வந்தார்.

அவர் தூத்துக்குடி- நெல்லை நான்கு வழிச்சாலையில் உள்ள மங்களகிரி விலக்கு பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் தூத்துக்குடி தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி மற்றும் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் ஜெயக்குமார் ஆகியோரை ஆதரித்து பேசினார்.

வருகிற 18-ந்தேதி நடைபெறும் பாராளுமன்ற தேர்தல் அதையொட்டி நடைபெறவுள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு கேட்டு ஓடிவந்துள்ளேன். தேர்தலுக்காக மட்டும் வந்துசெல்பவர்கள் அல்ல நாங்கள். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒன்றென கருதி உழைக்கும் உன்னதமான இயக்கம் தி.மு.க.

கலைஞர் இருந்திருந்தால் இன்று உங்கள் முன்னால் வந்து வாக்கு கேட்டிருப்பார். இன்று அவரது மகனாக வாக்கு கேட்டு வந்துள்ளேன். பிரிட்டிஷ் அரசை எதிர்த்து இந்திய மக்கள் அனைவரும் சேர்ந்து மூச்சுவிட்டாலே போதும் ஓடிவிடுவார்கள் என்றுகூறிய வ.உ.சி. பிறந்த மண் இது.

அனைத்து தொகுதிகளிலுமே உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுபவர்களை கலைஞரின் பிள்ளையாக கருதி வாக்களிக்க கேட்டு வந்துள்ளேன். இங்கு கலைஞரின் மகள், எனது தங்கைக்காக வாக்கு கேட்கிறேன். கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும் என்பது போல கனிமொழி கவிஞர், பத்திரிகையாளர், பேச்சாளர், எழுத்தாளர் என ஒவ்வொரு துறையிலும் தனிமுத்திரை பதித்தவர். சமூக போராளி, பாராளுமன்ற டைகர் என பட்டம் பெற்றவர். தூத்துக்குடியில் உங்களுடைய டைகராக அவர் போட்டியிடுகிறார்.

மாநிலங்களவையில் அவர் ஸ்டெர்லைட் பிரச்சனை, நீட்தேர்வு விவகாரம், மரண தண்டனை ஒழிப்பு, மகளிர் இட ஒதுக்கீடு, சமூக நீதி உள்ளிட்ட பல பிரச்சனைகளை வாதாடி, போராடி வெற்றி பெற்றுள்ளார். இவரை விட சிறந்த வேட்பாளர் உங்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லை.

மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி மாற்றப்பட வேண்டும். அதே நேரத்தில் தமிழகத்தில் ஒரே நிமிடம் ஏன்? ஒரு நொடியில் ஆட்சி மாற்றம் ஏற்படும். இதற்கு மற்ற தொகுதி மக்களை விட தூத்துக்குடி தொகுதி மக்களுக்கு முக்கிய கடமை உள்ளது.


ஸ்டெர்லைட்டை எதிர்த்து போராடிய அப்பாவி மக்கள் 13 பேரை துள்ளதுடிக்க சுட்டுக்கொன்ற அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணிக்கு தக்க தண்டனை தர வேண்டும். 100 நாட்களை கடந்து போராடிய மக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு செல்லும் போது கலெக்டர் அழைத்து பேசியிருந்தால் இந்த கொடுமை நடந்திருக்காது. மக்களை பழிவாங்கவே துப்பாக்கி சூடு நடத்தியது எடப்பாடி அரசு.

ஸ்டெர்லைட்டை எதிர்ப்பவர்களை அச்சுறுத்தவே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. எனவே இந்த கொலைகார எடப்பாடி அரசை மக்கள் தூக்கிஎறிய வேண்டும். துப்பாக்கி சூட்டிற்கு உத்தரவிட்டது யார்? எடப்பாடியா? தலைமை செயலாளரா? பிரதமர் மோடியா?. தூத்துக்குடியை சேர்ந்த 17 வயது பெண் ஸ்னோலினை சுட்டுக்கொன்றுள்ளார்கள். அவர் எழுதிய கவிதை புத்தகமாக வந்துள்ளது. காளியப்பன் என்பவரை சுட்டுக்கொல்லும்போது கடைசியில் சினிமாவில் நடிப்பது போல் நடிக்கிறாயா? என கேட்ட கொடுமை இணையத்தில் வந்துள்ளது.

துப்பாக்கி சூடு நடந்ததும், தூத்துக்குடிக்கு வந்து காயம்பட்டவர்களை பார்த்து ஆறுதல் கூறினேன். என் வாழ்நாளில் இப்படிப்பட்ட காட்சிகளை நான் பார்த்ததில்லை. சம்பவம் நடந்த நேரத்தில் முதல்-அமைச்சர் இங்கு வந்தாரா? ஒரு அறிக்கையாவது விட்டாரா? பிரதமர் மோடி இரங்கல் செய்தியாவது கூறினாரா? வடமாநிலத்தில் ஒரு பிரச்சனை என்றால் அறிக்கைவிடுகிறார்.

எனவே தான் அவரை பாசிச மனப்பான்மை கொண்ட பிரதமர் என கூறுகிறோம். இந்த வார்த்தையை தொடங்க காரணமாக இருந்தது தூத்துக்குடி. இந்த தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் தமிழிசை சென்னையில் இருந்து விமானத்தில் தூத்துக்குடி வந்தபோது பாசிச மோடி ஆட்சி ஒழிக என கோ‌ஷமிட்ட மாணவி சோபியாவை அவதூறாக திட்டி, அவரை கைது செய்ய செய்தார். பாசிச மோடி ஆட்சி என்று மாணவி சோபியா சொன்னதை இன்று நாங்கள் பலமுறை சொல்கிறோம். மோடிக்கு எதிரான முழக்கத்தை முன்வைக்க காரணமாக இருந்த தமிழிசைக்கு நன்றி கூறுகிறோம்.


தூத்துக்குடியில் தமிழிசை போட்டியிடவில்லை, வசமாக மாட்டிக்கொண்டார். இங்குதான் ஸ்டெர்லைட் பிரச்சனை, மீனவர் பிரச்சனை, உப்பள பிரச்சனை, தீப்பெட்டி தொழில் பிரச்சனை, சுற்றுச்சூழல் பிரச்சனை உள்ளது. எதற்கும் குரல் கொடுக்காத தமிழிசை, என்ன தைரியத்தில் வந்தார். தோற்பதற்காக வந்தாரா? ஒருவேளை அவரது கட்சியினரே சதி செய்து இங்கு அனுப்பிவைத்தார்களா? ஸ்டெர்லைட் போராட்டத்தை போன்று கூடங்குளம் போராட்டத்திலும் அடக்குமுறையை கையாண்டது இந்த அரசு.

இந்திய பாதுகாப்புக்கு அனைத்தையும் செய்கிறோம் என்கிறார் மோடி. புல்வாமாவில் 40 வீரர்கள் கொல்லப்பட்டார்களே, இதுதான் பாதுகாக்கும் லட்சணமா? உள்ளூர் பயங்கரவாதிகளுக்கு வெடி பொருட்கள் எப்படி கிடைத்தது? பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி அளித்த புள்ளிவிபரத்தில் கடந்த 5 ஆண்டுகளில் அதிகமான மதக்கலவரங்கள், அதனால் அதிகமானோர் கொல்லப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளது.

இதில் நிறைய சம்பவங்கள் நடந்தது பா.ஜனதா செல்வாக்கு மிகுந்த உத்தரபிரதேசம், குஜராத், பீகார், மகாராஷ்டிரா மாநிலங்கள் ஆகும். அதைப்போன்று தமிழகத்திலும் கொண்டுவர முயற்சிக்கிறார்கள். தி.மு.க. இருக்கும்வரை அது நடக்காது.

கடந்த 20-ந்தேதியில் இருந்து நான் பிரசாரத்தை தொடங்கியது முதல் 3 கேள்விகளை கேட்டுள்ளேன். ஜெயலலிதா மரணம் எப்படி நடந்தது? அது மர்மமரணம் என்று அ.தி.மு.க.வை சேர்ந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமே கூறியுள்ளார். அப்போது மர்ம மரணம் என்று கூறியவர் அதுதொடர்பாக விசாரணை கமி‌ஷனில் 6 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாதது ஏன்? ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வராக இருந்தவர். எனவே அவரது மரணம் குறித்து பேச எதிர்கட்சி தலைவர் என்ற முறையில் எனக்கு தகுதி உண்டு. இந்த கேள்விக்கு இதுவரை பதில் வரவில்லை.

கொடநாட்டில் கொள்ளை முயற்சியில் நடந்த கொலைகளுக்கு யார் பின்னணி? 3-வதாக பொள்ளாச்சியில் 7 வருடமாக 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்கள். அந்த கொடுமையை படம் எடுத்து மிரட்டி பணம் பறித்தவர்கள் யார்? உளவுத்துறை இதை முன்கூட்டியே சொல்லாதது ஏன்? இதற்கு காரணமான அ.தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவர்களை சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தி குற்றவாளிகளை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். எனது இந்த 3 கேள்விகளுக்கு இதுவரை பதில் வரவில்லை.

இந்த ஆட்சியில் பெண்களுக்கு நடந்த கொடுமை மோடியின் கண்களுக்கு தெரியவில்லையா? தெரியும். அதனால் தான் அவரை பாசிச பிரதமர் என்கிறோம்.

வருகிற பாராளுமன்ற தேர்தல் மற்றும் 22 தொகுதிக்கும் இடைத்தேர்தல் முடிந்தவுடன் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும். மாநிலத்தில் எடப்பாடி ஆட்சி தூக்கிஎறியப்படும். தமிழக சட்டமன்றத்தில் இப்போது தி.மு.க.வுக்கு 88 எம்.எல்.ஏ.க்கள், காங்கிரசுக்கு 8 எம்.எல்.ஏ.க்கள், முஸ்லீம் லீக் 1 என தி.மு.க. அணியில் 97 எம்.எல்.ஏ.க்கள் உள்ளன. 22 தொகுதி இடைத்தேர்தலுக்கு பின்னர் அவை 119 ஆக உயரும். 117 எம்.எல்.ஏ.க்கள் இருந்தாலே ஆட்சி அமைக்கலாம் என்ற நிலையில் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைக்கும்.

கடந்த தேர்தலில் வாக்குறுதி அளித்த மோடி எதையும் நிறைவேற்றவில்லை. ஆனால் தற்போது தேர்தல் அறிக்கையில் கனவுகள், கற்பனைகள் காகிதங்களில் கொடுத்துள்ளார். 5 ஆண்டுகளில் என்ன செய்தார்கள் என்று சொல்ல முடியவில்லை. முதலில் மக்களின் தேவையை நிறைவேற்றியதாகவும், தற்போது மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதாகவும் கூறியுள்ளீர்கள். இப்போது மக்களின் விருப்பம் நீங்கள் வீட்டுக்கு போகவேண்டும் என்பதுதான். தி.மு.க. தேர்தல் அறிக்கை மிக தெளிவாக உள்ளது.

தி.மு.க. வெற்றி பெற்றதும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை கொள்கை முடிவெடுத்து சிறப்பு சட்டம் இயற்றி நிரந்தரமாக மூடுவோம். துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டதற்கு காரணமான போலீஸ் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்போம். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படும். தூத்துக்குடியின் விமான நிலையம் மேம்படுத்தப்படும். சேதுசமுத்திர திட்டம் நிறைவேற்றப்படும். மழைக்காலங்களில் உப்பள தொழிலாளர்கள் பாதிக்காத வகையில் நிரந்தர தீர்வு காண தனி ஆணையம் அமைக்கப்படும். மீனவர்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். கடலோர பகுதிகள் புயல் பாதிப்புகளில் இருந்து நிரந்தரமாக பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் ஒரு சில பிரிவுகளை தேவேந்திரர் என அழைக்க தாழ்த்தப்பட்டோர் ஆணையம் மூலம் தீர்வு காணப்படும். 50 லட்சம் மக்கள் நலப்பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். கேபிள் டி.வி. கட்டணம் குறைக்கப்படும். மாணவர்களின் கல்வி கடன், விவசாயிகளின் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும். கலைஞர் கூறியது போல நாங்கள் சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம். எனவே உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களியுங்கள்.

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...