திங்கள், 30 செப்டம்பர், 2019

ஏரல் அருகே தூர்வாரப்படாததால் கருவேலமரங்கள் ஆக்கிரமித்த அகரம் குளம்







ஏரல், செப்.30: ஏரல் அருகேயுள்ள அகரம் குளம் தூர்வாரப்படாததால் சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு, மணல் மேடானதால் குளத்தில் தண்ணீர் தேக்க முடியவில்லை.  குளத்தை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஏரல் அருகேயுள்ள சுமார் 75 ஏக்கர் பரப்பளவு கொண்ட அகரம் குளத்தின் மூலம் 250 ஏக்கரில் விவசாயம் நடந்து வந்தது. இந்த குளத்திற்கு வைகுண்டம் வடகால் மூலம் ஆறுமுகமங்கலம் குளத்திற்கு தண்ணீர் வந்து அங்குள்ள 3ம் நம்பர் மடை வழியாக தண்ணீர் வருகிறது. குளத்தில் தண்ணீர் இருக்கும் போது இப்பகுதிகளில் நிலத்தடிநீர் உயர்ந்து தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைத்தது. இதனால் இப்பகுதியில் வாழை, தென்னை மரங்கள் செழித்து வளர்ந்தன. இந்த குளம் பல ஆண்டுகளாக தூர்வாராததால் மணல் மேடுகளாக மாறியது. மேலும் சீமை கருவேலமரங்கள் ஆக்கிரமித்து குளம் இருந்த இடம் தெரியாமல் காடு போல் உள்ளது.
இதனால் குளத்தில் அதிகளவு தண்ணீர் தேக்கி வைக்க முடிவதில்லை. ஒரு மாத விவசாயத்திற்கு கூட தண்ணீர் போதுமானதாக இல்லாததால் கடும் வறட்சி ஏற்பட்டு தென்னைகள் பட்டுப்போய் உள்ளது. வாழை, நெல் விவசாயம் கேள்வி குறியாகிவிட்டது.  

குளத்தில் தண்ணீர் இல்லாததால் நிலத்தடிநீரும் வற்றி உவர்ப்பாக மாறி வருகிறது. வைகுண்டம் வடகாலில் முறையாக தண்ணீர் வராததாலும், மழைக்காலத்தில் வரும் தண்ணீரை அதிகளவு குளத்தில் சேமித்து வைக்க முடியாத நிலையில் குளம் மணல் மேடாக உள்ளதால் எப்போதும் குளம் வறண்ட நிலையிலேயே உள்ளது. இதனால் அகரம் பகுதி விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே அரசு குளத்தில் வளர்ந்துள்ள முள்செடிகள், மணல் மேடுகளை அகற்றி தூர்வாரி சீரமைத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.வைகுண்டம் ஒன்றிய திமுக விவசாய அணி துணை அமைப்பாளர் அகரம் பாஸ்கர் கூறியிருப்பதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆண்டுக்காண்டு பருவமழை பொய்த்து வருவதாலும், வைகுண்டம் வடகாலில் முறையாக தண்ணீர் வராததினாலும் அகரம் குளத்திற்கு தண்ணீர் வந்து சேர்வதில்லை. மேலும் குளத்தில் கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளதால் காடு போல் உள்ளது. குளமும் தூர்வாரப்படாததால் மணல் திட்டுகள் ஏற்பட்டு அதிகளவு தண்ணீரை சேமிக்க முடிவதில்லை. இதனால் இப்பகுதியில் விவசாயம் கேள்விக்குறியாகி உள்ளது. அரசு உடனடியாக அகரம் குளத்தை ஆக்கிரமித்துள்ள முள்செடிகளை அப்புறப்படுத்தி, தூர்வாரி அதிகளவு தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றார்.

புதன், 25 செப்டம்பர், 2019

ஏரல் தாமிரபரணியில் அலைச்செடிகள் அகற்றம்



ஏரல், செப். 25: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக என்எஸ்எஸ் சார்பில் 50வது ஆண்டு பொன்விழா என்எஸ்எஸ்  நாளினை முன்னிட்டு தாமிரபரணி தூய்மை பணி திட்ட துவக்க விழா ஏரலில் நடந்தது. துவக்க விழாவிற்கு ஆதித்தனார்  கல்லூரி என்எஸ்எஸ்  அலுவலர் கதிரேசன் வரவேற்றார். வட்டார வளர்ச்சி அலுவலர் நாகராஜன், பல்கலைக்கழக சமூகவியல்துறை இணைப் பேராசிரியர் முருகேசன் முன்னிலை வகித்தனர். தூய்மை பணியினை என்எஸ்எஸ் ஒருங்கிணைப்பாளர் ராஜரத்தினம் துவக்கி வைத்தார்.

இதில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட தூத்துக்குடி காமராஜ் கல்லூரி, வ.உ.சி கல்லூரி, தூய சவேரியார் கல்லூரி, கீதாஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருச்செந்தூர் கல்லூரி, சாயர்புரம் போப் கல்லூரி, பிஷப் கால்டுவெல் கல்லூரி, கே.ஜி.எஸ் கலைக்கல்லூரிகளைச் சேர்ந்த 600 மாணவ, மாணவிகள் பங்கேற்று ஆற்றில் தூய்மை பணிகளை மேற்கொண்டனர். இதில் ஏரல் சேர்மன் கோயில் பகுதியில் தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் கிடந்த பிளாஸ்டிக் பொருட்கள், நச்சுக்கழிவுகள், அமலை செடிகளை அப்புறப்படுத்தினர்.

நிறைவு விழாவில் பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணி தூய்மைப் பணிகளை பார்வையிட்டு மாணவ, மாணவிகளை பாராட்டி பேசுகையில், “நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்திற்கு முக்கிய நீராதாரமாக விளங்ககூடிய தாமிரபரணியை காப்பது நமது கடமை. இந்த பணிகள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்” என்றார். கீதாஜீவன் எம்.எல்.ஏ, சேர்மன் கோயில் பரம்பரை அக்தார் கருத்தபாண்டிய நாடார், ஏரல் பேரூராட்சி முன்னாள் தலைவர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்று மாணவர்களை வாழ்த்தி பேசினார். கீதாஜீவன் கல்லூரி தீபன்குமார் நன்றி கூறினார். ஏற்பாடுகளை பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்டம், கீதாஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மலர்விழி செய்திருந்தார்.

திங்கள், 23 செப்டம்பர், 2019

ஏரலில் 450 பயனாளிகளுக்கு ரூ.2 கோடி கடன் - அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்

ஏரலில் 450 பயனாளிகளுக்கு ரூ.2 கோடி கடன் - அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்
ஏரலில் 450 பயனாளிகளுக்கு ரூ.2 கோடி கடன்களை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.
ஏரல், 

ஏரல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டிடம் புதுப்பித்து கட்டப்பட்டு, நவீனமயமாக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமை தாங்கி, புதிய கட்டிடத்தை திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றினார். சண்முகநாதன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.
தொடர்ந்து ஏரலில் உள்ள ஒரு மண்டபத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூட்டுறவு துறை சார்பில் 450 பயனாளிகளுக்கு ரூ.2 கோடி மதிப்பிலான பல்வேறு கடன்களை வழங்கினார். பின்னர் வருவாய் துறை சார்பில் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா, மின்னணு குடும்ப அட்டை, சமூக பாதுகாப்பு திட்டத்தில் உதவித்தொகை, மானிய விலையில் ஸ்கூட்டர் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மொத்தம் 134 பயனாளிகளுக்கு ரூ.32 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

விழாவில் சின்னப்பன் எம்.எல்.ஏ., ஏரல் தாசில்தார் அற்புதமணி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், கூட்டுறவு மண்டல இணை பதிவாளர் இந்துமதி, துணை பதிவாளர் ரவீந்திரன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஆறுமுகநயினார், மாவட்ட இளைஞர் பாசறை இணை செயலாளர் காசிராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.








புதன், 18 செப்டம்பர், 2019

ஏரல் அருகே சாலையோர பள்ளத்துக்குள் கல்லூரி பஸ் பாய்ந்தது: 45 மாணவ-மாணவிகள் உயிர் தப்பினர்

ஏரல் அருகே சாலையோர பள்ளத்துக்குள் கல்லூரி பஸ் பாய்ந்தது: 45 மாணவ-மாணவிகள் உயிர் தப்பினர்
ஏரல் அருகே சாலையோர பள்ளத்துக்குள் கல்லூரி பஸ் பாய்ந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக 45 மாணவ-மாணவிகள் உயிர் தப்பினர்.
ஏரல், 

தூத்துக்குடி அருகே தனியார் பொறியியல் கல்லூரிக்கு சொந்தமான பஸ்சில் நேற்று காலையில் வழக்கம்போல் ஏரலில் இருந்து மாணவ-மாணவிகளை ஏற்றிக் கொண்டு கல்லூரிக்கு புறப்பட்டது. அந்த பஸ்சில் சுமார் 45 மாணவ-மாணவிகள் பயணம் செய்தனர்.
ஏரல் அருகே கொற்கை மணலூர் அருகில் சென்றபோது, எதிரே வந்த வாகனத்துக்கு வழி விடுவதற்காக பஸ்சை சாலையோரமாக டிரைவர் ஒதுக்கினார். அப்போது அந்த பஸ் சாலையோர பள்ளத்துக்குள் கவிழும் நிலை ஏற்பட்டதால், உடனே டிரைவர் பஸ்சை வலதுபுறமாக திருப்பினார். இதனால் அந்த பஸ், சாலையின் வலதுபுற பள்ளத்தில் பாய்ந்து நின்றது.

உடனே பஸ்சில் இருந்த மாணவ-மாணவிகள் அனைவரும் பதறியடித்தவாறு கீழே இறங்கினர். பின்னர் டிராக்டர் மூலம் கயிறு கட்டி, அந்த பஸ்சை சாலைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அந்த பஸ்சில் மாணவ-மாணவிகள் கல்லூரிக்கு புறப்பட்டு சென்றனர். இதனால் அந்த வழியாக சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விபத்து நிகழ்ந்த இடத்தின் அருகில் வலதுபுறம் சுமார் 25 அடி ஆழ பள்ளம் உள்ளது. அதிர்ஷ்டவசமாக பஸ் அந்த பள்ளத்தில் பாயாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

ஏரல் அருகே உமரிக்காட்டில் இருந்து கொற்கை குளம் வரையிலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய சாலை அமைக்கப்பட்டது. குறுகலான இந்த சாலையின் இருபுறமும் சரள் மண் முறையாக பரப்பப்படாததால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.

எனவே சாலையின் இருபுறமும் சரள் மண்ணை முறையாக பரப்ப வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.




திங்கள், 16 செப்டம்பர், 2019

ஏரல் ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. நேற்றும் மாவட்டத்தில் பல பகுதிகளில் மழை:உப்பளங்கள் தண்ணீரில் மூழ்கினஉற்பத்தி பாதிப்பு

தூத்துக்குடி பகுதியில் பரவலாக மழை:உப்பளங்கள் தண்ணீரில் மூழ்கினஉற்பத்தி பாதிப்பு
ஏரல், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. நேற்றும் மாவட்டத்தில் பல பகுதிகளில் மழை செய்து. ஏரல் பகுதியில் நேற்று மாலை 3.30 மணிக்கு தொடங்கிய மழை 4 மணி வரை பெய்தது. இதனால் ஏரல் பஜார் பகுதி, பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கியது. 
தூத்துக்குடி பகுதியில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழையால் உப்பளங்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி, 

தூத்துக்குடி பகுதியில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழையால் உப்பளங்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

கடம்பூர் பகுதியில் 30 மி.மீ. மழை

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாவட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டி, ஏரல், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. நேற்றும் மாவட்டத்தில் பல பகுதிகளில் மழை செய்து. ஏரல் பகுதியில் நேற்று மாலை 3.30 மணிக்கு தொடங்கிய மழை 4 மணி வரை பெய்தது. இதனால் ஏரல் பஜார் பகுதி, பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கியது. ஸ்ரீவைகுண்டம் பகுதியில் மதியம் சுமார் 20 நிமிடங்கள் மழை பெய்தது.
கடம்பூர் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 2 மணி நேரம் மழை பெய்தது. இந்த பகுதியில் 30 மில்லிமீட்டர் மழை பதிவானது. அதே போல் தென்திருப்பேரை, திருச்செந்தூர் பகுதிகளில் காலை முதலே வானம் மேகமூட்டமாக காணப்பட்டது.

உப்பளங்கள் மூழ்கின

தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தொடந்து சாரல் மழை விட்டுவிட்டு பெய்தது. இதனால் தூத்துக்குடியில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. அதே போன்று கடந்த 2 நாட்களாக தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் பகுதியிலும் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று மதியம் சுமார் 3 மணி அளவில் பலத்த மழை பெய்தது. இதனால் ரோடுகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது.

அங்கு உள்ள வாரச்சந்தையிலும் தண்ணீர் தேங்கியதால், சந்தையில் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் அந்த பகுதிகளில் உள்ள உப்பளங்களிலும் மழைநீர் தேங்கியது. இதனால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. மீண்டும் உற்பத்தி தொடங்க சில நாட்கள் ஆகலாம் என்று உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் அனல் காற்று வீசி வந்த தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நேற்று காலை முதல் இதமான சூழ்நிலை காணப்பட்டது.






ஏரல் அருகேவீட்டின் மாடியில் பதுக்கிய வெடிகள் வெடித்து சிதறினமூதாட்டி படுகாயம்

ஏரல் அருகேவீட்டின் மாடியில் பதுக்கிய வெடிகள் வெடித்து சிதறினமூதாட்டி படுகாயம்
ஏரல் அருகே வீட்டின் மாடியில் பதுக்கிய வெடிகள் வெடித்து சிதறியதில், மூதாட்டி படுகாயம் அடைந்தார்.
ஏரல், 

ஏரல் அருகே வீட்டின் மாடியில் பதுக்கிய வெடிகள் வெடித்து சிதறியதில், மூதாட்டி படுகாயம் அடைந்தார்.

வெடிகள் வெடித்து சிதறின

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே கொற்கை மணலூர் நடுத்தெருவைச் சேர்ந்தவர் மந்திரம் (வயது 50). இவரது வீட்டின் மாடியில் உள்ள அறையில், அவருடைய உறவினர் ஒருவர் விழாக்களுக்கு பயன்படுத்தக்கூடிய வெடிகளை பதுக்கி வைத்து இருந்ததாக கூறப்படுகிறது.
நேற்று மந்திரம் தன்னுடைய குடும்பத்தினருடன் மேல ஆழ்வார்தோப்பு கோவிலுக்கு சென்றார். அப்போது மாலை 5.30 மணியளவில் மந்திரத்தின் வீட்டின் மாடியில் உள்ள அறையில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த வெடிகள் வெடித்து சிதறின. இதனால் மாடியில் உள்ள அறையின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்தது.

மூதாட்டி படுகாயம்

அந்த கட்டிட இடிபாடுகள், பக்கத்து வீடுகளிலும் விழுந்தன. இதில் 10 வீடுகள் சேதம் அடைந்தன. கட்டிட இடிபாடுகள் விழுந்ததில், பக்கத்து வீட்டைச் சேர்ந்த பிச்சிப்பூ அம்மாளின் (75) காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாணி, தாசில்தார் அற்புதமணி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். வெடிவிபத்து நிகழ்ந்த இடத்தில் சிதறிய வெடி மருந்துகளை தடய அறிவியல் உதவி இயக்குனர் கலா லட்சுமி சேகரித்து ஆய்வுக்கு அனுப்பினார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



சனி, 14 செப்டம்பர், 2019

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை

மாவட்டம் முழுவதும் பரவலாக மழை:தூத்துக்குடிக்கு வந்த விமானம் தரை இறங்க முடியாமல் திரும்பியது
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பரவலாக நேற்று மழை பெய்தது. இதனால் தூத்துக்குடிக்கு வந்த விமானம் தரை இறங்க முடியாமல் மதுரைக்கு திரும்பியது.
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பரவலாக நேற்று மழை பெய்தது. இதனால் தூத்துக்குடிக்கு வந்த விமானம் தரை இறங்க முடியாமல் மதுரைக்கு திரும்பியது.

பலத்த மழை

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்தது. இதனால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று மதியம் திடீரென வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. மதியம் 2-30 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. இந்த பலத்த மழை சுமார் ½ மணி நேரம் கொட்டித்தீர்த்தது. அதன்பிறகு தொடர்ந்து தூறிக் கொண்டே இருந்தது.
இந்தமழை காரணமாக தூத்துக்குடியில் முக்கிய சாலைகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது. இதனால் வாகனங்கள் ஊர்ந்து சென்றது. வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டனர்.

விமானம் திரும்பியது

சென்னையில் இருந்து தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்துக்கு நேற்று மதியம் 2-30 மணியளவில் தனியார் விமானம் வந்தது. அந்த விமானத்தில் 57 பயணிகள் இருந்தனர். அப்போது பலத்த மழை பெய்ததால் விமானம் தரை இறங்குவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து விமானம் தரையிறங்காமல் சிறிது நேரம் வட்டமடித்தது. பின்னர் விமானம் மதுரைக்கு திரும்பி சென்றது. மழை நின்ற பிறகு மீண்டும் விமானம் மதுரையில் இருந்து புறப்பட்டு மாலை 4-20 மணிக்கு தூத்துக்குடிக்கு வந்து சேர்ந்தது.

இதைத்தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்ல தயாராக இருந்த 66 பயணிகளை ஏற்றிக்கொண்டு அந்த விமானம் மாலை 4-40 மணிக்கு புறப்பட்டு சென்றது.

பொதுமக்கள் மகிழ்ச்சி

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது. ஏரல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மதியம் 2.45 மணியளவில் பலத்த மழை பெய்தது. சுமார் அரை மணி நேரம் நீடித்த மழையால் சாலைகள், தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஏரல் பஜாரில் குளம் போன்று தண்ணீர் தேங்கியது. பின்னர் வடிகாலில் மழைநீர் வடிந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு பெய்த பலத்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதேபோன்று தென்திருப்பேரை, குரும்பூர், ஆழ்வார்திருநகரி, ஸ்ரீவைகுண்டம் பகுதிகளிலும் மதியம் சாரல் மழை சுமார் 45 நிமிடம் பெய்தது.

மழை அளவு

நேற்று மாலை 4 மணி நிலவரப்படி பெய்த மழை விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

காயல்பட்டினம் - 10

விளாத்திகுளம் - 21

காடல்குடி - 14

வைப்பார் - 22

சூரங்குடி - 2

கயத்தாறு - 2

கடம்பூர் - 10

கழுகுமலை - 17

ஓட்டப்பிடாரம் - 13

மணியாச்சி - 53

கீழஅரசடி - 1

ஸ்ரீவைகுண்டம் - 4.2

தூத்துக்குடி - 0.4

வியாழன், 12 செப்டம்பர், 2019

ஏரல் தாலுகாக்களுக்கு பொது வினியோக திட்ட சிறப்பு முகாம்நாளை நடக்கிறது

பொது வினியோக திட்ட சிறப்பு முகாம்நாளை நடக்கிறது
தூத்துக்குடி மாவட்டத்தில் பொது வினியோக திட்ட சிறப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் பொது வினியோக திட்ட சிறப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

சிறப்பு முகாம்
பொது வினியோக திட்டம் சிறப்பாக நடக்க வேண்டும் என்பதற்காக பொது வினியோக திட்டத்தின் கீழ், மாதம்தோறும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த மாதத்துக்கான (செப்டம்பர்) சிறப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அந்தந்த தாசில்தார் அலுவலகத்தில் நடக்க உள்ளது.

ஸ்மார்ட் கார்டில் முகவரி மாற்றம், பெயர் திருத்தங்கள், உறுப்பினர்கள் சேர்த்தல் மற்றும் நீக்குதல் போன்ற குறைகள் முகாமிலேயே சரிசெய்து வழங்கப்படும். அதேபோல் ஸ்மார்ட் கார்டில் புகைப்படம் பதிவேற்றம் செய்து கொடுக்கப்படும்.

மேற்பார்வை அலுவலர்கள்

தூத்துக்குடி தாலுகாவிற்கு தூத்துக்குடி உதவி கலெக்டரும், ஸ்ரீவைகுண்டம் மற்றும் ஏரல் தாலுகாக்களுக்கு தூத்துக்குடி சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியரும், திருச்செந்தூர் தாலுகாவிற்கு திருச்செந்தூர் உதவி கலெக்டரும், சாத்தான்குளம் தாலுகாவிற்கு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரும், கோவில்பட்டி தாலுகாவிற்கு கோவில்பட்டி உதவி கலெக்டரும், ஓட்டப்பிடாரம் தாலுகாவிற்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரும், விளாத்திகுளம் தாலுகாவிற்கு தூத்துக்குடி மாவட்ட வழங்கல் அலுவலரும், எட்டயபுரம் தாலுகாவிற்கு மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளரும், கயத்தாறு தாலுகாவிற்கு கலால் உதவி ஆணையரும் மேற்பார்வை அலுவலர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே இந்த முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு குறைகள் இருப்பின் அதுகுறித்து தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

ஏரல் அருகேகிராம மக்கள் திடீர் சாலைமறியல்போக்குவரத்து பாதிப்பு

ஏரல் அருகேகிராம மக்கள் திடீர் சாலைமறியல்போக்குவரத்து பாதிப்பு
ஏரல் அருகே கிராம மக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஏரல், 

ஏரல் அருகே கிராம மக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலைமறியல்

ஏரல் போலீசார் நேற்று முன்தினம் இரவில் ஏரல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஏரல் அருகே சிவகளை பரும்பு ஊர் சங்க கட்டிடம் முன்பு நின்ற சிலரை வீடுகளுக்கு செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். இதற்கிடையே போலீசார் தங்களை அவதூறாக பேசியதாகவும், பொய் வழக்கு போடுவதாக மிரட்டியதாகவும் கூறி, நேற்று காலையில் சிவகளை பரும்பு கிராம மக்கள் அங்குள்ள மெயின் ரோட்டில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிவகளை-ஸ்ரீவைகுண்டம் மெயின் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த வழியாக சென்ற வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாணி, தாசில்தார் அற்புதமணி, வருவாய் ஆய்வாளர் சக்கரவர்த்தி, கிராம நிர்வாக அலுவலர்கள் கார்த்திக், ராமசாமி மற்றும் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து சாலைமறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...