தூத்துக்குடி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக 17 இடங்களில் மாணவர்களின் போராட்டம் தொடர்கிறது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக 17 இடங்களில் மாணவர்களின் போராட்டம் தொடர்கிறது. இந்த போராட்டத்துக்கு வணிகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர். நேற்று முழு கடையடைப்பு போராட்டத்தால் பஜார்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
மாணவர்கள் போராட்டம்
தமிழர்களின் பாரம்பரிய அடையாளமான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும், வெளிநாட்டைச் சேர்ந்த பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும், வெளிநாட்டு குளிர்பானங்களை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள எஸ்.ஏ.வி. விளையாட்டு மைதானத்தில் தொடர்ந்து 4-வது நாளாக நேற்று மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முழு கடை அடைப்பு
இந்த நிலையில் நேற்று தமிழ்நாடு வணிகர் சங்கம் சார்பில் கடை அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. மாவட்டத்தில் சுமார் 89 ஆயிரம் கடைக்கள் அடைக்கப்பட்டன. தூத்துக்குடி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 55 ஆயிரம் கடைக்கள் அடைக்கப்பட்டு இருந்தன.
லாரி-ஆட்டோ ஓடவில்லை
தூத்துக்குடியில் பெரும்பாலான தனியார் பஸ்கள், லாரிகள், ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள் ஓடவில்லை. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் பெரும்பாலான விசைப்படகுகள், நாட்டு படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
தூத்துக்குடி டாக்டர்கள் சங்கத்தை சேர்ந்த டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் மத்தியில் பேசினார்கள். பின்னர் ஆஸ்பத்திரிக்கு சென்ற அவர்கள், கருப்பு பேட்ஜ் அணிந்தவாறு பணியாற்றினார்கள். மருத்துவ துறை அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில், தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அரசு ஊழியர்கள்
மாவட்டத்தில் நேற்று பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. பல கல்லூரிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டு இருந்தது. விடுமுறை வழங்காத கல்லூரியில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து, கல்லூரி வளாகத்தில் போராட்டம் நடத்தினார்கள். அரசு ஊழியர்கள், அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் ஒருநாள் விடுப்பு எடுத்து, மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, தங்களின் ஆதரவை தெரிவித்தனர்.
சினிமா காட்சிகள் ரத்து
மாவட்ட போட்டோ ஸ்டூடியோ உரிமையாளர்கள் குரூஸ் பர்னாந்த் சிலை முன்பு இருந்து பழைய பஸ் நிலையம் அருகே உள்ள எஸ்.ஏ.வி. பள்ளி விளையாட்டு மைதானம் வரை ஊர்வலமாக வந்தனர். அவர்கள் அங்கு போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு ஆதரவாக பேசினார்கள். தூத்துக்குடியில் உள்ள தியேட்டர்களில் காலை மற்றும் மதிய காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.
கோவில்பட்டி
கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு கடந்த 18-ந்தேதி காலையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தை தொடங்கினர். பல்வேறு கல்லூரி மாணவ, மாணவிகள் இரவில் பனியிலும், பகலில் சுட்டெரிக்கும் வெயிலிலும் அங்கேயே தங்கியிருந்து, சமைத்து சாப்பிட்டு, போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
மாணவர்களின் போராட்டத்துக்கு அனைத்து அமைப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நேற்று 3-வது நாளாக மாணவர்களின் போராட்டம் நடந்தது.
வணிகர்கள் ஆதரவு
வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் பயணியர் விடுதிக்கு சென்று, மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். நில தரகர் சங்கத்தினர் கோவில்பட்டி காந்தி மைதானத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு எட்டயபுரம் ரோடு, மாதாங்கோவில் ரோடு, மெயின் ரோடு வழியாக பயணியர் விடுதிக்கு சென்று ஆதரவு தெரிவித்தனர். பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால், நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர்.
தர்ணா- சாலைமறியல்
அனைத்து வாகன ஓட்டுனர்கள், உரிமையாளர்கள் சங்கம் சார்பில், கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடந்தது. அனைத்து இந்திய மாணவர் பெருமன்றம் சார்பில், கோவில்பட்டி பாரத ஸ்டேட் வங்கி முன்பு திடீர் சாலைமறியல் போராட்டம் நடந்தது. சாலைமறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் வாகனங்களில் ஏற்றி சென்று, கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு இறக்கி விட்டு சென்றனர்.
கடையடைப்பு
வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் நேற்று முழு கடையடைப்பு போராட்டம் நடந்தது. அதன்படி கோவில்பட்டியில் தினசரி மார்க்கெட் உள்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டன. மருந்து கடைகள் தவிர டீக்கடைகள், ஓட்டல்கள், நகை கடைகள், ஜவுளி கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டன.
தனியார் பஸ்கள், மினி பஸ்கள், ஆட்டோ, வேன், லாரி ஓடவில்லை. பெரும்பாலான அரசு பஸ்களும் பைபாஸ் ரோடு வழியாகவே சென்றதால், நகரம் வெறிச்சோடியது.
கழுகுமலை
கழுகுமலை சார்பதிவாளர் அலுவலகம் முன்பு 3-வது நாளாக மாணவர்கள், இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். இதேபோன்று கரடிகுளத்தில் கிராம மக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கழுகுமலை, கயத்தாறு பகுதிகளில் முழு கடையடைப்பு போராட்டம் நடந்தது.
விளாத்திகுளம்
விளாத்திகுளம் பஸ் நிலையம் வேன் ஸ்டாண்டு பகுதியில் 2-வது நாளாக மாணவர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திரளான பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். விளாத்திகுளம் கோர்ட்டில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்குள்ள மருந்து கடைகள், டீக்கடைகள், ஓட்டல்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டன. ஆட்டோக்கள் ஓடவில்லை.
புதூர், சூரங்குடி, குளத்தூர், புளியங்குளம், வேம்பார், தருவைக்குளம், வேடநத்தம் ஆகிய இடங்களிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முழு கடையடைப்பு போராட்டம் நடந்தது. ஆட்டோக்கள் ஓடவில்லை.
எட்டயபுரம்
எட்டயபுரம் பஸ் நிலையம் முன்பு நேற்று காலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சிறிதுநேரத்தில் அங்கு ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் திரண்டனர். இதையடுத்து அங்கு சாமியானா பந்தல் அமைத்து போராட்டம் நடந்தது. முழு கடையடைப்பு போராட்டம் நடந்தது. பெரும்பாலான ஆட்டோக்கள் ஓடவில்லை.
திருச்செந்தூர்
திருச்செந்தூர் வ.உ.சி. திடலில் மாணவர்கள் 3-வது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர். திருச்செந்தூரில் காந்தி தினசரி மார்க்கெட் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தன. கோவில் வாசலில் சில கடைகள் மட்டும் திறந்து இருந்தன. ஆட்டோ, வேன், கார் ஓடவில்லை. இதனால் நகரம் வெறிச்சோடியது.
ஏரல்-ஆழ்வார்திருநகரி
ஏரல் காந்தி சிலை அருகில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டு காளையுடன் பஜார் பகுதிகளில் ஊர்வலமாக சென்றனர். ஏரலில் முழு கடையடைப்பு போராட்டம் நடந்தது. மருந்து கடைகள், டீக்கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டதால், நகரம் வெறிச்சோடியது.
வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, ஆழ்வார்திருநகரி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆழ்வார்திருநகரியில் முழு கடையடைப்பு போராட்டம் நடந்தது. ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டு முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காயல்பட்டினம்-ஆறுமுகநேரி
காயல்பட்டினம் புதிய பஸ் நிலையம் அருகில் 2-வது நாளாக ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் திரளாக கலந்து கொண்டனர். ஆறுமுகநேரி பள்ளிவாசல் பஜாரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. காயல்பட்டினம், ஆறுமுகநேரியில் முழு கடையடைப்பு போராட்டம் நடந்தது. ஆட்டோக்கள் ஓடவில்லை.
மெஞ்ஞானபுரம்-சாத்தான்குளம்
மெஞ்ஞானபுரம் பஜாரில் 2-வது நாளாக ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். மெஞ்ஞானபுரம், சாத்தான்குளம், நாசரேத், உடன்குடி, குலசேகரன்பட்டினத்தில் முழு கடையடைப்பு போராட்டம் நடந்தது.
சாத்தான்குளம் காமராஜர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டனர். நாசரேத் பஸ் நிலையம் அருகில் நகர வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் சில அமைப்புகள் சார்பில் 17 இடங்களில் போராட்டம் நடந்தன.