ஆதிச்சநல்லூர் முதுமக்கள் தாழி மையம் - BBC
அகழாய்வு மூலம் தமிழர் நாகரீகம், பண்பாட்டை அறிவது முக்கியம். ஆனால் இதில் மத்திய அரசு காலம் தாழ்த்துவது ஏற்புடையது அல்ல என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரைச் சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள சிவகளை பரம்பு பகுதியில் 13 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் பல வரலாற்றுச் சான்றுகள் புதைந்துள்ளதால் இப்பகுதியில் அகழாய்வு நடத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது நீதிபதிகள், தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் அகழாய்வு நடத்தப்பட்டதே அதன் முடிவு என்னவானது? அந்த அகழாய்வு அறிக்கையை இதுவரை ஏன் சமர்ப்பிக்கவில்லை? எனக் கேள்விகளை எழுப்பினர். தமிழர் நாகரீகம்,பண்பாடு அறிவது முக்கியம். இதில் மத்திய அரசு காலம் தாழ்த்துவது ஏற்புடையது அல்ல.
கீழடி அகழாய்விலும் அதிகாரி இடம் மாற்றம் எனப் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. இதுபோன்ற நிகழ்வுகளால்தான் மத்திய தொல்லியல் துறை மீது குற்றம்சாற்றப்படுகிறது. இதைத் தவிர்க்க வேண்டும். குறித்த காலத்துக்குள் ஆதிச்சநல்லூர் அகழாய்வு தொடர்பான முடிவுகளை அறிவிக்க வேண்டும்.
பதிலளிக்க உத்தரவு
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் சிவகளையில் அகழாய்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை குறித்து மத்திய, மாநில தொல்லியல் துறை இயக்குநர்கள் பதில் அளிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் தொடர்புடைய தொல்லியல் துறை அதிகாரிகள் நேரில் ஆஜராக நேரிடும் என உத்தரவிட்டு வழக்கை பிப்.19-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக