தூத்துக்குடி, மார்ச் 29: கடந்த 5 ஆண்டுகளாக எந்த திட்டத்தையும் நிறைவேற்றாத மத்திய அரசு, ஆட்சி முடியும் நேரத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்குகிறது என்று கனிமொழி எம்.பி. குற்றம் சாட்டினார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தூத்துக்குடி மக்களவை தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் கலைஞர் அரங்கத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் மீராசா மரைக்காயர் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மஹ்முதுல் ஹஸன் வரவேற்றார். தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி பேசுகையில், எல்லோரும் இந்த மண்ணை நம்பி வாழ்கிறோம். இந்தியாவை நேசிக்கிறோம். இன்றைய அரசியலில் கலாசாரத்தை கடைப்பிடிக்க வேண்டிய மோடி அரசு அதனை கடைப்பிடிக்காமல் பல்வேறு வகையில் பிரித்தாலும் செயலில் ஈடுபடுகிறது. தேசப்பற்று, மொழிபற்றில் பா.ஜ.க.வினரைவிட நாம் குறைந்தவர்கள் இல்லை. கடந்த 5 ஆண்டுகளாக எந்த திட்டத்தையும் மோடி அரசு நிறைவேற்றவில்லை. மக்களை பாதிக்கும் ஜி.எஸ்.டி. மற்றும் பணமதிப்பிழப்பு போன்ற நடவடிக்கைகளைதான் செயல்படுத்தினர். தேர்தல் அறிவிப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு மக்களுக்கு திட்டங்களை கொண்டு வருவது போல் ஆட்சி முடியும் நேரத்தில் அடிக்கல் நாட்டுகின்றனர். அதில் ஒன்றுதான் மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை திட்டமாகும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமையும்போது நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்றார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் முஹம்மது அபுபக்கர் எம்.எல்.ஏ. பேசுகையில், கருணாநிதியின் மகளாக இங்கு போட்டியிடும் கனிமொழி தன்னுடைய தொகுதி பிரசாரத்திற்கு இடையில் சில தினங்களுக்கு முன்பு ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் எங்கள் கட்சி வேட்பாளர் நவாஸ்கனியை ஆதரித்து 9 இடங்களில் பிரசாரம் செய்தார். அதிக வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி வெற்றி பெற முஸ்லிம்லீக் கட்சியினர் அனைவரும் வாக்குகளை மாவட்டம் முழுவதும் சேகரிக்க வேண்டும் என்றார். கீதாஜீவன் எம்.எல்.ஏ பேசுகையில், வங்கியில் நம்முடைய பணம் இருந்தால் அதற்கு மாதந்தோறும் வட்டியை வங்கி சார்பில் கொடுத்து வந்தனர். ஆனால் மோடி ஆட்சியில் வங்கியில் குறைவாக பணம் இருந்தால் அதற்கு அபராதம் விதித்து பணத்தை எடுக்கிறார்கள். பதவிக்காக எதையும் செய்ய தயங்காத கூட்டம் வருகிறது. ஆகவே அனைவரும் விழிப்புணர்வோடு இருந்து பணியாற்ற வேண்டும் என்றார்.கூட்டத்தில் திமுக பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, காங்கிரஸ் மாவட்ட சிறுபான்மைபிரிவு தலைவர் மைதீன், மாவட்ட துணை தலைவர் பாதுல்அஸ்ஹப், மாநகர தலைவர் சகாப்தீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக