செவ்வாய், 26 மார்ச், 2019

தூத்துக்குடி தொகுதிக்கான தேர்தல் அறிக்கை கனிமொழி எம்.பி. வெளியிட்டார்



தூத்துக்குடி தொகுதிக்கான தேர்தல் அறிக்கை கனிமொழி எம்.பி. வெளியிட்டார்
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கான தி.மு.க. தேர்தல் அறிக்கையை கனிமொழி எம்.பி. நேற்று வெளியிட்டார்.
தூத்துக்குடி,

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளராக கனிமொழி எம்.பி. போட்டியிடுகிறார்.

அவர் நேற்று மதியம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். தொடர்ந்து நேற்று மாலையில் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கான தி.மு.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தூத்துக்குடி விமான நிலையத்தை பன்னாட்டு விமான முனையமாக மாற்ற நடவடிக்கை, தூத்துக்குடி மாவட்டத்தில் ஆன்மிக, சரித்திர புகழ்பெற்ற இடங்களை சுற்றுலா மையங்களாக உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்படும். தூத்துக்குடியை கல்வியில் முதன்மை மாவட்டமாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும். தூத்துக்குடியில் 100 படுக்கைகள் கொண்ட இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி, சரக்கு வாகனம் நிறுத்துவதற்கு தனி முனையம், வ.உ.சி. துறைமுக விரிவாக்கத்துக்கான முயற்சி மேற்கொள்ளப்படும்.

கிராமப்புற மக்களுக்காக உடற்பயிற்சி மையங்கள், விளையாட்டு மைதானம், கலையரங்கம், சமுதாய நலக்கூடங்கள் அமைக்கப்படும், தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் தரமான சாலைகள், குடிநீர் வசதி செய்து தரப்படும். பாசன குளங்கள், மானாவாரி குளங்கள், கண்மாய்கள், நீர்வரத்து கால்வாய்கள் தூர்வாரப்படும். கிராமப்புற மக்கள் மற்றும் பெண்களுக்காக சிறு, குறு தொழில்கள் உருவாக்கப்படும். விவசாய பொருட்களை பதப்படுத்துவதற்கு குளிர்பதன கிடங்கு அமைக்கப்படும். மீனவர்களுக்கான கூட்டுறவு வங்கி உருவாக்க நடவடிக்கை, மீனவர்களுக்கு தேவையான இடங்களில் தூண்டில் வளைவு, குலசேகரன்பட்டினத்தில் 2-வது ராக்கெட் ஏவுதளம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தனித்தனியாக பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

பின்னர் கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

நான் இறக்குமதி செய்யப்பட்ட வேட்பாளர் என்றால், தமிழிசை யார்? நான் பிரதமரின் கிராமத்தை தத்தெடுக்கும் திட்டத்தில் தூத்துக்குடி பகுதியில் உள்ள கிராமத்தை தத்தெடுத்து பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு உள்ளேன். நான் தொடர்ந்து இங்கு பணியாற்றி வருகிறேன்.

சேதுசமுத்திரம் திட்டம் பற்றி தவறான தகவல் மீனவர்களிடையே பரப்பப்பட்டு உள்ளது. அதுபற்றி மீனவர்களுக்கு தெளிவுபடுத்தி, இயற்கையை பாதிக்காதவாறு சேது சமுத்திர திட்டம் கொண்டு வரப்படும். ரபேல் ஊழல் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துவிட்டு, பா.ஜனதா நேர்மை பற்றி தமிழிசை பேசட்டும். மத பிரச்சினைகளை தூண்டுவதே பா.ஜனதா கட்சிதான். அதற்காக தான் அதை எதிர்த்து மதச்சார்பற்ற கூட்டணியில் இருக்கிறோம். நான் மாநிலங்களவையில் 600 கேள்விகள் கேட்டு உள்ளேன். 142 விவாதங்களில் பங்கேற்று உள்ளேன். சிறந்த பெண் எம்.பி. என்ற விருதை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்கினார்.

கொடநாடு கொலை விவகாரத்தில் உண்மையை வெளிக்கொண்டுவர முதல்-அமைச்சர் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. நாங்கள் யாருடன் கூட்டணியில் இருந்தாலும் தி.மு.க. தனித்தன்மையையோ, கொள்கையையோ விட்டுக்கொடுத்தது இல்லை. ஜெயலலிதாவின் கொள்கைகளை கூட கடைபிடிக்க முடியாதவர்களாக அ.தி.மு.க.வினர் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. ஆகியோர் உடன் இருந்தனர்.

தொடர்ந்து கனிமொழி எம்.பி. தூத்துக்குடி முத்தையாபுரம், ஸ்பிக்நகர், அத்திமரப்பட்டி, பாரதி நகர், முள்ளக்காடு, ராஜூவ்நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி, வீதியாக சென்று தேர்தல் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசும்போது, “பிரதமர் மோடி வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு மக்கள் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று கூறினார். ஆனால் இதுவரை செலுத்தப்படவில்லை. பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை எல்லாம் உச்சத்துக்கு சென்று விட்டன. இதனை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். ஸ்டெர்லைட் பிரச்சினையில் அமைதியாக போராடிய மக்கள் மீது மத்திய அரசு உத்தரவுபடி மாநில அரசு நடத்திய துப்பாக்கி சூட்டுக்கு இன்று வரை நியாயம் கிடைக்கவில்லை. பொள்ளாச்சி சம்பவத்தில் உண்மை குற்றவாளிகளை கைது செய்து விசாரணை நடத்த அ.தி.மு.க. அரசுக்கு அக்கறை இல்லை. மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கு எதுவும் செய்யவில்லை. இந்த நிலை மாற வேண்டும் என்றால் உதய சூரியனுக்கு வாக்களிக்க வேண்டும்” என்றார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...