ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு சாதாரணமாக தனது புல்லட்டில் வருவார் ஜெய்சிங் தியாகராஜ் நட்டர்ஜி. பெயரில்தான் வடக்கு சாயலே தவிர, சாட்சாத் நம்மூர் முகம்தான். புல்லட்டை டீக்கடையோரம் நிறுத்திவிட்டு, சக வக்கீல்களுடன் அரட்டையடித்துகொண்டிருப்பார். 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் மூலமாக அ.தி.மு.க வேட்பாளர் ஆனவர், எம்.பி-யாகவும் வெற்றி பெற்றார். தன்னை வெற்றிபெற வைத்த தூத்துகுடி மக்களுக்கு என்ன செய்தார் எம்.பி?
தொகுதிக்குள் வலம்வந்தபோது எதிரே வந்தார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விளாத்திகுளம் செயலாளர் புவிராஜ். “குளத்தூர், எட்டையபுரம், புதூர், பூதலாபுரம் பகுதிகளில் அரசுப் பள்ளிக் கட்டடங்கள் பல, இடியும் நிலையில் உள்ளன. ஒரு பள்ளிக் கட்டடத்தைக்கூட எம்.பி கட்டிக்கொடுக்கவில்லை. வருடத்துக்கு 50 லட்சம் ரூபாய், பள்ளிகளின் வளர்ச்சிப் பணிகளுக்காகச் செலவுசெய்ய வேண்டும். இவரோ, வெறும் டேபிள், சேர்களை மட்டுமே வாங்கிக்கொடுத்துள்ளார். கட்டடமே இல்லாத நிலையில், டேபிளும் சேரும் எதற்கு? விளாத்திகுளத்தில் பெரும்பாலும் மானாவாரி விவசாயம்தான். மிளகாய் வத்தல், மல்லி சாகுபடி அதிகம். மானாவாரி விவசாயத்தை ஊக்கப்படுத்தவும் வத்தல், மல்லி சேமிப்பு கிட்டங்கிகளைக் கூடுதலாக உருவாக்கவும், கொள்முதல் நிலையம் அமைக்கவும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ‘விளாத்திகுளத்தில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும்’ என்பது நீண்டநாள் கோரிக்கை. அதற்கான முயற்சிகளும் எடுக்கப் படவில்லை. விளாத்திகுளம் அரசு மருத்துவமனையின் நிலை ரொம்ப மோசம். அங்கு ஒரே ஒரு மருத்துவர் மட்டுமே இருக்கிறார். அவசர சிகிச்சை வசதி இல்லாததால், நிறைய உயிரிழப்புகள் ஏற்படுகின்றன’’ என்றார்.
சிய சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் சேது ரத்னத்திடம் பேசினோம். ‘‘கடலைமிட்டாய்க்கும் தீப்பெட்டித் தொழிலுக்கும் கோவில்பட்டி பிரபலம். தீப்பெட்டித் தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் மூன்று லட்சத்துக்கும் அதிகமான வர்கள் வேலை செய்கிறார்கள். இங்கு தயாராகும் தீப்பெட்டி, வெளி மாநிலங்கள், வெளிநாடுகளுக்க ஏற்றுமதியாகிறது. ஜி.எஸ்.டி வரி விதிப்பால் முழு இயந்திரம், பகுதி இயந்திரம் ஆகிய இரு வகையான தீப்பெட்டித் தொழிலுக்கும் ஒரே அளவாக 18 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால், பகுதி இயந்திர தீப்பெட்டித் தொழில் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. மத்திய அரசிடம் பேசி, முழு இயந்திர தீப்பெட்டித் தொழிலுக்கு 12 சதவிகித வரியும், பகுதி இயந்திரத் தொழிலுக்கு ஆறு சதவிகித வரியும் விதிக்க வேண்டும் என்று பல போராட்டங்கள் நடத்தினோம். எம்.பி கண்டுகொள்ளவில்லை. கோவில்பட்டி ரயில் நிலையத்தில் அந்த்யோதயா ரயில் நிற்பதில்லை. இதனால், விருதுநகருக்குச் சென்று இந்த ரயிலில் ஏற வேண்டியிருக்கிறது’’ என்றார்.
மாவட்ட சிறு தொழில் சங்கமான துடிசியாவின் தலைவர் நேரு பிரகாஷ், “தென், வட மாவட்டங்களை இணைக்கிற ரயில் வழித்தடங்களி லிருந்து தூத்துக்குடி ரயில் நிலையம் விலகியுள்ளது. அதை, மீளவிட்டானுக்கு மாற்ற வேண்டும் என்பது நீண்டகாலக் கோரிக்கை. அதற்கான எந்த முயற்சியையும் எம்.பி செய்யவில்லை. சாலை, ரயில், கப்பல், விமானம் என நான்கு வகையானப் போக்குவரத்து வசதிகளும் உள்ள தூத்துக்குடியில் அதிகமான தொழிற்சாலைகளை அமைக்க, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது திட்டமிடப்பட்டது. அதையும் அவர் நிறைவேற்றவில்லை. இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு 2014-ல் அடிக்கல் நாட்டப்பட்டதுடன் சரி. குடிநீர்ப் பிரச்்னையைத் தீர்க்க ஆலந்தலை எனும் இடத்தில் கடல்நீரை நன்னீராக மற்றும் நிலையத்தை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தொழிற்சாலை வெறும் கனவாகவே உள்ளது. விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டால்தான், சரக்குகளை ஏற்றி இறக்கும் போயிங் விமானங்களைத் தூத்துக்குடியில் கையாள முடியும். இதற்காக, பல முறை எம்.பி-யிடம் பேசியும் பயனில்லை. ‘தூத்துக்குடி - இலங்கை இடையே கப்பல் சுற்றுலா கொண்டுவருவேன்’ என்றார் எம்.பி. அதைப் பற்றி பேச்சே இல்லை. ஸ்மார்ட் சிட்டி வேலைகளும் தொடங்கப்படவில்லை. தூத்துக்குடி - ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலைத் திட்டமும் கிடப்பில் உள்ளது. தொழில்பூங்கா அமைக்க 5,500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டும், அதற்கான பணிகள் தொடங்கவில்லை” என்றார்.
“ஸ்ரீவைகுண்டத்தில் நெல், வாழை விவசாயம் பிரதானம். தாமிரபரணி ஆற்றுப் பாசனம் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் 46,107 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இந்த ஆற்றுநீரைச் சேமிக்கும் அணைகளில் மருதூர் அணையும் ஒன்று. 500 ஆண்டுகள் பழைமையான இந்த அணைக்கட்டில் 2003-க்குப் பிறகு பராமரிப்பு பணிகள் நடைபெறவில்லை. ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையைத் தாண்டி, தண்ணீர் கடலில் கலக்கிறது. அந்தத் தண்ணீரை வறட்சிப் பகுதிகளான சாத்தான்குளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்குத் திருப்பிவிட வேண்டும்; மூன்று இடங்களில் தடுப்பணை அமைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை. முக்காணி ஆற்றுப் பகுதியில் ரூ.29 கோடியில் கட்டப்பட்ட தடுப்பணை, இரண்டாவது மாதத்திலேயே வெள்ளத்தின்போது தகர்ந்துபோனது’’ என்கிறார் தி.மு.க இளைஞரணியின் மாநில துணைச் செயலாளர் வழக்கறிஞர் ஜோயல்.
ஐந்தாவது தூண் அமைப்பின் தலைவர் சங்கரலிங்கத்திடம் பேசினோம். ‘‘தூத்துக்குடி சாலைகள் குண்டும் குழியுமாகக் கிடக்கின்றன. ஒன்றாம் கேட்டில் சுரங்கப் பாதையும், இரண்டாம் கேட், திருச்செந்தூர் வளைவு, குறுக்குச்சாலை, புதுக்கோட்டை பகுதிகளில் மேம்பாலங்களும் 850அமைக்க வேண்டும். அப்போதுதான், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த முடியும். இதற்கு எந்த நடவடிக்கையையும் இல்லை. சீவலப்பேரி காங்கேயன் கால்வாயில் தடுப்பணை கட்டப்பட வேண்டும் என்கிற கோரிக்கையும் உயிர் பெறவில்லை. குறுக்குச் சாலை, ஒட்டநத்தம், கடம்பூர், எப்போதும்வென்றான் ஆகிய பகுதிகளில் பருத்தி அரவை ஆலைகள் இயங்கிவந்தன. பருத்தி விளைவிப்பது விவசாயிகளிடம் குறைந்து போனதால், ஆலைகள் மூடும் நிலையில் உள்ளன. புதியம்புத்தூரில் ஆயத்தய ஆடைத் தொழிலை நம்பி பத்தாயிரம் தொழிலாளர்கள் உள்ளனர். இங்கு ரெடிமேட் ஜவுளிப் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. அடிப்படை வசதிகளே இல்லாத கோவில்பட்டி அரசு மருத்துவமனையைச் சரிசெய்ய வேண்டும் என எம்.பி-யின் கவனத்துக்கு பலமுறை கொண்டு சென்றும் அவர் கண்டுகொள்ளவில்லை.
புள்ளிமான்கள் அதிகமுள்ள குருமலை வனப்பகுதியைச் சரணாலயமாக மாற்ற வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர். ‘மத்திய அரசுடன் பேசுகிறேன்’ என்ற எம்.பி-யிடம் இதுவரை பதிலே இல்லை. கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கும், கருவாட்டுக்கும் முனையம் அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கைகள் அப்படியே இருக்கின்றன. தூத்துக்குடி மாநகரின் வளர்ச்சிக்காகக் கொண்டு வரப்பட்ட ஒருங்கிணைந்தப் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் திட்டமும் கிடப்பில் இருக்கிறது” என்றார் விரக்தியுடன்.
தி.மு.க-வின் திருச்செந்தூர் எம்.எல்.ஏ-வான அனிதா ராதாகிருஷ்ணன், ‘‘திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாழை, வெற்றிலை, முருங்கை விவசாயம் அதிகம். அடுத்ததாக, மீன்பிடித் தொழில். புன்னக்காயல் முதல் மணப்பாடு வரை உள்ள மீனவக் கிராமங்களில் மீன் ஏலக்கூடம், வலைப்பின்னல் கூடம் வேண்டும் என்ற கோரிக்கையை எம்.பி கண்டுகொள்ளவில்லை. குலசேகரன்பட்டினம், மணப்பாடு கடற்கரைப் பகுதியை சுற்றுலாத் தலமாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. கருப்பட்டிக்கு பிரபலமான உடன்குடி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் அழிவின் விளிம்புக்கே பனைத்தொழில் வந்துவிட்டது. பனைத் தொழிலையும், அதன் தொழிலாளர்களையும் பாதுகாக்க எம்.பி முயற்சி எடுக்கவில்லை. நட்டர்ஜிக்கு வாக்குச் சேகரிக்க ஜெயலலிதா வந்தபோது, மழைக்காலத்தில் உப்பளத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படுவதை அறிந்து, ‘மழைக்கால நிவாரணத்தொகையாக மாதம் ஐந்தாயிரம் ரூபாய் தருவோம்’ என்றார். அதைப் பெற்றுக் கொடுக்கவும் எம்.பி முயற்சி எடுக்கவில்லை” என்றார் கோபமாக.
விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம்தான் எம்.பி தத்தெடுத்த கிராமம். ‘‘பனை ஓலையில் பெட்டி செய்வதில் சிறப்பு பெற்றது இந்த ஊர். இந்தப் பனை ஓலைப் பெட்டியில்தான் கோவில்பட்டி கடலைமிட்டாயை வைத்து விருந்தினர்களுக்குக் கொடுப்பது வழக்கம். நாகலாபுரத்தில் பனை ஓலைப்பெட்டி செய்யும் தொழில் நலிவடைந்துவிட்டது” என்று புலம்புகிறார்கள் நாகலாபுரம் மக்கள்.
எம்.பி-யைச் சந்தித்தோம். ‘‘ ‘தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும்’ என முதலில் குரல் கொடுத்தது நான்தான்” என்று பெருமையுடன் பேசத் தொடங்கியவர், “தூத்துக்குடி ரயில் நிலையத்தை மீளவிட்டானுக்கு மாற்ற ரயில்வே அமைச்சகத்திடம் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறேன். குலசேகரப் பட்டினத்தில் கப்பற்படைத் தளம் அமைக்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறேன். தூத்துக்குடி துறைமுகத்தில் சுமார் 80 கப்பல்கள் நிறுத்தும் அளவுக்கு பிரமாண்டமான கப்பல் தங்குதளம் அமைக்கவும் முயற்சி எடுத்துவருகிறேன். விளாத்திகுளத்தில் உள்விளையாட்டு அரங்கம், புதுக்கோட்டை - ஏரல் வரையிலான 15 கி.மீ சாலை, 240-க்கும் மேற்பட்ட சோலார் விளக்குகள், 14 கிராமங்களில் 28 ஹை மாஸ் விளக்குகள் அமைத்துக்கொடுத் துள்ளேன். ஆங்காங்கே வெள்ளநீர் தடுப்புச் சுவர்கள், சமுதாய நலக் கூடங்கள் கட்டிக் கொடுத்துள்ளேன். இதயம், புற்றுநோய், சிறுநீரகம் நோய்களுக்காக 70 பயனாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைக் கடிதங்கள் கொடுத்துள்ளேன். 40 அரசுப் பள்ளிகளுக்கு 100 மேஜை, நாற்காலிகளும் 17 பள்ளி நூலகங் களுக்குப் புத்தகங்களும் கொடுத்துள்ளேன். எதுவுமே செய்யவில்லை என்று கூறுவது பொய்” என்றார்.
- இ.கார்த்திகேயன், எம்.கணேஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக