வியாழன், 2 பிப்ரவரி, 2012

ஏரலில் மின்கட்டணம் செலுத்துவதற்குள் படாதபாடப


ஏரல்:ஏரல் மின்சார அலுவலகத்தில் மின் கட்டணத்திற்கு பணம் செலுத்த செல்லும் பொதுமக்கள் பணம் செலுத்த பலமுறை அலைக்கழிக்கப்படுவதால் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். நெட் வேலை செய்யவில்லை. யூ.பி.எஸ். வேலை செய்யவில்லை என்ற வார்த்தையை கேட்டு ஏரல் பகுதி மக்கள் வெறுப்படைந்துள்ளனர். ஜெனரேட்டர், யூ.பி.எஸ்.வசதி இருந்தும் அவை இயக்கப்படாதது மின்வாரியத்தின் மீது பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.தூத்துக்குடி மாவட்டத்தில் மிக முக்கிய வியாபார ஸ்தலமான ஏரல் மற்றும் அதைச் சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில் பல ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். பொதுமக்களுக்கு அத்தியாவசிய தேவையான மின்சார வசதி ஏரல் மின்வாரிய அலுவலகம் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. பல கிராமங்கள் ஏரல் மின் வாரியத்தின் மூலம் மின்இணைப்பு பெற்றுள்ளனர். இது தவிர வியாபார ஸ்தலமான ஏரல் பஜார் கடைகளும் மின்வாரியத்தின் மூலம் பயன்பெற்று வருகின்றன. 

ஏற்கவே பல ஆண்டுகளாக மின் தடையால் பெரும் சிரமத்தை அனுபவித்து வரும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஏரல் மின்வாரிய அலுவலகத்தின் மெத்தனத்தால் தற்போது கடும் அதிருப்தியில் உள்ளனர். எப்போது கரண்ட் இருக்கும், எப்போது கட் ஆகும் என்பது கடவுளுக்கே தெரியாத நிலையில் கரண்ட் இருக்கும் நேரத்திற்கான மின்கட்டணத்தை செலுத்த மக்கள் ஏரல் மின்சார அலுவலகத்திற்கு செல்கின்றனர். சுற்றுவட்டார பல கிராம மக்கள் பஸ் ஏறியும், நடந்தும் தாங்கள் உபயோகித்த மின்சார அளவுக்கு பணம் கட்ட வந்தால் அலுவலகத்திலோ நெட் வேலை செய்யவில்லை, யூ.பி.எஸ் வேலை செய்யவில்லை என்ற பதில்தான் வருகிறது. ஏரல் பகுதியில் கரண்ட் இருக்கும்போதும் இதே பதில்தான் பொதுமக்களுக்கு கிடைக்கிறது. பலர் பல மணி நேரம் வரிசையில் நின்று பணம் கட்ட கவுண்டர் பக்கத்தில் செல்லும்போது கரண்ட் கட் ஆகிவிட்டது. இனி நாளைக்கு வாருங்கள் என்று சாதாரணமாக பதில் கூறிவிடுகின்றனர். பொதுமக்களும், வியாபாரிகளும் தங்கள் பணிகளை ஒதுக்கிவிட்டு மின்கட்டணம் செலுத்த முனைப்போடு வந்தால் மின்கட்டணம் செலுத்த முடியாமல் அலைக்கழிக்கப்படுவது வேதனையாக உள்ளது. இதனால் ஏரல் மின்சார வாரிய அலுவலகத்தில் தினமும் பொதுமக்களுக்கும், மின்வாரிய ஊழியர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம், தேவையற்ற பகை உணர்வு ஏற்படுகிறது. தமிழகம் முழுவதும் மின்சார வாரிய அலுவலகத்தில் ஜெனரேட்டர் மற்றும் யூ.பி.எஸ்.வசதியை அரசு செய்து கொடுத்துள்ளது. இந்த வசதி ஏரல் மின்சார அலுவலகத்திலும் உள்ளது. ஆனால் ஏரலில் ஒரு நாளும் ஜெனரேட்டரை உபயோகப்படுத்துவது இல்லை. ஸ்ரீவைகுண்டம் மின் அலுவலகம் மூலம் ஆழ்வார்திருநகரிக்கு நெட் கனெக்ட் செய்யப்பட்டு அதன் மூலம் ஏரலுக்கு நெட் கனெக்சன் கொடுக்கப்பட்டுள்ளது. ஏரலில் கரண்ட் இருக்கும் போது ஸ்ரீவை., மற்றும் ஆழ்வார்திருநகரியில் கரண்ட் இல்லாததால் ஏரலில் நெட் ஒர்க் ஆகாமல் உள்ளது. ஆழ்வார்திருநகரியில் ஜெனரேட்டர் ஆன் செய்தால் இப்பிரச்னையே வராது. ஆனால் ஏரல், ஆழ்வார், ஸ்ரீவைகுண்டம் ஆகிய அனைத்து மின்வாரிய அலுவலகத்திலுமே ஜெனரேட்டரை ஆன் செய்யாததால் ஏரலில் மின்கட்டணம் செலுத்த மக்கள் அலைக்கழிக்கப்படுவது தற்போது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் இப்பிரச்னையால் மின்வாரிய ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே தினமும் ஏற்படும் இப்பிரச்னையால் மின்சார ஊழியர்களே தங்கள் தலைமை அதிகாரிக்கு இப்பிரச்னையை கொண்டு சென்றுள்ளதாக தெரிகிறது. அதன்படி ஏரல் விநியோக பிரிவில் 5 பணியாளர்கள் தினமும் மின் கட்டண வசூலில் ஈடுபடுகின்றனர். பணி நாட்களில் பண வசூலில் ஈடுபட்டிருக்கும்போது மின்தடை ஏற்படும் போது ஜெனரேட்டர் பயன்படுத்த ஒதுக்கீடு செய்யப்பட்ட நாள் முதல் இன்று வரை ஜெனரேட்டரை உபயோகப்படுத்தாததினால் பணியாளர்களுக்கம், மின் உபயோகிப்பாளர்களுக்கும் இடையே வாக்குவாதம், தேவையற்ற வார்த்தை பேசுவதுடன் மின் வாரியத்தை பற்றி மக்கள் அவதூறாக பேசி வரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. யூ.பி.எஸ்.பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே பண வசூல் நாட்களில் ஜெனரேட்டரை பயன்படுத்தி பொதுமக்களுக்கும், எங்களுக்கும் இடையே தேவையில்லாமல் ஏற்படும் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஏரல் மின்வாரிய ஊழியர்கள் தங்கள் மேல் அதிகாரிக்கு மனு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மின்சார தடை ஒரு பக்கம் இருக்க உபயோகிக்கும் மின் கட்டணத்தை செலுத்த செல்லும் மக்கள் மின் வாரியத்தால் அலைக்கழிக்கப்பட்டு வரும் இப்பிரச்னைக்கு அனைத்து மின் வாரிய அலுவலகத்திலும் இருக்கும் ஜெனரேட்டரை இயக்கினாலே இப்பிரச்னைக்கு முடிவு வரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...