வியாழன், 6 செப்டம்பர், 2012

ஏரல் நூலகத்தில் 60 ஆண்டாக தொடரும் நெருக்கடி

ஏரல், : ஏரலில் 2 ஆயிரம் உறுப்பினர்கள், 28 ஆயிரம் புத்தகங்களை கொண்ட நூலகம் கடந்த 60 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் போதிய இடவசதியின்றி இயங்கி வருகிறது. சொந்த கட்டிடத்திற்கு புறம்போக்கு இடத்தை ஒதுக்குவதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.
தூத்துக்குடி மாவட்டத்தின் 3வது பெரிய வணிக நகரம் என்ற பெருமையுடையது ஏரல் தேர்வு நிலை பேரூராட்சி . வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், கடைகள் நிரம்பி காணப்படும் இந்நகரில் மக்கள் தொகையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இடையறாத பணிகளுக்கு மத்தியிலும் ஓய்வு நேரங்களை பயனுள்ளதாக்கி கொள்ள நூலகத்தை நாடிச்செல்லும் பழக்கத்தை இப்பகுதியை சேர்ந்த பலர் ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்.
இங்குள்ள பழமைமிக்க நூலகத்தில் 2 ஆயிரம் உறுப்பினர்கள், 28 ஆயிரம் புத்தகங்கள் இருப்பது வாசகர்களின் வருகைக்கு சான்றாக உள்ளது. ஆரோக்கியமானவர்கள் மட்டுமே இந்த நூலகத்துக்கு செல்ல முடியும் என்பது புதிரான செய்தி. ஏனெனில் மிகவும் குறுகலான இடத்தில் செங்குத்தான படிக்கட்டுகள், மாடியில் இடவசதியற்ற இருட்டறை என கடந்த 60 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வருவதுதான் இதற்கு காரணம். முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஏறிச்செல்வது சிரமத்திற்குரிய ஒன்று.
டிஜிட்டல் நூலகம், இ-லைப்ரரி என உலகம் எங்கோ சென்று கொண்டிருக்கையில், இன்னமும் புத்தகங்களை அடுக்கி வைக்க இடவசதி, அலமாரிகள் உள்ளிட்ட எவ்வித வசதியும் இங்கில்லை. அரிய தகவல்கள் அடங்கிய புத்தகங்கள் எல்லாமல் சாரை சாரையாக தரையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. வேண்டிய நூல்களை தேடிப்பிடிக்க மண்டியிட்டு மல்லுக்கட்ட வேண்டியுள்ளது. தவிர உரிய பாதுகாப்பின்றி விலைமதிப்பு மிக்க நூல்கள் கரையான்களுக்கு இரையாகி சின்னாபின்னமாகும் அபாயமும் உள்ளது.
சொந்த கட்டிடத்திற்கு நூலகத்தை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை மனுக்கள் நீண்டகாலமாக அதிகாரிகளின் கோப்புகளில் உறங்கி கொண்டிருக்கின்றன. மேலும் பல மனுக்கள் கொடுத்த மறுகணமே குப்பை தொட்டிகளுக்கு குடித்தனம் சென்றுவிட்டன.
இது குறித்து ஏரல் வாசகர் வட்ட துணைத்தலைவர் முருகேசன் கூறுகை யில், ‘எம்.பி, எம்.எல்.ஏ நிதி ஆதாரம் ஏராளம் இருந்தும் நூலகம் அமைக்க 5 சென்ட் அரசு புறம்போக்கு இடத்தை ஒதுக்குவதில் இழுபறி நீடித்து வருகிறது. வாசகர்கள் தரப்பில் பல முறை அரசுக்கு மனு அனுப்பியும் நடவடிக்கை இல்லை. 
போதிய இடவசதியில்லாததால் வாசகர்களின் எண்ணிக்கை படிப்படியாக சரிந்து வருகிறது. பழமைமிக்க இந்த நூலகத்தை சொந்த கட்டிடத்திற்கு மாற்றி பாதுகாக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம், ஏரல் பேரூராட்சி நிர்வாகம் இணைந்து இடம் ஒதுக்கி புதிய நூலகம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...