ஞாயிறு, 23 நவம்பர், 2014

தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த மழை உப்பளங்கள்–வாழைகள் மூழ்கின 300 வீடுகள் சேதம்

தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக உப்பளங்கள், வாழைகள் மழைநீரில் மூழ்கின. இதுவரை 300 வீடுகள் சேதம் அடைந்து உள்ளன.
வெள்ளமும்–வறட்சியும்வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.
மாவட்டத்தின் தென்பகுதியில் இரவு பகலாக மழை கொட்டி தீர்த்தது. இதனால் திருச்செந்தூர், காயல்பட்டினம், ஆத்தூர், முக்கானி, முத்தையாபுரம், சாத்தான்குளம் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆறுமுகநேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து உள்ளது. வயல்களில் தண்ணீர் குளம் போல் தேங்கி கிடக்கிறது.
ஆனால் மாவட்டத்தின் வடபகுதியான எட்டயபுரம் பகுதியில் 3 மில்லி மீட்டர் மழை அளவு மட்டுமே பதிவாகி உள்ளது. விளாத்திகுளம், கோவில்பட்டி, வேடநத்தம், காடல்குடி உள்ளிட்ட மாவட்டத்தின் வடபகுதியில் குறைந்த அளவு மழையே பெய்து உள்ளது. இதனால் எப்போதும் வென்றான் நீர்த்தேக்கம் நிரம்பவில்லை. பெரும்பாலான மானாவாரி குளங்கள் நிரம்பாமல் காய்ந்து கிடக்கின்றன. மாவட்டத்தின் ஒரு பகுதி வெள்ளத்திலும், மற்றொரு பகுதி வறட்சியாகவும் காட்சி அளிக்கிறது.
வீடுகள் சேதம்தொடர் மழையால் தூத்துக்குடி மாவட்டத்தில் பல இடங்களில் சாலைகள் மிகவும் சேதம் அடைந்து உள்ளன. தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலை முற்றிலும் சேதம் அடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக மாறிவிட்டது.
மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழையால் திருச்செந்தூர் தாலுகாவில் 7 வீடுகள் முழுமையாகவும், 24 வீடுகள் பகுதியாகவும், ஸ்ரீவைகுண்டத்தில் 12 வீடுகளும், தூத்துக்குடியில் 5 வீடுகளும், சாத்தான்குளத்தில் 10 வீடுகளும், எட்டயபுரத்தில் 2 வீடுகளும், விளாத்திகுளத்தில் 3 வீடுகளும், ஓட்டப்பிடாரத்தில் ஒரு வீடும் பகுதி அளவு சேதம் அடைந்து உள்ளன. ஒரே நாளில் 64 வீடுகள் சேதம் அடைந்தன.
இந்த பருவமழை காலத்தில் மொத்தம் 55 வீடுகள் முழுமையாகவும், 245 வீடுகள் பகுதி அளவும் சேதம் அடைந்து இருக்கின்றன. பகுதி அளவு சேதம் அடைந்த வீடுகளுக்கு ரூ.2 ஆயிரத்து 500–ம், முழுமையாக சேதம் அடைந்த வீடுகளுக்கு ரூ.5 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்பட்டு உள்ளது.
நெல் சாகுபடிமழையை தொடர்ந்து விவசாய பணிகள் தொடங்கி விட்டன. தூத்துக்குடி மாவட்டத்தின் வடபகுதியில் மானாவாரி பயிர்கள் பயிரிடப்பட்டு உள்ளனர்.
அதே போன்று தூத்துக்குடி அத்திமரப்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் நெல் நாற்றங்கால்கள் அமைத்து இருக்கின்றனர். சாயர்புரம் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் பயிரிடப்பட்டு இருந்தன. இந்த வாழைகள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி கிடக்கின்றன. இதனால் சுமார் ரூ.10 லட்சம் வரை வாழைகள் சேதம் அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த பகுதிகளில் சேதம் அடைந்த வாழைகளை ஸ்ரீவைகுண்டம் யூனியன் தலைவர் முத்துலட்சுமி அழகேசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தூத்துக்குடி மற்றும் சுற்று வட்டாரங்களில் உள்ள உப்பளங்கள் அனைத்தும் மழைநீரில் மூழ்கி கிடக்கின்றன. உப்பு உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தின் தென்பகுதியில் பெய்து வரும் பலத்த மழையால் தாமிரபரணி ஆற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மழை விவரம்தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:–
கோவில்பட்டி– 9,
ஓட்டப்பிடாரம்– 28,
சாத்தான்குளம்– 67.30,
ஸ்ரீவைகுண்டம்– 28.20,
தூத்துக்குடி– 24.80,
திருச்செந்தூர்– 48.50,
விளாத்திகுளம்– 10,
கயத்தாறு– 10,
காயல்பட்டினம்– 63,
குலசேகரன்பட்டினம்– 55,
கீழஅரசடி– 19.50,
எட்டயபுரம்– 3,
கடம்பூர்– 29,
மணியாச்சி– 9,
வேடநத்தம்– 8,
சூரங்குடி– 11,
காடல்குடி– 6,
வைப்பாறு– 20,
கழுகுமலை– 5.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...