சனி, 29 நவம்பர், 2014

ஏரலில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

ஏரலில் தி.மு.க. சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டம்

ஏரலில் புதிதாக கட்டப்பட்ட உயர்மட்ட பாலத்தின் தெற்கு பகுதியில் இணைப்பு சாலை அமைத்து, விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும், ஸ்ரீவைகுண்டம் அணையை தூர்வார வேண்டும், உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும், மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க. அரசை வலியுறுத்தி, ஒன்றிய தி.மு.க. சார்பில், ஏரல் காந்தி சிலை அருகில் நேற்று மாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட செயலாளர் என்.பெரியசாமி தலைமை தாங்கி பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-

பாதியில் நிற்கும் பாலம்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரல் சிறந்த வணிக நகராக விளங்குகிறது. தி.மு.க. தலைவர் கருணாநிதியின் ஆட்சியில்தான், ஏரல் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே தரைமட்ட தாம்போதி பாலம் அமைக்கப்பட்டது. பின்னர் தரைமட்ட பாலத்தின் அருகில் புதிய உயர்மட்ட பாலம் அமைக்க ஆய்வறிக்கையும் தயார் செய்யப்பட்டது. பின்னர் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. அரசு டெண்டர் விட்டு, புதிய உயர்மட்ட பால கட்டுமான பணிகளை தொடங்கியது. ஆனால் தற்போது அந்த பணிகள் பாதியில் நிற்கிறது.

சமீபத்தில் பெய்த மழையில் ஏரல் தாமிரபரணி ஆற்றின் தரைமட்ட பாலத்தை வெள்ளம் மூழ்கடித்ததால், ஏரல்- குரும்பூர் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றி சென்று அவதி அடைந்தனர்.

அணையை தூர்வார...

ஸ்ரீவைகுண்டம் அணை 8 அடி ஆழமாக இருந்தது. தற்போது அணை முழுவதும் மணல் மேடாகி, அங்கு தண்ணீரைக் கூட தேக்க முடியாமல் வீணாக கடலுக்கு செல்கிறது. ஸ்ரீவைகுண்டம் அணையை தூர் வாரினால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக அமையும்.

தற்போது மாவட்டம் முழுவதும் விவசாயிகள் விவசாய பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். ஆனால் அவர்களுக்கு தேவையான உரங்கள் கிடைக்கப் பெறாததால் திண்டாடி வருகின்றனர். விவசாயிகளுக்கு தேவையான உரங்களை அரசு தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும். மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நிவாரணத் தொகை வழங்க வேண்டும்.

இவ்வாறு மாவட்ட செயலாளர் என்.பெரியசாமி பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

ஒன்றிய செயலாளர்கள் பி.ஜி.ரவி (கிழக்கு), வைகுண்டராமன் (மேற்கு), ஏரல் நகர பஞ்சாயத்து தலைவர் பாலகிருஷ்ணன், நகர செயலாளர்கள் பார்த்தீபன் (ஏரல்), வரதராஜ் ஸ்டாலின் (சாயர்புரம்), ஒன்றிய கவுன்சிலர் ராயப்பன், சூழைவாய்க்கால் பஞ்சாயத்து தலைவர் அனஸ், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயகுமார் ரூபன், தூத்துக்குடி பகுதி செயலாளர் கருணாகரன், தலைமை கழக பேச்சாளர் சரத்பாலா, மாவட்ட வக்கீல் அணி துணை அமைப்பாளர் ஆறுமுகபெருமாள், நகர பஞ்சாயத்து துணை தலைவர் மணிவண்ணன், முன்னாள் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் குணா, முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவர்கள் சிவகுமார், எட்வர்டு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...