ஞாயிறு, 23 நவம்பர், 2014

தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த மழை

திருச்செந்தூர்

தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. கருமேனி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நெல் நாற்றங்கால்கள் மூழ்கின

தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, திருச்செந்தூர், ஆறுமுகநேரி, ஆத்தூர், காயல்பட்டினம், சாத்தான்குளம், உடன்குடி, குலசேகரன்பட்டினம், தென்திருப்பேரை, குரும்பூர், ஆழ்வார்திருநகரி, நாசரேத், ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

தென்திருப்பேரை, குரும்பூர், செம்பூர், கடையனோடை, குருகாட்டூர், கல்லாம்பாறை, புறையூர் உள்ளிட்ட பகுதிகளில் வயல்களில் தண்ணீர் குளம் போன்று தேங்கியது. இதனால் அங்கு நடப்பட்டு இருந்த நெல் நாற்றங்கால்கள் தண்ணீரில் மூழ்கின. நெல் வயல்களில் தேங்கிய தண்ணீரை வடிய வைப்பதற்காக விவசாயிகள் முயற்சி செய்தனர். நெல் நாற்றங்கால்களில் தேங்கிய தண்ணீர் வடியாவிட்டால், நாற்றங்கால்கள் அழுக தொடங்கி விடும். இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

மரம் விழுந்தது

முக்காணி மெயின் ரோட்டில் சென்டிரல் வங்கியின் முன்பு நின்ற மரம் பலத்த மழையில் நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் திடீரென்று சரிந்து விழுந்தது. இதனால் தூத்துக்குடி- திருச்செந்தூர் இடையே வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அந்த வழியாக சென்ற வாகனங்கள் ஏரல் வழியாக மாற்று பாதையில் சென்றன. இரவு 11 மணியளவில் சாலையில் விழுந்து கிடந்த மரத்தை அகற்றிய பின்னர் வழக்கம்போல் அந்த வழியாக வாகனங்கள் சென்றன.

கருமேனி ஆற்றில் வெள்ளம்

உடன்குடி, குலசேகரன்பட்டினம் பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழையால் கருமேனியாற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மணிநகரில் இருந்து உடன்குடி செல்லும் சாலையில் உள்ள கருமேனி ஆற்றின் தரைமட்ட பாலத்தின் மீது சுமார் 5 அடி உயரத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் உடன்குடி- திசையன்விளை இடையே வாகன போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் மணிநகரில் இருந்து செல்லும் வாகனங்கள் சுண்டங்கோட்டை, உதிரமாடன்குடியிருப்பு வழியாக மாற்றுப்பாதையில் உடன்குடிக்கு சென்றன.

இதேபோன்று உடன்குடியில் இருந்து வாகவிளை வழியாக சாத்தான்குளம் செல்லும் சாலையில் ஆத்திக்காடு அருகில் உள்ள கருமேனி ஆற்றின் தரைமட்ட பாலத்தின் மீது சுமார் 6 அடி உயரத்துக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் உடன்குடி- சாத்தான்குளம் இடையே வாகன போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் சாத்தான்குளத்தில் இருந்து செல்லும் வாகனங்கள் பன்னம்பாறை, மெஞ்ஞானபுரம், லட்சுமிபுரம் வழியாக உடன்குடிக்கு சென்றன.

உடன்குடி அருகே உள்ள வேப்பங்காட்டில் இருந்து கடாச்சபுரம் செல்லும் பிரிவு ரோட்டில் காட்டாற்று வெள்ளம் சாலையை தாண்டி பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வெள்ளத்தில் தார் சாலை அரித்து செல்லப்பட்டது.

வெள்ளம் சூழ்ந்தது

ஆறுமுகநேரி, காயல்பட்டினம் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. நேற்று காலையிலும் பரவலான மழை தொடர்ந்து பெய்தது. பலத்த மழையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி இருந்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.

பள்ளிக்கூடங்கள், கோவில்கள், பள்ளிவாசல் வளாகங்களில் மழைநீர் குளம் போன்று தேங்கியது. அனைத்து தெருக்கள், சாலைகளிலும் மழைநீர் வெள்ளம்போன்று பெருக்கெடுத்து ஓடியது. சிலர் மின் மோட்டார், டீசல் மோட்டார் உதவியுடன் தாழ்வான பகுதிகளில் தேங்கிய தண்ணீரை அப்புறப்படுத்தினர்.

வீடு இடிந்தது

ஆறுமுகநேரி விநாயகர் கோவில் தெருவில் பலத்த மழையில் நேற்று முன்தினம் இரவில் ஓட்டு வீடு இடிந்து விழுந்தது. வீட்டில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக வெளியே வந்ததால் உயிர் தப்பினர். காமராஜபுரம், பாரதி நகர், பேயன்விளை புதூர், குரூஸ் நகர், ராஜமன்யபுரம், கணேசபுரம், அடைக்கலாபுரம் ரோடு பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போன்று பெருக்கெடுத்து ஓடியது. காமராஜபுரம், பாரதி நகர் பகுதி மக்கள் வீடுகளை காலி செய்து மேடான பகுதிக்கு சென்றனர். நகர பஞ்சாயத்து தலைவர் கல்யாணசுந்தரம், நிர்வாக அதிகாரி தனசிங் ஆகியோர் பொக்லைன் இயந்திரம் மூலம் வடிகால் அமைத்து மழைநீரை வடிய வைக்க முயற்சி மேற்கொண்டனர்.

காயல்பட்டினம்

காயல்பட்டினம் ரத்தினபுரி, கீழலட்சுமிபுரம், பூந்தோட்டம், தைக்காபுரம், வாணியக்குடி தெரு, பப்பரபள்ளி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் குளம்போன்று தேங்கியது. தைக்காபுரம், பூந்தோட்டம் பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அங்குள்ளவர்கள் பள்ளிக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டனர். காயல்பட்டினம் புறநகர் முழுவதும் மழைநீரால் சூழ்ந்து தீவு போன்று காட்சி அளித்தது. காயல்பட்டினம்- திருச்செந்தூர் சாலையில் கே.எம்.டி. ஆஸ்பத்திரி அருகில் உள்ள ஓடக்கரை ஓடையை பொக்லைன் இயந்திரம் மூலம் தூர்வாரி மழைநீர் வடிய ஏற்பாடு செய்யப்பட்டது. வாணியக்குடி தெருவின் கீழ் பகுதியில் இடுப்பளவுக்கு வெள்ளம் சூழ்ந்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...