மிஸ்டர் கழுகு: மார்ச் 18 தீர்ப்பு!
மீண்டும் பெங்களூரு பயம்
''இரண்டு கட்சிகளிலும் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் திக்குமுக்காட வைக்கின்றன!'' என்றபடி வந்து அமர்ந்த கழுகாருக்கு கேக் எடுத்துக்கொடுத்தோம். ''இந்த கேக்குக்கும் நீர் சொல்ல வரும் பிறந்தநாளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. விஷயத்துக்கு வாரும்!' என்று சொன்னதும் கேக்கை விழுங்கிவிட்டுச் செய்திகளைக் கொட்ட ஆரம்பித்தார்.
''கடந்த வாரம் தொடங்கிய ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாட்டங்கள் இன்னும் ஓய்ந்தபாடில்லை. தி.மு.கவில் ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் அதற்குக் கொஞ்சமும் சளைக்கவில்லை. மார்ச் 1-ம் தேதி ஸ்டாலினுக்குப் பிறந்தநாள். காலையில் கோபாலபுரம் வீட்டுக்கு வந்தவர், கருணாநிதிக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்துப் பெற்றார். கருணாநிதியோ ஸ்டாலினை அருகே இழுத்து, கன்னத்தில் முத்தம் கொடுத்து வாழ்த்துச் சொன்னார். அதன் பிறகு ஸ்டாலினுடன் சில நிமிடங்கள் கருணாநிதி மட்டும் தனியாகப் பேசியதாகச் சொல்கிறார்கள்!'
''ஸ்டாலினுடன் அவரது மனைவி துர்க்கா வந்தாரா?'
''துர்க்கா ஏனோ வரவில்லையாம். கோபாலபுரத்தில் இருந்து கிளம்பிய ஸ்டாலின், நேராக தன்னுடைய வீட்டுக்குச் சென்றார். அங்கே குடும்ப சகிதமாக அனைவரும் காத்திருந்தனர். கேக்கும் தயாராக இருந்தது. பேரக் குழந்தைகளை அழைத்து பக்கத்தில் நிற்க வைத்துக்கொண்டு கேக்கை வெட்டினார் ஸ்டாலின். அப்போது, 'ஹேப்பி பர்த் டே டு தாத்தா... ஹேப்பி பர்த் டே டு தாத்தா...’ என்று பேரக் குழந்தைகள் பாட... 'இவங்க சொன்னாதான் நான் தாத்தா என்பதே ஞாபகத்துக்கு வருது’ என்று சிரித்தபடியே சொல்லியிருக்கிறார் ஸ்டாலின்.''
''அப்புறம்?''
''கேக் சாப்பிட்டுவிட்டு, காலை உணவையும் முடித்துக்கொண்டு அங்கிருந்து ஒட்டுமொத்த குடும்பமும் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்துக்குக் கிளம்பியது. காலை 8.30 மணிக்குத் தொடங்கிய வாழ்த்துப் படலம் 1.30 மணி வரை தொடர்ந்தது. அந்த இடைப்பட்ட நேரத்தில் ஸ்டாலின் உட்காரவே இல்லை. அந்தக் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், 'ஊர் ஊராகச் செல்வோம். தெருத் தெருவாகச் செல்வோம். நம்முடைய பயணங்கள் முடிவதில்லை. அதைப்போல நம்முடைய பணிகள் முடிவதில்லை. முயற்சிகள் என்றைக்கும் பொய்த்தது இல்லை. எனவே நம்முடைய கடமைகளும் என்றைக்கும் நிற்பதில்லை என்ற உணர்வோடு நாம் சபதம் ஏற்போம். மார்ச் 1-ம் தேதியை இளைஞர் எழுச்சி நாளாக மட்டுமல்ல, பாகுபாடு ஒழிப்புத் தினமாகவும் நடத்துகிறோம் என்பதை மனதில் வைத்துக்கொண்டு அனைவரும் ரத்த தானம் வழங்க வேண்டும். இந்த மாத இறுதிக்குள் ஒரு லட்சம் யூனிட் ரத்தம் நம்முடைய இளைஞர் அணி சார்பில் வழங்கப்பட்டு இருக்கிறது என்ற செய்தி எனக்கு வந்தாக வேண்டும்!’ என்று அவர் சொல்ல... இன்னொரு பக்கம் ரத்ததானம் நிகழ்ச்சி ஆரம்பமானது. ரத்தம் கொடுக்கும் இடத்தைச் சுற்றி வந்த ஸ்டாலின் மனைவி துர்க்கா, திடீரென என்ன நினைத்தாரோ, 'நானும் ரத்தம் கொடுக்கிறேன்!’ என்று விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்தார். இந்த விஷயம் உடனடியாக ஸ்டாலினுக்குச் சொல்லப்பட்டது. ஆனால், துர்க்கா அருகில் ஸ்டாலின் வரவில்லை. மேடையிலேயே இருந்தார். துர்க்காவுக்கு ரத்தம் எடுக்கும்போது, அவரது தோழி உமாராணி மட்டும் அருகே இருந்தார். 'பந்தை இப்படி உருட்டுங்க... கையை மடக்காதீங்க!’ என்று துர்க்காவுக்கு அட்வைஸ் கொடுத்தபடி நின்றிருந்தார் அவர்.''
''ம்!''
''ரத்தம் கொடுத்து முடித்ததும், அதற்கான சான்றிதழை துர்க்காவுக்குக் கொடுத்தார்கள். அதை வாங்கிப் பார்த்தவர், 'இதில் துர்க்கா என்று போட்டிருக்கீங்க... என்னோட பேரு துர்க்காவதி ஸ்டாலின். அப்படி மாற்றிக் கொடுங்க!’ என்று கேட்டார். ரத்த வங்கியைச் சேர்ந்தவர்கள் உடனே வேறு சான்றிதழில் 'துர்க்காவதி ஸ்டாலின்’ என்று மாற்றி எழுதிக் கொடுத்தார்கள். துர்க்கா ரத்தம் கொடுத்து முடித்த விஷயத்தையும் உடனே ஸ்டாலினிடம் சொன்னார்கள். 'நானும் ரத்தம் கொடுக்கிறேன்னுதான் சொன்னேன். ரொம்ப நேரம் நிற்க வேண்டியிருக்கும்னு துர்க்காதான் வேண்டாம்னு சொல்லிட்டாங்க. இப்போ என்கிட்ட சொல்லாம அவங்க மட்டும் கொடுத்துட்டாங்க!’ என்று சொல்லியிருக்கிறார் ஸ்டாலின். வீட்டுக்குப் போனதும் குழந்தைகளிடம் ரத்தம் கொடுத்த சான்றிதழைக் காட்டி சந்தோஷப்பட்டாராம் துர்க்கா!'
''பிறந்தநாளுக்கு முந்தைய தினம் அதாவது பிப்ரவரி 28-ம் தேதியே ஸ்டாலின் பிறந்தநாள் விழா கூட்டம் நடந்திருக்கிறதே?'
''சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன்தான் அந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். விழாவில் பேசிய கருணாநிதி, 'ஆண்டுதோறும் இங்கே நடைபெறுகின்ற தளபதி ஸ்டாலினுடைய பிறந்தநாள் விழாவில், நான் கலந்துகொள்வது என்பது கட்சியினுடைய தலைவன் என்ற முறையில் அல்ல. பிறந்தநாள் யாருக்குக் கொண்டாடப்படுகிறதோ அந்தக் கதாநாயகனுடைய தந்தை என்ற முறையிலும்தான்’ என்று அன்புள்ள அப்பாவாக உருகியிருக்கிறார்!''
''எனக்கு முதல்வராக ஆசை இல்லை என்று பேசியிருக்கிறாரே!'
''ஆமாம்! '6-வது முறையாக தலைவர் கலைஞர் முதல்வராக வர வேண்டும்’ என்று பலரும் பேசினார்கள். அதற்கு கருணாநிதி பதில் சொன்னார். 'ஆறாவது முறையாக முதலமைச்சராக ஆக வேண்டும் என்ற ஆசை எனக்கு இல்லை. நான் படுகின்ற ஆசையெல்லாம் திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கட்டிக்காக்க வேண்டும். கடைசித் தொண்டர் இருக்கும் வரை இந்த இயக்கத்தை எதிரிக்கு விட்டுக்கொடுக்க முடியாது. இந்த இயக்கத்தை வாழ வைப்பதுதான் நம்முடைய தலையாய கடமை என்ற உணர்வோடு பாடுபட வேண்டும். இல்லையேல் நாம் நன்றி மறந்தவர்களாவோம்’ என்று சொல்லி ஸ்டாலின் ஆட்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்தார்!'
''இது அவரது எதிர் வட்டாரத்தைக் கோபப்பட வைத்திருக்குமே?'
''கருணாநிதி அதைப்பற்றி கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. பொதுவாக கருணாநிதி பதில் சொல்ல வேண்டாம் என்று நினைத்திருந்தால் பதில் சொல்லாமல் விட்டிருப்பார். ஆனால் இந்தக் கூட்டத்தில் அவராகவே, 'எனக்கு ஆசை இல்லை’ என்று சொல்வதன் மூலமாக மறைமுகமாக ஸ்டாலின் பெயரைச் சொல்லாமல் சொல்லிவிட்டார் என்றும் அவரது ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். 'கலைஞர்தான் அடுத்த முதல்வர்’ என்று அழகிரி சொல்லி வந்தாலும் அவருக்குப் பதில் சொல்வதுபோல அமைந்துவிட்டது கருணாநிதியின் பேச்சு!'
''கனிமொழி?'
''அவர்தான் ஸ்டாலினின் தீவிர ஆதரவாளராக மாறிவிட்டாரே! ஸ்டாலினை தனது மகளிர் அணி சகாக்களுடன் வந்து வாழ்த்துத் தெரிவித்தார். மார்ச் 8 மகளிர் தினத்தை முன்னிட்டு கோவையில் அவர் ஏற்பாடு செய்யும் விழாவில் ஸ்டாலின் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டுக்காக மட்டும் ஸ்டாலினை அடிக்கடி சந்தித்து வருகிறாராம். ஸ்டாலின் ஆலோசனை இல்லாமல் எதுவும் அவர் செய்வதில்லையாம். அதனால் ஒரே கோஷ்டி ஆன மாதிரி கணக்குத்தான்!'
''அழகிரி...?'
''சமீப காலமாக அடக்கி வாசித்து வந்தார் அழகிரி. உண்மையில் அவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. விமான நிலையங்களில் அவர் அளித்துவரும் பேட்டிகள்தான் அவருக்கு எதிராக மாறியது. 'தி.மு.கவினர் அனைவரும் திருடர்கள்’ என்ற அர்த்தத்தில் அவர் அளித்த பேட்டி லேசாக மனம் மாறியிருந்த கருணாநிதியைக் கோபப்பட வைத்தது. இனி அழகிரிக்கும் கட்சிக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை என்று கருணாநிதியைச் சொல்ல வைத்தது. இந்த நிலையில்தான் கருணாநிதி அப்படி ஒரு பேச்சைப் பேசி இருக்கிறார். கடந்த 2-ம் தேதி மாலை சென்னை தி.நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் மு.க.தமிழரசின் மகன் நடிகர் அருள்நிதிக்கும், கீர்த்தனாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அழகிரி வந்திருந்தார். அவர் சென்னை வந்தால் தங்கும் ஹோட்டல் அது. நிச்சயதார்த்த விழாவில் அழகிரி ஒருபக்கம் அமர்ந்திருந்தார். கருணாநிதி முதல் வரிசையில் உட்கார்ந்திருந்தார். அழகிரி கண்ணில்படாத இடத்தில் ஸ்டாலின் இருந்தார். இப்படியாக மூன்று பேரும் ஒரே நிகழ்ச்சியில் இருந்தும் ஒருவருக்கொருவர் பார்க்கவும் இல்லை. பேசிக்கொள்ளவும் இல்லை!'' என்றபடி கழுகார் வேறு செய்திகள் பக்கம் வந்தார்.
''கடந்த 25-ம் தேதி டெல்லியில் தே.மு.தி.க இளைஞர் அணி தலைவர் எல்.கே.சுதீஷ், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார். இதையடுத்து அவர், அமித்ஷாவை சந்தித்தாராம். அப்போது 2016 சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி கூட்டணி சார்பில் முதல் அமைச்சர் வேட்பாளராக விஜயகாந்த் பெயரை நீங்கள் அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டாராம். அதற்கு அமித்ஷா, இரண்டு வாரங்கள் பொறுத்திருங்கள் என்று சொன்னதாக தே.மு.தி.கவினர் பேசிக்கொள்கிறார்கள். ஆனால், பி.ஜே.பி தரப்பிலோ அமித்ஷாவை சுதீஷ் சந்திக்கவே இல்லை என்று சத்தியம் செய்கிறார்கள். மார்ச் 5ம் தேதி அமித்ஷா கோவை வருகையில் இந்தக் கேள்விகளுக்கு நிச்சயம் விடை கிடைக்கும் என்று தே.மு.தி.க தலைமை நினைக்கிறது. இல்லையென்றால், தனி ரூட் போட கேப்டன் தயாராக இருக்கிறாராம்.'
''ஓஹோ!'
''சென்னை மாநகரக் கூடுதல் கமிஷனர் ரவிக்குமார் அதிரடியாக போலீஸ் நிலையங்களில் சோதனை நடத்தியுள்ளார். இந்தச் சோதனை மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி நடந்ததாக விவரம் தெரிந்தவர்கள் சொல்கின்றனர். ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி எத்தனை உடன்பிறப்புகள் பேனர்கள், கட்அவுட் வைத்திருக்கிறார்கள். அதற்கு அனுமதி பெற்று இருக்கிறார்களா என்று கேள்விகளைக் கேட்டு போலீஸ் அதிகாரிகளைக் குடைந்திருக்கிறார் ரவிக்குமார். சோதனைக்கு முன்பே ஸ்டாலின் பிறந்தநாளில் தி.மு.கவினரை கடுமையாக கெடுபிடி செய்ய வேண்டும் என்ற ஒவ்வொரு போலீஸ் நிலையங்களுக்கும் ரகசிய ஓலை வந்திருந்ததாம். இதனால் இந்த முறை பிறந்தநாள் விழா தொடர்பாக அனுமதி கேட்டு வந்தவர்கள் அலைக்கழிக்கப்பட்டுள்ளதாக கட்சியினர் தெரிவிக்கின்றனர்.''
''ம்!'
''பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பு அநேகமாக மார்ச் 18ம் தேதி வந்துவிடும் என்றே சொல்கிறார்கள்!
விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நான்கு பேர் தரப்பு வாதங்கள் முடிந்துவிட்டன. இதில் தொடர்புடைய கம்பெனிகள் தரப்பு வாதங்களும் முடிந்துவிட்டன. அரசு வழக்கறிஞரான பவானி சிங், தன்னுடைய வாதத்தை 4 மற்றும் 5 ஆகிய இரண்டு தேதிகளில் வைப்பார். அத்துடன் இரண்டு தரப்பினரது வாதங்களும் முடிவடைந்து விடுகின்றன. பிறகு தேதி குறிப்பிடப்படாமல் நீதிமன்றத்தை நீதிபதி ஒத்தி வைக்கலாம். கர்நாடக உயர் நீதிமன்ற விதிமுறைகளின்படி ஒரு வழக்கின் விசாரணை முடிந்த 14 நாட்களுக்குள் தீர்ப்பை அளித்தாக வேண்டும் என்பது முக்கிய விதி. இதைச் சொல்லித்தான் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா தனது தீர்ப்பை விரைந்து அளித்தார். அதேபோல் நீதிபதி குமாரசாமியும் தனது தீர்ப்பை விரைந்து அளிக்கத் திட்டமிட்டுள்ளாராம். அநேகமாக தீர்ப்பு தேதி மார்ச் 18 ஆக இருக்கும் என்று சொல்கிறார்கள் பெங்களூரு நீதிமன்ற வட்டாரத்தில் வலம் வருபவர்கள்.
அரசு வழக்கறிஞராக இருக்கும் பவானி சிங்கை நீக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க பொதுச்செயலாளர் அன்பழகன் தாக்கல் செய்திருந்த மனு வரும் 9-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. உச்ச நீதிமன்றம் அப்போது என்ன சொல்ல இருக்கிறது என்பதை அனைவரும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள். ஒருவேளை பவானி சிங்கை மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொல்லிவிட்டால், புதிய அரசு வழக்கறிஞர் வந்து, வாதங்களை வைத்து, அவரிடம் நீதிபதி கேள்விகளைக் கேட்டு... என அதிகப்படியான காலதாமதம் ஆகலாம். அப்படி எந்தத் தடையையும் போடவில்லை என்றால் மார்ச் 18 தீர்ப்பு வருவதில் எந்தச் சிக்கலும் இருக்காது. அதனால்தான் பெங்களூரு பயம் மீண்டும் பற்றிக்கொண்டுவிட்டது. அதனால்தான் அதிகாரிகள், அமைச்சர்கள் தன்னை வந்து சந்தித்தபோதும் சரியாகப் பேசாமல் இருந்தாராம் ஜெயலலிதா!' என்பதைச் சொல்லிவிட்டுப் பறந்தார் கழுகார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக