செவ்வாய், 26 ஏப்ரல், 2016

ஏரலை தலைமையிடமாக புதிய தாலுகா தொடங்கப்படும். மு.க.ஸ்டாலின்

T
“தி.மு.க. ஆட்சியில் உப்பு உற்பத்திக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்குவோம்“ என்று தூத்துக்குடி பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் கூறினார்.

திருச்செந்தூர்

திருச்செந்தூரில் நேற்று பிரசாரம் தொடங்கிய தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து காயல்பட்டினம் சென்றார். அங்கு அவருக்கு மலர் தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அங்கு மு.க.ஸ்டாலின் பேசுகையில், “அன்றும், இன்றும், என்றும், ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் சிறுபான்மை மக்களின் பாதுகாவலராக தி.மு.க. தலைவர் கருணாநிதி உள்ளார். தி.மு.க. ஆட்சியில் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் பின்னர் வந்த அ.தி.மு.க. அரசு அதனை கிடப்பில் போட்டது. மீண்டும் தி.மு.க. ஆட்சி வந்தவுடன் இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு அதிகரிக்கப்படும். தி.மு.க. கூட்டணியில் முஸ்லிம்களுக்கு அதிக தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது“ என்று கூறினார்.

ஸ்ரீவைகுண்டம் தொகுதி

ஸ்ரீவைகுண்டம் தொகுதி பழையகாயல் மெயின் ரோட்டில் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராணி வெங்கடேசனுக்கு கை சின்னத்தில் வாக்களித்து ஆதரவு தர வேண்டும். எந்த சூழ்நிலையிலும் உங்களை தேடி வருகிறவர்கள் நாங்கள்தான். தலைவர் கருணாநிதி தேர்தல் அறிக்கையில் 501 உறுதிமொழிகள் வழங்கி உள்ளார். கடந்த 2006-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை ஹீரோ என்றும், இந்த தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோ என்றும் வர்ணிக்கப்பட்டு இருக்கிறது.

காமராஜர் மதிய உணவு திட்டம் கொண்டு வந்தார். சத்துணவு திட்டத்தை எம்.ஜி.ஆர். செயல்படுத்தினார். அதனை மறுப்பதற்கு இல்லை. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் சத்துணவு திட்டத்தை நிறுத்தி விடுவார்கள் என்று சிலர் கூறினர். ஆனால் நாங்கள் சத்துணவுடன் சேர்த்து முட்டையும் வழங்கினோம். இனி தி.மு.க. ஆட்சியில் மாணவ-மாணவிகளுக்கு சத்துணவுடன் சேர்த்து பாலும் வழங்குவோம்.

தாமிரபரணி, நம்பியாறு, கருமேனியாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவோம். தாமிரபரணி ஆறு மூலம் பாசன வசதி பெறும் 53 குளங்களை தூர்வாருவோம். வாழைக்காய் பவுடர் தயாரிப்பு, வாழைநார் தயாரிப்பு நிறுவனம் தொடங்குவோம். சீராக குடிநீர் வழங்குவோம். ஏரலை தலைமையிடமாக புதிய தாலுகா தொடங்கப்படும். புத்தன்தருவை குளம் நிரம்பும்போது போக்குவரத்து துண்டிக்கப்படும் இடங்களில் மேம்பாலம் அமைப்போம். மங்களகுறிச்சி- ஸ்ரீவைகுண்டம் இடையே இருவழிச்சாலை அமைக்கப்படும்.

கருணாநிதி சொன்னதை செய்வார், செய்வதைத்தான் சொல்வார். ஆனால் ஜெயலலிதா 5 ஆண்டுகளில் எதையும் செய்யாமல், சொல்லாதையும் செய்ததாக கூறுகிறார்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

தூத்துக்குடி

பின்னர் அவர் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பெ.கீதாஜீவனை ஆதரித்து, தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

தூத்துக்குடியில் தொழிற்சாலைகள், உப்பளங்களுக்கு அ.தி.மு.க. அரசு எதையுமே செய்யவில்லை. இங்கு தொழில்நுட்ப பூங்கா கொண்டு வருவதாக கூறினார்கள், அதையும் செய்யவில்லை. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், புதிய தொழில்களுக்கு ஒற்றை சாளர முறையில் 100 நாட்களில் அனுமதி வழங்குவோம்.

சென்னை, கடலூர், தூத்துக்குடி நகரங்கள் மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டன. கடந்த தி.மு.க. ஆட்சியிலும் வெள்ளம் வந்தது. அப்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடிக்கு வந்து நான் பார்வையிட்டேன். உடனே பக்கிள் ஓடையை சீரமைக்க ரூ.36 கோடி நிதி ஒதுக்கினேன். ஆக்கிரமிப்புகளை அகற்ற சிரமம் ஏற்பட்டது. அதனை உடனே சரிசெய்ய கையெழுத்திட்டவர் தலைவர் கருணாநிதி.

இந்த பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெருவெள்ளம் வந்தது. பக்கிள் ஓடையால் அப்பகுதி பெரும் பாதிப்பில் இருந்து தப்பியது. தி.மு.க. ஆட்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 11 வார்டுகள் மேம்படுத்தப்படும். மதுரை- தூத்துக்குடி இடையே தொழில் வழித்தடம் அமைக்கப்படும். முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு தொழில் தொடங்க கடன் உதவி வழங்கப்படும்.

மாவட்ட அளவில், தொகுதி அளவில் தேர்தல் அறிக்கை வெளியிட்ட ஒரே கட்சி தி.மு.க.தான். தூத்துக்குடியில் கனரக வாகனங்கள் நிறுத்தும் இடம் (டிரக் டெர்மினல்) அமைக்கப்படும். மீனவர்களுக்கு வழங்கப்படுவதுபோன்று உப்பள தொழிலாளர்களுக்கும் உதவித்தொகை வழங்கப்படும். உப்பு உற்பத்திக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்கப்படும். அங்கு சுகாதார வசதியும் செய்து தரப்படும்.

தூத்துக்குடி- திருச்செந்தூர் ரோடு சந்திக்கும் இடத்தில் மேம்பாலம், முள்ளக்காடு அருகே மேம்பாலம் அமைக்கப்படும். புதிய 4-வது குடிநீர் திட்டம் மேம்படுத்தப்படும். நகர வளர்ச்சிக்கு ஏற்ப புதிய போலீஸ் நிலையங்கள் அமைக்கப்படும். தூத்துக்குடி- மணியாச்சி ரோடு அகலப்படுத்தப்படும். வியாபாரிகளின் பிரச்சினைகள் களையப்படும். பத்திர பதிவில் லஞ்ச லாவண்யம் களையப்படும். எனவே உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, தி.மு.க. தலைவர் கருணாநிதி 6-வது முறையாக முதல்- அமைச்சராக வர வாய்ப்பு தாருங்கள்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

ஓட்டப்பிடாரம்

பின்னர் மு.க.ஸ்டாலின் ஓட்டப்பிடாரத்தில் புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமியை ஆதரித்து பிரசாரம் செய்தார். தொடர்ந்து அவர் விளாத்திகுளம் தொகுதி எட்டயபுரத்தில் தி.மு.க. வேட்பாளர் பீமராஜை ஆதரித்தும், கோவில்பட்டியில் தி.மு.க. வேட்பாளர் சுப்பிரமணியனை ஆதரித்தும் பிரசாரம் செய்தார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...