வியாழன், 17 ஏப்ரல், 2014

மிஸ்டர் கழுகு: ஆளுங்கட்சியைப் மறிக்கும் மக்கள்!

மிஸ்டர் கழுகு: ஆளுங்கட்சியைப் மறிக்கும் மக்கள்!
சிறகைச் சிலிர்த்து வியர்வையை உதறிவிட்டு அமர்ந்த கழுகார், ''ஏ.சி-யைக் கொஞ்சம் அதிகப்படுத்துங்​கப்பா...'' என்றார் உற்சாகமாக.

''தி.மு.க. மேட்டர்ல இருந்தே ஆரம்பிக்கிறேன்'' என்றபடி பதிலுக்குக் காத்திருக்காமல் செய்தி​களைக் கொட்ட ஆரம்பித்தார்.
''அழகிரியின் நிழலாக வலம்வரும் கே.பி.​ராமலிங்கம், பிரசாரத்துக்கு வந்த கருணாநிதியை ஈரோட்டில் சந்தித்திருக்கிறார். கருணாநிதி கேட்ட எல்லா கேள்வி​களுக்கும் அழகிரியைக் கொஞ்சமும் விட்டுக்கொடுக்​காமல் பதில் சொல்லியிருக்கிறார் கே.பி.ராம​லிங்கம்.''
''என்ன கேட்டாராம் கருணாநிதி?''
''ராமலிங்கம் உள்ளே போனதும், வழக்கமான நலம் விசாரிப்புகள்கூட இல்லையாம். 'என்னய்யா... நீதான் அவன்கூடவே சுத்திட்டு இருக்கே... அவன் பண்றதெல்லாம் நல்லாவா இருக்கு? நீயாவது சொல்லக் கூடாதா?’ என்று ஆரம்பித்திருக்கிறார் கருணாநிதி.
'நீங்கதான் அவரைக் கட்சியை விட்டு நீக்கிட்டீங்க. இந்தச் சூழ்நிலையில அவரை எப்படித் தனியா விடமுடியும். நான் அவர்கூட இருக்​கிறதுதான் சரியா இருக்கும்’ என்று கே.பி.ராமலிங்கம் சொல்லவும், நிமிர்ந்து பார்த்த கருணாநிதி, 'அவனுக்கு நான் என்னவெல்லாம் செஞ்சிருக்கேன். கோபால்சாமியைப் பார்க்குறான். தி.மு.க. தோற்கணும்னு பேசுறான்... இதெல்லாம் சரியா?’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு ராமலிங்கம், 'எவ்வளவோ பிரச்னைகள் இருக்கும்போது, ஸ்டாலினை துணை முதல்வரா அறிவிச்சீங்க. நீங்க முதல்வரா இருந்தாலும் எல்லாம் செய்றது ஸ்டாலின்தான் என்ற தோற்றத்தை உருவாக்குனீங்க. கடந்த சட்டமன்றத் தேர்தல்ல நம்ம கட்சி தோற்கற​துக்குக் காரணமே அதுதான். ஸ்டாலினா... ஜெயலலிதாவா... என்று மக்கள் யோசிச்சாங்க. ஸ்டாலினுக்கு ஜெயல​லிதாவே பரவாயில்லன்னு அந்தம்மாவுக்கு ஓட்டுப் போட்டுட்டாங்க. இப்பவும் நீங்கதான் அவசரப்பட்டு அவரைக் கட்சியைவிட்டு நீக்கினீங்க?’ என்று கொந்தளித்தாராம் ராமலிங்கம்.''
''அப்புறம்...?''
''கருணாநிதியும் விடவில்லை. 'அவனுக்கு நான்தான் மத்திய அமைச்சர் பதவி வாங்கிக்கொடுத்தேன். அவனுக்கு நான் என்ன செய்யாம இருந்தேன்?’ என்று கேட்க... 'மத்திய அமைச்சராகி டெல்லிக்குப் போயிட்டா போதுமா? கட்சியில அவருக்கு என்ன மரியாதை கொடுத்தீங்க? தென் மாவட்டத்துல கட்சியை வளர்க்க அவர் பட்ட கஷ்டமெல்லாம் எனக்குத் தெரியும். ஆனால், உங்களுக்கு சின்னவரு மட்டும்தான் முக்கியமா போச்சு...’ என்றதும், அடுத்த டாபிக் மாற்றியிருக்கிறார் கருணாநிதி. 'அவன் ராஜ்நாத் சிங்கைப் பார்க்கப் போனபோது நீயும் அவனோடு போயிருக்க... உனக்கு எதுக்கு இந்த வேலை?’ என்று கேட்டிருக்கிறார்.
'டெல்லியில அவருக்கு லாங்வேஜ் பிராப்ளம். அதனால அவரு போற இடத்துக்கு நான் கூடவே போறேன். இதுல என்ன தப்பு இருக்கு? ரெண்டு பேரையும் ஒரே மாதிரிப் பாருங்க... இவரை மட்டுமே குறை சொல்றதுல எந்தப் பிரயோஜனமும் இல்லை’ என்று விடாமல் பதில் சொல்லியிருக்கிறார் ராமலிங்கம்.''
''சமாதானம் ஆனாரா கருணாநிதி?''
''இல்லை... 'அப்போ அவன் தி.மு.க. தோற்கும்னு சொன்னது எல்லாம் சரின்னு சொல்றியா?’ என்று கருணாநிதி கேட்க, 'தி.மு.க. தோற்கும்னு சொன்னது தப்புதான்’ என்றாராம் ராமலிங்கம். 'அப்படின்னா... நாளைக்கு நீ சேலம் கூட்டத்துக்கு வா... அங்கே வந்து அழகிரி தி.மு.க. தோற்கும் என்று சொன்னது தப்பு. அதில் எனக்கு உடன்பாடு இல்லை என்று பேசு!’ என்று கருணாநிதி அழைத்திருக்கிறார். பதில் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து கிளம்பிவிட்டாராம் ராமலிங்கம். மறுநாள் சேலம் கூட்டத்துக்கும் அவர் போகவில்லை.''
''இது அழகிரிக்குத் தெரியுமா?''
''ராமலிங்கம் சொல்லவில்லையாம். வேறு சிலர் மூலமாக அழகிரி காதுக்குப் போயிருக்கிறது. அவர் ராமலிங்கத்தைத் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். 'என்ன சொன்னாரு?’ என்று கேட்டவர், 'நீ எதுக்காக அங்கே போற? அங்கே போனா எதுவும் நடக்காதுன்னு எனக்குத் தெரியும். ஏதோ கட்சியில எல்லா முடிவும் தலைவரே எடுக்கிற மாதிரி, நீ அவருகிட்டப் போய் சண்டை போட்டுட்டு வந்திருக்க. பேருக்குத்தான் அவர் தலைவர். அவரால அங்கே எதுவும் செய்ய முடியாது!’ என்று சொல்லி சிரித்திருக்கிறார்.'
''சேலத்தில் கருணாநிதியின் ரியாக்ஷன்?''
''வீரபாண்டி ஆறுமுகம் மறைவுக்குப் பிறகு இப்போதுதான் கருணாநிதி சேலம் செல்கிறார். கருணாநிதியை ஈரோட்டுக்கே சென்று சேலத்துக்கு அழைத்து வந்தது வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் ராஜாதான். அந்த சமயத்தில் ராஜா, தன் குடும்பத்தினரையும் தனது ஆதரவாளர்களையும் ஸ்டாலின் ஆட்கள் எப்படியெல்லாம் புறக்கணிக்கிறார்கள் என்பதைச் சொன்னாராம். அதையெல்லாம் அமைதியாகக் கேட்ட கருணாநிதி, 'என்னிடம் சொல்லி என்ன நடக்கப்போகிறது. கட்சி என் கட்டுப்பாட்டிலா இருக்கிறது? எனக்கு வேண்டப்பட்டவர்களுக்குக்கூட என்னால் உதவ முடியவில்லை. எல்லோரையும் அனுசரித்துப் போகச் சொல்லுப்பா... தம்பி ஆறுமுகம் இருந்திருந்தால் எனக்கேகூட இவ்வளவு பெரிய பிரச்னை வந்திருக்காது. அப்புறம் உங்க குடும்பத்துக்கு மட்டும் பிரச்னை இல்லாமலா இருக்கும்?’ என்று தழுதழுத்தாராம் கருணாநிதி. வீரபாண்டி ஆறுமுகம்தான் அழகிரிக்கும் கலைஞருக்கும் இணைப்புப் பாலமாக இருந்தவர். வீரபாண்டி ஆறுமுகம் மட்டும் இருந்திருந்தால், அழகிரி பிரச்னை இந்த அளவுக்கு வளர்ந்திருக்காது என்பதைத்தான் கருணாநிதி மறைமுகமாகச் சொல்லியிருக்கிறார் என்கிறார்கள் வீரபாண்டியார் ஆதரவாளர்கள்.''
''ஓஹோ''
''சேலத்தில் தங்கியிருந்த ஹோட்​டலில் இருந்து பொதுக்கூட்ட மேடைக்குச் செல்லும் வழியில் மாவட்ட தி.மு.க. அலுவலகத்தைக் கடக்கும்போது கருணாநிதி கார் அங்கே சில நொடிகள் நிறுத்தப்பட்டது. அலுவலக வாசலில் இருந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் சிலையைப் பார்த்த கருணாநிதி, 'சிங்கமா இருந்தியேப்பா... இப்போ சிலையா நிற்கிறியே...’ என்றபடி கண்கலங்கினாராம்.''
''திடீரென்று, 'என்னையும் ஸ்டாலினையும் பிரிக்க முடியாது’ என்று அழகிரி பேசியிருக்கிறாரே?''
''அழகிரிக்கு அப்போதைக்கு என்ன தோன்றுகிறதோ அதைப் பேசிவிட்டுப் போகிறார். அவருக்குக் கட்சியைவிட்டுப் போகும் எண்ணம் இல்லை. கட்சியில் தன்னுடைய முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக எதையாவது செய்துகொண்டு இருக்கிறார். தான் இல்லாததால் தென் மாவட்டத்தில் தி.மு.க. தோற்றது என்று காட்ட நினைக்கிறார். அதனால்தான், 'தி.மு.க. நான்காவது இடத்துக்கு அனைத்துத் தொகுதியிலும் போக வேண்டும்’ என்று சொல்லி வருகிறார். அழகிரி இப்படிப் பேசிவருவது, ஸ்டாலின் ஆதரவு மாவட்டச் செயலாளர்களால் ஒதுக்கப்பட்டவர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. அவர்கள் மறைமுகமாக உள்குத்து வேலைகளைப் பார்க்க ஆரம்பித்துள்ளார்கள்.''
''அடுத்த மேட்டரைச் சொல்லும்?''
''தேர்தல் நேரத்தில் பகையை மறந்து ஒற்றுமையாக வேலை பார்த்து வெற்றிபெற வேண்டும் என்று தி.மு.க தலைமை வற்புறுத்தி வருகிறது. ஆனால், விழுப்​புரத்தில் பொன்முடிக்கும் மாவட்டத் துணைச் செயலாளர் புஷ்பராஜுக்கும் ஏற்பட்டுள்ள மோதல் தி.மு.க-வில் பெரிய சிக்கலை உண்டாக்கியிருக்கிறது. விழுப்புரம் தொகுதியில் புஷ்பராஜ் சீட் கேட்டார். அது பொன்முடிக்குப் பிடிக்கவில்லை. தனது மகனின் நண்பரான டாக்டர் முத்தையனுக்கு சீட் வாங்கிக் கொடுத்துவிட்டார். ஆனாலும், புஷ்பராஜ் மீது பொன்முடிக்குக் கோபம் குறையவில்லை. புஷ்பராஜை கட்சியைவிட்டு நீக்கியே ஆக வேண்டும் என்று கோபத்துடன் சொல்ல ஆரம்பித்துள்ளாராம் பொன்முடி!''
''அப்படியா?''
''பொன்முடி வளர்வதற்கு புஷ்பராஜும் முக்கியக் காரணமாக இருந்தார். தாழ்த்தப்பட்ட மக்களிடம் செல்வாக்காக இருந்த புஷ்பராஜ், 2001 தேர்தலில் எம்.எல்.ஏ. சீட் கேட்டார். ஆனால், பொன்முடி வாங்கித் தரவில்லை. அந்த சமயத்தில் தன் ஆதரவாளர்களுடன் பொன்முடி வீட்டை முற்றுகையிட்டார். அப்போது இருந்தே பிரச்னை தொடங்கிவிட்டது. ஆனாலும், அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருந்தார் பொன்முடி. இந்த முறை புஷ்பராஜை பணம் கட்டச் சொன்னது பொன்முடிதான். கடைசி நேரத்தில் தன் நண்பரின் மகன் சீட் கேட்டதால் முடிவை மாற்றிக்கொண்டார் என்று சொல்லும் புஷ்பராஜ் ஆதரவாளர்கள், 'பொன்முடியின் இந்த செயலுக்கு நாங்கள் எதிர்ப்பைக் காட்டவும் இப்போது புஷ்பராஜை ஒதுக்க ஆரம்பித்துவிட்டார்’ என்றும் சொல்கிறார்கள்.''
''அப்புறம்?''
''இதில் உச்சகட்டமாக விழுப்புரம் மந்தக்கரையில் காதர் மொய்தீன் கலந்து​கொண்ட கூட்டத்தில் மேடையில் அமர்ந்திருந்த புஷ்பராஜை கீழே இறங்குமாறு பொன்முடி நேரடியாகச் சொன்னாராம். புஷ்பராஜும் வேறு வழியில்லாமல் மேடையில் இருந்து இறங்கியிருக்கிறார். கூடிய சீக்கிரமே அவரைக் கட்சியில் இருந்து கட்டம் கட்டுவதற்கான வேலைகளிலும் பொன்முடி இறங்கிவிட்டதாகவே தி.மு.க. வட்டாரத்தில் தகவல்!''
''அ.தி.மு.க. நிலைமை எப்படி?''
''திமு.க-வில் உள்குத்து என்றால்... அ.தி.மு.க-வி​னருக்கு வெளிக்குத்து. அ.தி.மு.க. வேட்பாளர்கள் செல்லும் இடம் எல்லாம் மக்கள் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. மக்கள் கோபத்துக்குக் காரணம், வேட்பாளர்களுடன் வரும் லோக்கல் எம்.எல்.ஏ-க்கள், அமைச்சர்கள்தான். விருதுநகர் அ.தி.மு.க. வேட்பாளர் ராதாகிருஷ்ணனுக்கு வாக்கு கேட்டு திருமங்கலத்தைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குச் சென்றனர். அப்போது பன்னீர்குண்டு கிராமத்தினர் வேட்பாளரின் காரை மறித்து ஊருக்குள் வரக் கூடாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனே மதுரை புறநகர் மாவட்டச் செயலாளரும் எம்.எல்.ஏ-வுமான முத்துராமலிங்கம், 'உங்கள் பிரச்னைகளை என்னிடம் சொல்லுங்கள். நான் தீர்த்துவைக்கிறேன்’ என்று மக்களைப் பார்த்து சொல்லியிருக்கிறார். 'நாங்க  வேட்பாளர் வர்றதை எதிர்க்கலை. நீர் அவர்கூட வர்றதைத்தான் எதிர்க்கிறோம். எம்.எல்.ஏ-வா ஜெயிச்சு எங்க ஊருக்கு என்னய்யா செஞ்சீர்? இப்போதான் இந்த ஊருக்கு வருவதற்கு உனக்கு கண்ணு தெரிஞ்சதா? வேட்பாளர் பிரசாரம் செய்யட்டும். நீ வாயைத் திறக்கவே கூடாது. ஊருக்குள்ளேயும் வரக் கூடாது’ என்று கோபத்துடன் சொல்லியிருக்கிறார்கள். மக்கள் சொன்னபடியேதான் பிரசாரம் நடந்திருக்கிறது.
மேல உரப்பனூர் என்ற கிராமத்திலும் முத்துராமலிங்கத்தை உள்ளே விடவில்லையாம்!''
''சிக்கல்தான்.''
''தேனி நாடாளுமன்றத் தொகுதிக்குள் வரும் சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ. கருப்பையாவை எதிர்த்து பல கிராமங்களிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால், தேனி தொகுதி வேட்பாளர் பார்த்திபனால் சோழவந்தான் தொகுதிக்குள் உற்சாகமாக வாக்கு கேட்க முடியவில்லை. பச்சப்பட்டி என்ற கிராமத்தில் ஒரு பிரிவினர் எம்.எல்.ஏ. கருப்பையாவைக் கண்டித்து தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். இன்னும் பல ஊர்களில் நுழைய கருப்பையாவுக்குத் தடை விதித்துள்ளார்களாம்.
பார்த்திபனுக்காகப் பிரசாரம் செய்ய அமைச்சர் ஓ.பி.எஸ். வாடிப்பட்டிக்குப் போயிருக்கிறார். அங்கே அ.தி.மு.க-வில் இரண்டு கோஷ்டிகளுக்கு இடையில் தகராறு. அவர்களை ஓ.பி.எஸ். சமாதானம் செய்ய முயற்சித்திருக்கிறார். இரண்டு தரப்பும் அமைச்சர் முன்னிலையிலேயே மோதிக்கொண்டார்கள். அவர்களுக்கு நடுவே ஓ.பி.எஸ். மாட்டிக்கொள்ள... அங்கிருந்த மைக்கில், 'அடிதடிக்குள் அமைச்சர் மாட்டிக்கொண்டார். அவரை மீட்க வருமாறு போலீஸாரை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்’ என்று சிலர் அறிவிப்பு செய்ய... போலீஸ் பதறியடித்துக்கொண்டு வந்து அமைச்சரை மீட்டது.''
''ம்!''
''ராமநாதபுரம் தொகுதி வேட்பாளரான அன்வர்ராஜா, அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், டாக்டர் சுந்தர்ராஜுடன் சேர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியப்பட்டி, நரிக்குடி, திருச்சுழி பகுதிகளில் கடந்த 7-ம் தேதி வாக்கு கேட்கச் சென்றார்கள். காரியாபட்டி ஒன்றியத்தில் மொத்தம் நான்கு கோஷ்டி. இவர்களில் யார் சொல்வதைக் கேட்பது என்பதில் அன்வர்ராஜாவுக்கு தலைவலி. இதனாலேயே அந்தப் பகுதியில் செயல்வீரர் கூட்டத்தையே இதுவரை நடத்த முடியவில்லை.

ஓட்டு கேட்கச் சென்ற வேட்பாளருக்கும் அமைச்சர்களுக்கும் இரவு உணவை ஒரு கோஷ்டி ஏற்பாடு செய்துவைத்திருக்க... இன்னொரு கோஷ்டி எங்கள் வீட்டுக்குத்தான் வர வேண்டும் என்று அடம்பிடிக்க... அங்கேயும் கல்வீச்சு கைகலப்பு ஆரம்பமானது. அந்த நேரத்தில் கரன்ட் கட் ஆக, அமைச்சர்களை பத்திரமாக காரில் ஏற்றி அனுப்பி வைத்தது இன்னொரு கோஷ்டி.''
''தென் மாவட்டங்கள் முழுக்க இப்படித்தான் இருக்கிறதா?''
''மதுரை வேட்பாளர் கோபால​கிருஷ்ணன் செயல்வீரர் கூட்டம் நடத்த மேலூர் சென்றபோது அந்தத் தொகுதி எம்.எல்.ஏ-வான சாமியும் அவருக்கு எதிர் கோஷ்டியான கொட்டக்குடி சரவணனும் தனித்தனியாக வரவேற்பு கொடுக்கக் காத்திருந்தனர். அங்கேயும் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வெட்டுக்குத்தில் முடிந்துள்ளது. கொட்டக்குடியில் எம்.எல்.ஏ. சாமிக்கு எதிராகப் பெண்கள் கோஷம் போட்டனர். இப்படி ஊரெங்கும் கோஷ்டிப்பூசல் தலைதூக்கி சிக்கலை ஏற்படுத்தி வருகிறது.''
''இதெல்லாம் தலைமைக்குத் தெரியாமலா இருக்கும்?''
''அதைக் கவனிக்கத்தான் 'உளவுப்​புலி’ அலெக்ஸாண்டரை களம் இறக்கிட்ட​£ங்களே...'' என்று சொல்லிவிட்டு சிறகை விரித்தார் கழுகார்.

படங்கள்: பா.காளிமுத்து, தே.சிலம்பரசன்

'நீங்களே நீதிபதி!’
நீலகிரி தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா சார்பில் ஒரு நோட்டீஸ் சில தினங்களுக்கு முன்பு தொகுதியில் வீடு வீடாக விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அந்த நோட்டீஸில், 'இப்போது மக்கள் நீதிமன்றத்தில் நீதி கேட்டு வந்திருக்கிறேன். நீங்களே நீதிபதி. தீர்ப்பளியுங்கள். நான் தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது, ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்ததாக சொன்னார்கள். சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் 33 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வந்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும் என்று நழுவினார்கள். இப்படி ஆளுக்கு ஆள் மாறி மாறிப் பேசுகிறார்கள். என்னால், செல்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 90 கோடியாக உயர்ந்திருக்கிறது. செல்போன் கட்டணம் 50 பைசாவாக சரிந்திருக்கிறது. இதையெல்லாம் பரிசீலித்து கோர்ட் தீர்ப்பு வரும் முன் நீங்கள் எனக்குத் தீர்ப்பு கொடுங்கள். நான் தப்பு ஏதும் செய்யவில்லை’ என்று விவரிக்கும் அந்த நோட்டீஸில், ஆ.ராசாவை முதன்முதலாக சி.பி.ஐ. கைது செய்தபோது எடுத்த புகைப்படத்தை முன் பக்கத்தில் அச்சிட்டுள்ளனர்.

பி.ஜே.பி-யில் ஆசீர்வாதம் ஆச்சாரி!
2ஜி வழக்கில் ஆ.ராசாவை சிக்கவைக்கக் காரணம் ஆனவர் ஆசீர்வாதம் ஆச்சாரி. ஆ.ராசா அமைச்சராக இருந்தபோது அவரது தனிச் செயலாளராக இருந்தவர் அவர். அவர் இப்போது பி.ஜே.பி-யில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார். இது அகில இந்திய அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
சுமார் ஒன்பது வருடங்களாகக் கூடுதல் பிரைவேட் செக்ரெட்டரியாக ஆ.ராசாவுடன் பணியாற்றியவர் ஆசீர்வாதம் ஆச்சாரி. இவர் சி.பி.ஐ. நீதிமன்றத்தில், அலைக்கற்றை ஊழல் தொடர்பாக, 164 சட்டப் பிரிவின் கீழ் வாக்குமூலம் கொடுத்திருந்தார். 1.1.2006 அன்று தேதி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஆ.ராசாவின் கூடுதல் தனிச் செயலாள​ராக நியமிக்கப்பட்டார் ஆசீர்வாதம். 2007 மே மாதம் ஆ.ராசா தொலைத்தொடர்புத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். ஆ.ராசாவின் விருப்பப்படி, சுற்றுச்சூழல் துறையில் இருந்து தொலைத்தொடர்புத் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டு, ஆ.ராசாவின் கூடுதல் தனிச் செயலாளராக ஆக்கப்பட்டார் ஆசீர்வாதம்.
'ஆ.ராசாவின் வீட்டுக்கு, 2008 ஜனவரி 8, 9, 10 ஆகிய மூன்று நாட்கள் ஹவாலா புரோக்கர் மகேஷ் ஜெயின் அடிக்கடி வந்து சென்றார். ஸ்வான் டெலிகாம் நிர்வாக இயக்குநர் ஷாகித் பால்வா, அமைச்சரைப் பார்க்க அடிக்கடி வருவார். யுனிடெக் சஞ்சய் சந்தோலியாவும் அமைச்சர் வீட்டுக்கு வருவார்’ என்று வாக்குமூலம் கொடுத்தது இவர்தான்.
அதன் பிறகு டெல்லியில் அமைதியாக இருந்த ஆசீர்வாதம், இப்போது பி.ஜே.பி-யில் சேர்ந்துள்ளார். இவரைக் கொண்டுவந்து சேர்த்தது சுப்பிரமணியன் சுவாமி என்று சொல்கிறார்கள்.  பி.ஜே.பி-யில் தலைமையகத்தில் உட்கார்ந்து தேர்தல் செய்திகளைப் பார்வையிட்டு வியூகங்களை வகுப்பதற்காக அமைக்கப்பட்ட குழு உறுப்பினராக ஆசீர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...