வியாழன், 17 ஏப்ரல், 2014

மிஸ்டர் கழுகு: ஜெயலலிதா விரக்தி!

மிஸ்டர் கழுகு: ஜெயலலிதா விரக்தி!
''தமிழகத் தேர்தலின் மையமாக மோடி மாறிக்கொண்டு இருக்கிறாரே?'' - கழுகார் தலை தெரிந்ததும் இந்தக் கேள்வியைத்தான் உருட்டிவிட்டோம்.

''ஆமாம்! இதுவரை நரேந்திர மோடி பெயரை மறந்தும் சொல்லாமல், பி.ஜே.பி-யை விமர்சிக்காமல் தப்பித்துவந்த கருணாநிதியும் ஜெயலலிதாவும் முதன்முதலாக இந்த வாரம்தான் அவர்களைப் பற்றிப் பேச ஆரம்பித்துள்ளனர். கருணாநிதியைச் சீண்டிவிட்டவர் ப.சிதம்பரம். ஜெயலலிதாவைக் கோபப்படுத்தியவர் ரஜினி!''
''முதலில் கருணாநிதி விஷயத்தைச் சொல்லும்!''
''மோடியைப் பற்றிய விமர்சனங்களை தனது பிரசாரத்தில் தவிர்த்துவந்த கருணாநிதி, வட மாவட்டங்களில் அவரைப் பற்றியும் பேச ஆரம்பித்துவிட்டார்.
கடந்த 10-ம் தேதி சென்னையில் இருந்து கிளம்பினார் கருணாநிதி. மரக்காணத்தில் உச்சி வெயில் மண்டையைப் பிளக்க... கருணாநிதிக்காகக் காத்திருந்தது கூட்டம். 'மதச்சார்பற்ற கூட்டணியை அமைத்துள்ளோம்’ என்று மட்டும் சொன்னார். அங்கிருந்து புதுவை வந்தடைந்த கருணாநிதி, ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான அக்கார்ட் ஹோட்டலில் சில மணி நேரம் ஓய்வெடுத்தார். மாலை அண்ணா திடலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட அவர், 'மணமாகாத காமராஜரைப் போன்று தேசத் தொண்டு ஆற்றப்போகிறார் என்று மோடியைப் பற்றி எண்ணினோம். ஆனால், மனுத் தாக்​கலின்போது மோடிக்குத் திருமணமாகி​விட்டது என்ற உண்மையை வெளியிட்டுள்ளனர். இந்த உண்மையை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. மனைவி இருப்பதை மறைக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? இவர் பிரதமரானால், இன்னும் என்னென்ன உண்மைகள் வெளிவருமோ? இதுதான் மோடி வித்தை என்பார்களோ?’ என்று மோடியை நையாண்டி செய்தார்.''
''மேற்கொண்டு சொல்லும்!''
''அன்று இரவு சிதம்பரத்தில் திருமாவளவனை ஆதரித்துப் பேசும் கூட்டம். அங்கும் மோடியைப் பற்றிய விளாசல் நிறையவே இருந்தது. 'தேர்தலில் நாமினேஷன் தாக்கல் செய்யும்போது எதையும் மறைக்கக் கூடாது. அப்படி மறைத்தால் அது குற்றம். அதில்தான் தனக்குத் திருமணம் ஆனதைக் குறிப்பிட்டிருக்கிறார் மோடி. இதுவரையில் தனக்குத் திருமணம் ஆனதையே மறைத்திருக்கிறார் என்றால், இவருக்குப் பிரதமராக என்ன தகுதி இருக்கிறது? இன்று நான் இதைப்பற்றி பேசியதும், நாளைக்கே மோடி, எனக்கு ஒரு மனைவி இருப்பது உண்மைதான்; அதை நான் மறந்துவிட்டேன் என்றுகூட சொல்லலாம். மோடி இன்னும் எதையெல்லாம் மறந்துவிட்டாரோ தெரியவில்லை. மனைவி இருப்பதை மறைத்தாலும், மோடி மறைக்காமல் இன்னொரு விஷயத்தைச் செய்திருக்கிறார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் ராமர் கோயிலைக் கட்டுவோம் என்று தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கிறார். அப்படியென்றால், என்ன அர்த்தம்? இந்தியாவில் மதக்கலவரத்தை உண்டாக்க என்ன செய்ய முடியுமோ அதைச் செய்வோம்; அந்த முறையில் நாங்கள் ராமர் கோயிலைக் கட்டுவோம் என்று சொல்லி இப்போதே அச்சாரம் போட்டு வைக்கிறார்கள்.
தயவு செய்து மோடியை நான் கேட்டுக்கொள்கிறேன்... ராமர் கோயிலைக் கட்டினால் அதற்காக பாபர் மசூதியை இடித்தால், அப்படி இடிப்பதற்கு ஜெயலலிதா போன்றவர்கள் ஆதரவு கொடுத்தால், ஏற்கெனவே அந்த அம்மையார் கரசேவைக்கு ஆதரவு கொடுத்தார்களே... அப்படிக் கொடுத்தால், நாடு என்ன ஆகும் என்று சிந்தித்துப் பாருங்கள். எங்களுக்கு ராமனோ, கிருஷ்ணனோ தனிப்பட்ட விரோதிகள் அல்ல. ஆனால், அந்தக் கடவுளின் பெயரால் நாட்டில் உள்ள மக்களிடம் மதக் கலவரங்களை ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது'' என்று எச்சரித்து தன் பிரசாரத்தை நிறைவு செய்தார்.''
''இதில் ப.சிதம்பரம் எங்கே வந்தார்?''
''அவர்தான் தான் போகும் இடம் எல்லாம், 'தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் உங்களது வாக்குகளை வாங்கிக்கொண்டு தேர்தல் முடிந்ததும் மோடியை ஆதரித்துவிடும்’ என்று சிறுபான்மையினருக்கு தூபம் போட்டு வருகிறார். இது சிறுபான்மையின மக்களை அதிகம் யோசிக்க வைத்துள்ளது. இதனை எதிர்கொள்வதற்காகத்தான் மோடியை கருணாநிதி விமர்சிக்க ஆரம்பித்துள்ளார்!''
''ஜெயலலிதா..?''
''இடதுசாரிகளுக்கு இடங்கள் ஒதுக்காமல் கழற்றிவிடப்பட்டதில் இருந்தே, அ.தி.மு.க-வுக்கும் பி.ஜே.பி-க்கும் ரகசிய ஒப்பந்தம் இருப்பதாகவே கம்யூனிஸ்ட் தலைவர்கள் சொல்லிவந்தார்கள். இந்த நிலையில் பி.ஜே.பி. பற்றியோ, மோடி பற்றியோ தன்னுடைய பிரசாரத்தில் எதுவும் சொல்லாமல் இருந்தார் ஜெயலலிதா. காங்கிரஸையும் கருணாநிதியையும் வாங்கு வாங்கு என்று வாங்கினார். பி.ஜே.பி-யின் தேர்தல் அறிக்கையில் ராமர் கோயில், பொது சிவில் சட்டம், காஷ்மீருக்குத் தனி அந்தஸ்து ரத்து ஆகிய சர்ச்சைக்குரிய சமாசாரங்கள் அதிகம் இருந்தன. அதனை ஆதரித்தும் எதிர்த்தும் பல கட்சிகள் கருத்து சொல்லிவிட்டன. ஆனால், ஜெயலலிதா எதுவும் சொல்லவில்லை. இந்தத் தேர்தலில் அ.தி.மு.க-வை ஆதரிக்கப்போவதாக அறிவித்த தவ்ஹீத் ஜமாஅத் அமைப்புக்கு இதனால் சந்தேகம் கிளம்பியது. அவர் தனது ஆதரவை வாபஸ் வாங்கினார். இந்த நிலையில் ரஜினிக்கும் பி.ஜே.பி-க்கும் பேச்சுவார்த்தைகள் தொடங்கியது. இந்தத் தகவல் ஜெயலலிதாவுக்கும் வந்துசேர்ந்தது. பி.ஜே.பி-யை ரஜினி ஆதரித்தால், தமிழக அரசியல் சூழல் மாறக்கூடிய வாய்ப்பு ஏற்படும் என்று போலீஸாரும் அறிக்கை கொடுத்தார்கள்!''
''உஷார்தான்!''
''அந்தக் கவலையின் வெளிப்பாடுதான், திருவள்ளூரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஜெயலலிதாவின் பேச்சு!''
''என்ன பேசியிருக்கிறார் முதல்வர்?''
''திருவள்ளூர் பேச்சில் வழக்கமான விஷயங்​களைச் சொல்லி முடித்த முதல்வர், 'உங்கள் வாக்குதான் இந்தியாவின் தலைவிதியையே மாற்றி அமைக்கப்போகிறது. அத்தகைய சக்தி படைத்தது உங்கள் வாக்கு. உங்கள் வாக்கை வீணாக்கிவிடாதீர்கள். இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் களம் இறங்கியுள்ளன. அந்தக் கட்சியினர் எல்லாம் உங்களிடம் வந்து வாக்கு கேட்கின்றனர். வேறு கட்சிக்கு நீங்கள் வாக்களித்தால், அதனால் யாருக்கும் எந்தப் பயனும் இருக்கப்போவது இல்லை. வேறு கட்சிக்கு நீங்கள் வாக்களித்தால், அந்தக் கட்சிகளும் வெற்றிபெற முடியாது; வாக்குகளும் சிதறிவிடும். எனவே, உங்கள் வாக்கை வீணாக்கிவிடாதீர்கள்’ என்று சொல்லியிருக்கிறார். இதுவரை நம் அணிதான் 40 தொகுதிகளிலும் வெல்லும், நாம் அங்கம் வகிக்கும் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என்று சொல்லிவந்த ஜெயலலிதா, முதல் தடவையாக, 'வேறு கட்சிக்கு வாக்களிக்காதீர்கள்’ என்று சொல்வதன் அர்த்தம் என்ன?''
''அர்த்தம் என்ன?''
''ஜெயலலிதாவுக்கு ஏதோ விரக்தி வந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். பி.ஜே.பி. கூடுதல் வாக்குகளையும் கூடுதலான வெற்றியையும் பெறும் என்று அவருக்குத் தகவல்கள் வந்துள்ளதாம். அதனால்தான் இப்படிச் சொல்லியிருக்கிறாராம். 'வேறு கட்சி’ என்று சொல்வது பி.ஜே.பி-யைத்தானாம். இந்தக் கட்சிக்கு மக்கள் போடும் ஒவ்வொரு ஓட்டும் அ.தி.மு.க-வுக்கு விழ வேண்டியது. அது விழாமல் போனால், தி.மு.க. ஏறுமுகத்தில் போய்விடும் என்று நினைக்கிறாராம் ஜெயலலிதா. இதை நேரடியாகச் சொல்லாமல், சுற்றிவளைத்து சொல்கிறார் என்கிறார்கள்!''
''இந்த மாற்றம் ஏனாம்?''
''தமிழக பிரசாரத்துக்கு நரேந்திர மோடி முதலில் வருவதாக இல்லை. பிரசாரம் செய்ய வருவதற்கான தேதி ஏதும் தரவில்லை. இதைக் கேள்விப்பட்ட ஜெயலிலலிதாவுக்குக் கொஞ்சம் நிம்மதி. 'அவர் வரவில்லை என்றால், நமக்கு நல்லதுதான்' என்று நினைத்திருந்தார். ஆனால், திடீரென்று நிலைமை மாறியது. மோடி தமிழகம் வருவது உறுதியாகிவிட்டது என்பதை டெல்லி சோர்ஸ் மூலம் கேள்விப்பட்டதும் கொஞ்சம் அப்செட் ஆனார் ஜெயலலிதா. மூன்று நாட்கள் மோடி வரப்போகிறார்; இதில் மொத்தம் ஏழு ஊர்களில் பேசுகிறார்; அத்வானி, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, வெங்கய்யா நாயுடு, முக்தார் அப்பாஸ் நக்வி... போன்றவர்களும் அடுத்தடுத்து தமிழகத்துக்கு சூறாவளி சுற்றுப்பயணம் வருகிறார்கள் என்ற தகவல் ஆளுங்கட்சியை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது!''  
''பி.ஜே.பி-யின் நகர்வுகள் ரொம்பவும் சீக்ரெட் ஆக இருந்துவிட்டதே?''
''ஏற்கெனவே திருச்சி, காஞ்சிபுரம் ஆகிய இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளில் மோடி பொதுக்கூட்டம் பேசிவிட்டார். வேறு எந்தத் தொகுதிகளில் மோடி பிரசாரம் செய்யலாம் என்று டெல்லியில் ஆலோசனை நடந்தது. தமிழகத்தில் பி.ஜே.பி. வேட்பாளர்களுக்காக ஒரு நாள், கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்காக அடுத்த நாள்... என்று இரண்டு நாட்கள் பிரசாரம் செய்ய முடிவானது. பி.ஜே.பி-யில் இருந்து கோவை, கன்னியாகுமரி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளுக்கு மோடியை அழைத்துச் செல்ல நினைத்தார்கள். ஆனால், பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கன்னியாகுமரியில் நிலவரம் சாதகமாக இருப்பதை சுட்டிக்காட்டி, அங்கு வேண்டாம் என்று பெருந்தன்மையாக விட்டுக்கொடுத்தாராம். அதனால், கோவையிலும் ராமநாதபுரத்திலும் வருகிற 16-ம் தேதியன்று மோடி பேச முடிவானது. அதேபோல், கூட்டணி கட்சியினருக்காக ஏப்ரல் 17-ம் தேதியன்று சேலம், தர்மபுரி, விருதுநகர் ஆகிய ஊர்களுக்கு மோடியை அழைத்துச் செல்ல நினைத்தனர். ஆனால், பா.ம.க. தரப்பில் அன்புமணி தனக்கு தர்மபுரி தொகுதி பாஸிட்டிவ் ஆக தெரிவதால், கிருஷ்ணகிரியில் போட்டியிடும் கோ.க.மணிக்கு ஆதரவாக அங்கே மோடியை பிரசாரம் செய்யவைக்க கோரிக்கைவிடுத்தார். இதே பாணியில், ம.தி.மு.க. தரப்பில் வைகோ, தனக்கு விருதுநகர் சாதகமாக இருப்பதால், தனது கட்சியின் வேட்பாளர் கணேசமூர்த்தி போட்டியிடும் ஈரோட்டில் மோடி பேசட்டும் என்றாராம். தே.மு.தி.க. தரப்பினர் சேலம் தொகுதியில் போட்டியிடும் சுதீஷ§க்காக மோடி வரவேண்டும் என்று கேட்டார்களாம். இவர்கள் சொன்ன மூன்று ஊர்களிலும் இரண்டாவது நாள்... அதாவது ஏப்ரல் 17-ம் தேதியன்று மோடி பேச பச்சைக்கொடி காட்டிவிட்டார். மாநிலத் தலைவர் என்பதால் பொன்.ராதாகிருஷ்ணனின் தொகுதிக்கு இறுதிக் கட்டத்தில் மோடி வரலாம் என்றும் சொல்கிறார்கள்!''
''சென்னைப் பயணம்?''
''மோடியின் பயணத் திட்டத்தில் முதலில் முடிவானது 16, 17 ஆகிய இரண்டு நாட்கள்தான். இதில் சென்னை இல்லை. திடீரென்று 11-ம் தேதி இரவு 11 மணிக்குத்தான் மோடியின் சென்னை வருகை முடிவானது!''
''இவ்வளவு அவசரம் ஏன்?''
''ரஜினியைச் சந்திப்பதற்காக மட்டும் சென்னை வந்தால் நன்றாக இருக்காதே! அதனால்தான், அதோடு சேர்த்து ஒரு கூட்டமும் பேசலாம் என்று முடிவெடுத்தாராம் மோடி!''
''என்ன ஆச்சு ரஜினிக்கு?''
''மோடிக்கும் ரஜினிக்கும் இரண்டு ஆண்டுகளாக நல்ல நட்பு என்கிறார்கள். 2012-ம் ஆண்டு ஜனவரி மாதம் துக்ளக் ஆண்டு விழாவுக்காக அத்வானியும் மோடியும் சென்னை வந்திருந்தார்கள். சிங்கப்பூரில் சிகிச்சை முடித்துவிட்டு ரஜினியும் சென்னை திரும்பி இருந்த நேரம் அது. போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் ரஜினி வீட்டுக்கு நலம் விசாரிக்கப் போனார் மோடி. அப்போது அவர் குஜராத் முதல்வர் என்ற அடிப்படையில் சாதாரணமாகத்தான் இருந்தார். அடுத்த பிரதமர் என்றெல்லாம் அவரை யாரும் சொல்லவில்லை. ரஜினியைப் பார்த்துவிட்டு துக்ளக் விழா நடந்த வள்ளுவர் கோட்டத்துக்கு வந்துவிட்டார் மோடி. சில நிமிடங்களில் அரங்கத்தில் பரபரப்பு. ரஜினியும் வள்ளுவர் கோட்டத்துக்குள் நுழைந்தார். 'அத்வானி, மோடி ஆகிய இருவரது பேச்சையும் கேட்க வேண்டும் என்றுதான் வந்தேன்’ என்று சொன்னாராம் ரஜினி. அதன் பிறகு இருவரும் போனில் பேசியுள்ளனர். ரஜினியின்
பஞ்ச் டயலாக்கை வைத்து ஆங்கிலத்தில்
பஞ்ச் தந்த்ரா என்ற புத்தகம் வந்துள்ளது. இது அத்வானியின் கவனத்துக்கும் போனது. அவர் அதனைப் படித்துவிட்டு, 'சாமான்ய மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக ரஜினியின் வசனங்கள் இருக்கின்றன’ என்று அத்வானி சொன்னாராம்.''
''ஓஹோ!''
''அந்தக் கூட்டத்தில்தான், 'மத்தியில் அடுத்து அமையப்போகும் புதிய ஆட்சியை உருவாக்கும் பணியில் அ.தி.மு.க-வுக்கு நிச்சயம் பங்கு இருக்கும். மத்தியில் பி.ஜே.பி. அல்லாத ஆட்சி வருவதாக இருந்தால்... ஜெயலலிதா பிரதமர் ஆக வேண்டும். அதற்கு பி.ஜே.பி. ஆதரவு தர வேண்டும்’ என்று சோ பேசினார். அந்தக் கூட்டத்தில் அத்வானி பேசும்போது, 'பி.ஜே.பி-யும் அ.தி.மு.க-வும் ஒருங்கிணைந்தால் மத்தியில் ஆட்சி மாற்றம் நடக்கும்’ என்று சொன்னார். ஆனால், காலமாற்றத்தில் அத்வானி சொன்னது நடக்கவில்லை. நரேந்திர மோடியும் இவ்வளவு ஆதரவைப் பெறுவார் என்று ஜெயலலிதா எதிர்பார்க்கவில்லை. ரஜினியும் அந்தப் பக்கம் தனது நெருக்கத்தைக் காட்டுவார் என்றும் ஜெயலலிதா நினைக்கவில்லை. ஏப்ரல் புத்தாண்டு தினத்தன்று ஜெயா டி.வி-யில் ரஜினியின் சிறப்பு நேர்காணல். அதற்கு முந்தைய நாள் அவர் மோடியைச் சந்திக்கிறார். இதனை எப்படி ஜெயலலிதாவால் ஏற்றுக்கொள்ள முடியும்? அதனால்தான் கரூரில் பி.ஜே.பி. மீதும் பாய்ந்துவிட்டார் ஜெயலலிதா. 'காங்கிரஸ், பி.ஜே.பி-க்கு வாக்களிக்காதீர்கள். இரண்டும் தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைக்கும் கட்சிகள். பி.ஜே.பி. ஆட்சியால் எந்தப் பயனும் இல்லை என்பதால்தான் வாபஸ் பெற்றேன். தமிழகத்தில் அந்த இரண்டு கட்சிகளாலும் ஆட்சி அமைக்கவே முடியாது’ என்று பொங்கித் தீர்த்ததற்குக் காரணம் இதுதான்!''
''மற்ற பி.ஜே.பி. தலைவர்களின் புரோகிராம் பற்றியும் சொல்லும்!''
''அத்வானி ஏப்ரல் 18-ம் தேதி வருகிறார். அன்றே கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங்கும் வருகிறார். நிதின் கட்கரி ஏப்ரல் 16-ம் தேதி வருகிறாராம். வெங்கைய்யா நாயுடு 16, 17, 18 ஆகிய மூன்று நாட்கள் வருகிறாராம். முக்தார் அப்பாஸ் நக்வி ஏப்ரல் 20-ல் விசிட் அடிக்கிறார். இந்தச் சூறாவளிப் பிரசாரத்தை ஆளுங்கட்சி விரும்பவில்லை'' என்றபடி அடுத்த செய்திக்குத் தாவினார் கழுகார்.
''முதல்வரின் திருநெல்வேலி பேச்சைக் கவனித்தீரா? மின்வெட்டு நடப்பதை ஏதோ சதி என்று முதல்வர் சொல்லியிருக்கிறார். கடந்த இரண்டு வாரமாக தமிழகத்தின் பல ஊர்களில் மின்வெட்டு அதிகமாகிவிட்டது. விவசாயத்துக்காகத் தரப்படும் த்ரீ பேஸ் மின்சார விநியோக நேரமும் மாறிவிட்டது. இதனால், எங்கு பார்த்தாலும் அ.தி.மு.க. அரசு மீது மக்களுக்கு வெறுப்பு அதிகமானது. மின்வெட்டு பிரச்னையால் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்குத் தண்ணீர் செல்ல முடியவில்லை. அதனால், குடிநீர் விநியோகமும் சரிவர நடக்கவில்லை. பெண்கள் காலி குடங்களுடன் ரோட்டில் ஆங்காங்கே மறியலில் இறங்கினார்கள். கடந்த இதழில்கூட நான் சொல்லியிருந்தேனே! அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள், மந்திரிகள் சென்ற இடங்களில் மக்கள் ஆவேசமாக கேரோ செய்து கோஷம் எழுப்பினர். இந்த மாதிரி செய்திகள் முதல்வருக்கு அடுத்தடுத்து சென்றதும் அதிர்ச்சி அடைந்தார். இப்போது தமிழகத்துக்குத் தேவையான மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இருந்தும், தொழில்நுட்பம் காரணமாக இந்த உற்பத்தித் தடைபடுகிறது. அடிக்கடி மின் உற்பத்தி நிலையங்கள் பழுதாகிவிடுகிறது. ஒரே நாளில் இரண்டு மின்நிலையங்கள் செயல்படாமல் போகிறது. கன்வேயர் பெல்ட் அறுந்து​விட்டது; டிரிப் ஆகிவிட்டது; தீ விபத்து... என்றெல்லாம் தொடர்ந்து சொல்லப்பட்டது. இதற்கு ஏதோ பின்னணி இருப்பதாக சந்தேகப்படுகிறாராம் முதல்வர்!''
''அப்படி இருக்குமா?''
''அதிகாரிகள் சொல்வது அதிர்ச்சி ரகம். தென்மண்டல மின் தொகுப்பை மத்திய மின் தொகுப்புடன் இணைக்கும் புதிய மின் தொடர் இணைப்புப் பணிகள் முடிக்கப்பட்டும், அதிகாரப்​பூர்வமாகப் பயன்பாட்டுக்கு இன்னும் வழங்கப்​படவில்லை. இதனால், ஏற்கெனவே ஒப்பந்தம் போடப்பட்ட 3,300 மெகா வாட் மின்சாரத்தை தமிழகத்துக்குள் கொண்டுவர முடியவில்லை. நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, மத்திய அரசு பழிவாங்கும்விதமாக முட்டுக்கட்டைப் போடுகிறது என்று சொன்னார்களாம். முதல்வர் அடுத்து விசாரித்து... மேட்டூரில் 600 மெகா வாட் மின் உற்பத்தி செய்யும் யூனிட் என்ன ஆச்சு என்பது பற்றியாம்! முந்தைய 2001-06-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின்போது அந்தத் திட்டம் போடப்பட்டது. 2013-ம் வருடம் அக்டோபர் மாதம்தான் பயன்பாட்டை ஆரம்பித்தது. அப்போதே அதற்கு ஏழரை ஆரம்பமானது. அடிக்கடி பழுது ஆனது. கேட்டால், நிர்மாணித்தது தனியார் கம்பெனி ஒன்று; முக்கியப் பணிகளைச் செய்தவர்கள் சீன இன்ஜினீயர்கள்; பணிகள் முடிந்ததும், இறுதிகட்ட சோதனை முடித்து வாங்காமல், அவசரகோலத்தில் தமிழக மின்சார வாரியத்தினர் வாங்கிவிட்டார்களாம். இதனால்தான் அடிக்கடி பழுது ஏற்படுகிறது. இவை பற்றியெல்லாம் முதல்வருக்கு தகவல் சொல்லப்பட்டதும், கோபத்தின் உச்சத்துக்கே போனாராம். 'மேட்டூரில் என்ன நடந்தது? யாராவது வெளிநபர்கள் சதிசெய்தார்களா?' என்று உளவுத் துறையை விட்டு விசாரிக்கச் சொல்லியிருக்கிறாராம்.
தூத்துக்குடி, வட சென்னை ஆகிய இடங்களில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில் அடுத்தடுத்து பழுதாவது குறித்து தகவல்கள் வந்தன. 'அங்கு வேலை செய்கிறவர்களில் தி.முக. போன்ற எதிர்க்கட்சி சார்புள்ளவர்கள் இருக்கிறார்களா? அவர்கள் யா£ராவது சதிசெய்கிறார்களா? இந்தக் கோணங்களிலும் முதல்வர் விசாரிக்கச் சொல்லியிருக்கிறார். .''
''அடேயப்பா?''
''இந்த மாதிரியான பூர்வாங்க விசாரணைகளை ஓரளவு முடித்துக்கொண்ட பிறகுதான் தேர்தல் பிரசார மேடைகளில், 'மின்சார தட்டுப்பாடு திட்டமிட்ட சதி’ என்று ஜெயலலிதா குற்றம்சாட்டினாராம்.''
''சரிதான்?''
''ஏற்கெனவே தேர்தல் ஆணையத்துடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார் முதல்வர். இப்படி இ.பி., இ.சி. ஆகிய இரண்டும் முதல்வரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதோடு மோடியின் வருகையும் சேர்ந்து விரக்தியை அதிகப்படுத்தி வருகிறது'' என்று சொல்லிவிட்டுப் பறந்தார் கழுகார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...