வெள்ளி, 25 ஏப்ரல், 2014

ஏரல் ஆற்றுப்பாலம் இடிந்து விழும் அபாயம்

ஏரல் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் ஏற்பட்டுள்ள திடீர் ஓட்டையால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஏரல் ஆற்றுப்பாலம் இடிந்து விழும் அபாயம்
புதிய பாலம் திறக்க மக்கள் வலியுறுத்தல்
ஏரல், ஏப். 26:
ஏரல் ஆற்றுப்பாலத்தில் ஓட்டை விழுந்ததால் எந்த நேரமும் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே புதிய பாலம் அமைக்கும் பணிகளை முடித்து உடனடியாக திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஏரல் சேர்மன் கோயில் பகுதி தாமிரபரணி ஆற்றில் பாலம் உள்ளது. மிகவும் பழமையான இந்த பாலம் ஆற்றில் வெள்ளம் வந்தால் மூழ்கிவிடும். அப்போது போக்குவரத்து மாற்றி விடப்படும். இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டதால் உயரமான புதிய பாலம் கட்டவேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து 2 ஆண்டுக்கு முன் ரூ.16.50 கோடியில் புதிய பாலம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு அதன் பணி நடைபெற்று வந்தது. பாலம் வேலை முழுமையாக முடிந்த போதிலும் இரு பகுதியிலும் கரைக்கு செல்லும் வழி மட்டும்தான் முடிவுபெறாமல் உள்ளது. வனத் துறையினர் அனுமதி கிடைக்காததால் இந்த தாமதம் என்று தெரிகிறது.
இந்நிலையில் ஏற்கனவே உள்ள பழைய பாலம் 2 ஆண்டுகளாகவே பழுதடைந்து காணப்பட்டது. ஒரு இடத்தில் பாலம் உடைந்து விழுந்ததால் குழாய் பதித்து கான்கிரீட் போட்டு சீரமைத்து இருந்தனர்.
இதற்கிடையில் அந்த இடத்தில் நேற்று திடீரென்று பெரிய ஓட்டை விழுந்தது. இதனால் அந்த பகுதியில் உள்ளவர்கள் கயிற்றால்கட்டியும் குழி விழுந்த இடத்தில் பெரிய பாறாங்கல்லை வைத்தும் தடுத்து உள்ளனர். ஓட்டை விழுந்ததால் ஒரு வழியாகத்தான் போக்குவரத்து நடக்கிறது. மேலும் அங்கு விரிசலும் காணப்படுவதால் எந்த நேரத்திலும் பாலம் முழுவதும் இடிந்து விழும் ஆபத்து உள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கவனித்து புதிய பாலம் அமைக்கும் பணிகளை விரைந்து முடித்து திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...