''மத்திய மாநில உளவுத் துறை எடுத்துவைத்துள்ள கணிப்புகளும் உமது கணிப்புகளும் ஒத்துப்போகின்றன. மத்திய புலனாய்வுத் துறை இந்த வாரத்தில் ஒரு சர்வே எடுத்துள்ளார்களாம். அதன்படி, அ.தி.மு.க-வுக்கு 18 இடங்களும், தி.மு.க-வுக்கு 13 இடங்களும் பி.ஜே.பி. கூட்டணிக்கு 9 இடங்களும் கிடைக்கும் என்று சொல்லப்பட்டு உள்ளதாம். மாநில உளவுத் துறை எடுத்த கணிப்பின்படி அ.தி.மு.க-வுக்கு 22 தொகுதிகளும், தி.மு.க-வுக்கு 10 தொகுதிகளும், பி.ஜே.பி. அணிக்கு 8 தொகுதிகளும் கிடைக்கும் என்று சொல்லப்பட்டு உள்ளதாம். இவர்கள் இருவர் சொல்வதையும் வைத்துப் பார்த்தால் தோராயமாக அ.தி.மு.க. அணிக்கு 18 முதல் 22 தொகுதிகளும், தி.மு.க. அணிக்கு 10 முதல் 13 தொகுதிகளும் பி.ஜே.பி. கூட்டணிக்கு 8 முதல் 10 தொகுதிகளும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்பதே இப்போதைய நிலவரம்!''
''அ.தி.மு.க. எதிர்ப்பார்ப்புக்கு இவை குறைவாக இருக்கிறதே?''
''32 தொகுதிகள் நிச்சயம் ஜெயிப்போம் என்று ஜெயலலிதா சொல்லிவருகிறாராம். அதற்காக அவர் சொல்லும் சிம்பிளான லாஜிக் என்ன தெரியுமா? 'எல்லோருமே அ.தி.மு.க-வை விமர்சித்துத்தான் வாக்கு கேட்கிறார்கள். அ.தி.மு.க. எதிர்ப்பு வாக்குகள் நான்காகப் பிரியும்போது அ.தி.மு.க. எளிமையாக ஜெயிக்கும்’ என்று சொல்லிவருகிறாராம். அ.தி.மு.க-வுக்கு 30 சதவிகிதம் வாக்கு வங்கி அப்படியே இருக்கிறது என்றும் அவர் நம்புகிறார். இந்தளவுக்கு வாக்கு வங்கி தி.மு.க-வுக்கு இல்லை என்பதும் பி.ஜே.பி. கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் சேர்ந்தாலும் கிடைக்காது என்பதும் அவரது கணிப்பு. இரண்டு வாரங்களுக்கு முன்பு வரை இப்படித்தான் இருந்தது அந்த நிலவரம். ஆனால், மோடி, சோனியா, ராஜ்நாத் சிங் வந்து சென்றதும், அத்வானி வருகையும் மன்மோகன், ராகுல் ஆகியோர் வர இருப்பதும், 'இது நாடாளுமன்றத் தேர்தல். அதற்கு ஏற்ப வாக்குகளை அளிக்க வேண்டும்’ என்ற சிந்தனையை படித்த வாக்காளர்கள், நகர்ப்புற மக்கள் மத்தியில் விதைத்துவிட்டது. 'பிரதமராக யார் வர வேண்டும் என்ற தோற்றத்தை அது உருவாக்கிவிட்டது. இது அ.தி.மு.க-வுக்கு ஏற்பட்ட முதல் பலவீனம். இப்படி நினைக்கும் வாக்காளர்கள், 'அ.தி.மு.க-வுக்கு வாக்களித்தால், அது பி.ஜே.பி. ஆட்சி அமைக்கத்தான் உதவும்’ என்று முதலில் நினைத்தார்கள். ஆனால், 'காங்கிரஸ், பி.ஜே.பி. ஆட்சி அமைக்க ஆதரவு தர மாட்டோம்’ என்று ஜெயலலிதா சொன்னது அடுத்த சறுக்கலாக மாறியது. 'அப்படியானால் ஜெயலலிதா யாரை ஆதரிப்பார்?’ என்று கேட்க ஆரம்பித்தார்கள். 'மோடியை அரசியல்ரீதியாக முதலில் விமர்சித்திருக்க வேண்டும். கடைசியில் விமர்சிக்க வந்தது அ.தி.மு.க-வுக்குத்தான் நெருக்கடியை ஏற்படுத்தியது’ என்கிறார்கள். படித்தவர்கள் மத்தியில் அ.தி.மு.க. ஆதரவு நிலைப்பாட்டை இது சரித்துவிட்டதாகவும் சொல்கிறார்கள். அதனால்தான், சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளில் பிரசாரம் செய்த ஜெயலலிதா, அந்த வாசகங்களைச் சொல்லவில்லை. 'நாங்கள் காங்கிரஸ், பி.ஜே.பி. ஆட்சி அமைக்க ஆதரவைத் தர மாட்டோம்’ என்பதையும் சொல்லவில்லை. மத்திய சென்னை சிறுபான்மையினர் அதிகம் இருக்கும் தொகுதி. அங்கும் அவர் இதனை உஷாராகச் சொல்லாமல் விட்டார்!''
''ஏன் இந்தக் குழப்பம்?''
''யாரை ஆதரிப்போம், யாரை ஆதரிக்க மாட்டோம் என்பதை இப்போது எதற்காகச் சொல்ல வேண்டும்? சிறுபான்மையினர் வாக்குகள் கணிசமாக தி.மு.க-வுக்கும் காங்கிரஸுக்கும் போகின்றன. அ.தி.மு.க-வையும் இன்னொரு பி.ஜே.பி-யாகத்தான் சிறுபான்மையினர் பார்க்கிறார்கள். அதனை மாற்ற நினைத்துத்தான் பி.ஜே.பி. மோடி மீது விமர்சனங்களை தொடுத்தார். அதுவே அவருக்கு நெகடிவ் ஆகிவருகிறது என்றும் சொல்கிறார்கள்!''
''சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் வலைதளத்தில், 'கிறிஸ்துவ பாதிரியார்களும் முஸ்லிம் மதத் தலைவர்களும் சங்கரராமன் கொலை வழக்கில், ஜெயலலிதா மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும், இல்லையென்றால் தங்களுடைய ஓட்டுக்களை இழக்க வேண்டிவரும் என்றும் மிரட்டுகின்றனர். இதற்கு என்ன செய்யப்போகிறார் ஜெ.ஜெ.?’ என்று பதிவிட்டுள்ளாராமே?''
''திடீரென்று இந்த மேட்டர் கிளம்பி உள்ளது. சங்கரராமன் கொலை வழக்கில், புதுவை சிறப்பு நீதிமன்றம் காஞ்சி ஜெயேந்திரர் உள்ளிட்ட அனைவரையும் நிரபராதி என்று விடுதலை செய்தது. வழக்கமாக இந்த மாதிரி தீர்ப்பு வந்தால், மாநில அரசு அப்பீல் செய்யும். ஆனால், தமிழக அரசு அமைதியாக இருந்தது. ஆனால், மேல்முறையீடு செய்யப்போகிறார்கள் என்று இரண்டு, மூன்று நாட்களாக செய்தி பரவிக்கிடக்கிறது. தீர்ப்பு வந்த 60 நாட்களுக்குள் அப்பீல் செய்ய வேண்டும் என்பது விதி. நவம்பர் 26-ம் தேதி தீர்ப்பு வந்தது. ஜனவரி 26-க்குள் அப்பீல் செய்திருக்க வேண்டும். ஆனால், திடீரென இப்போது இந்தக் காரியங்களில் இறங்குவதற்கு அரசியல் காரணங்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். அரசு அதிகாரி ஒருவர், இதனை வருத்தப்பட்டு பேசிக்கொண்டு இருந்தாராம். 'ஜெயலலிதா உள்துறையை தன்னுடைய கைகளில் வைத்திருந்தாலும்கூட, நிர்வாகம் தொடர்பான உத்தரவுகளைப் பிறப்பிக்க மட்டுமே அவருக்கு அதிகாரம் உள்ளது. சட்ட நடவடிக்கைகள் தொடர்பாக எந்த உத்தரவையும் அவர் பிறப்பிக்க முடியாது. அதில் உத்தரவுகளைப் பிறப்பிக்கவும், மேல்முறையீடு செய்யவும் குறிப்பிட்ட வழக்கின் விசாரணை அதிகாரி யாரோ அவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. ஆனால், காஞ்சி மடத்துக்கு எதிராக இப்போது அவர் எடுக்கப்போகும் இந்த நடவடிக்கை முற்றிலும் விதிமுறைகளுக்கு மாறானது. சட்டத்துக்குப் புறம்பானது’ என்றும் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சு உள்ளது!''
''பி.ஜே.பி-யுடன் மோதுவதற்கும் இதற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா?''
''இந்த விவகாரத்தைத் தெரிந்துகொண்ட சுப்பிரமணியன் சுவாமி, தன்னுடைய ட்விட்டர் தளத்தில் இதுபற்றி பதிவிட்டார். அதையடுத்து ஜெயலலிதாவுக்கு எதிராகவும், மடத்துக்கு ஆதரவாகவும் ஏராளமான பின்னூட்டங்கள் வந்தன. தன்னுடைய அந்தப் பதிவில் சுவாமி, '2016-ம் ஆண்டுத் தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு, சிறுபான்மையினரின் ஓட்டுக்களைப் பெறுவதற்கு இதுபோன்ற நடவடிக்கைகளில் ஜெயலலிதா ஈடுபட்டு வருகிறார்’ என்றும் பதிவிட்டுள்ளார். 'பி.ஜே.பி. தன்னை மதிக்காமல் விலகி நின்று விமர்சிப்பதற்குக் காரணம் ஜெயேந்திரர்தான் என்று ஜெயலலிதா நினைக்கிறார்’ என்றும் சொல்கிறார்கள்!''
''என்ன நடக்கிறது என்று பார்ப்போம்!''
''காவல் துறையினர் தபால் ஓட்டுக்களை தபாலில் அனுப்பாமல் வாக்குப்பெட்டியில் போடுவதற்காக
சிறப்பு மையங்களை இந்த முறை தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் இரண்டு நாளுக்கு மட்டும் தேர்தல் கமிஷன் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்டிருந்தது. இது ஒரு புதிய முயற்சி என்றாலும், 'இதில் ஏகப்பட்ட கோல்மால்கள் நடக்கிறது மையம் அமைக்கப்பட்ட தகவலை ஆளுங்கட்சியைத் தவிர மற்றவர்களுக்கு அதிகாரிகள் தெரிவிக்கவில்லை’ என்ற புகார் கிளம்பியுள்ளது.''
''இந்த வாக்குகளும் கணிசமானவைதானே?''
''மதுரை ஆட்சியர் அலுவலகத்துக்குள் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மையத்தில் வாக்களிக்கும் இடத்தில் ஆளுங்கட்சியினர் நின்றுகொண்டு இன்ஸ்ட்ரக்ஷன் கொடுப்பதாக தகவல் வரவும், மற்ற கட்சியினர் அங்கு வந்துவிட்டனர். 'இப்படியொரு மையம் அமைக்கப்பட்டதே எங்களுக்குத் தெரியாது. அ.தி.மு.க-வைச் சேர்ந்த அரசு வழக்கறிஞர்கள் சிலர், வாக்களிப்போருக்கு உத்தரவு பிறப்பித்துக்கொண்டிருந்தனர். சில காவல் துறை உயர் அதிகாரிகளே ஆளுங்கட்சிக்கு கேன்வாஸ் செய்கிறார்கள். இதையெல்லாம் தேர்தல் அலுவலர்கள் கண்டுகொள்வது இல்லை. இதுபற்றி கலெக்டரிடம் புகார் கொடுத்துள்ளோம். நடவடிக்கை இல்லை என்றால், வழக்கு தொடருவோம்’ என்கிறார்கள் தி.மு.க. வக்கீல்கள். தே.மு.தி.க-வினரும் காங்கிரஸாரும் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.''
''கடைசி இரண்டு நாட்கள்தானே ஏராளமான விஷயங்கள் நடக்கும்?''
''ஆமாம்!'' என்று சொல்லிவிட்டு எழுந்த கழுகார், ''ஆலோசகர் அந்தஸ்துடன் கார்டனுக்குள் நுழைந்த ஓர் அதிகாரியை, அதற்குள் கல்தா கொடுத்துவிட்டார்களாமே?'' என்று சொல்லிவிட்டுப் பறந்தார்!
படங்கள்: சு.குமரேசன், ஆ.முத்துக்குமார்
சிக்கலில் 'கோச்சடையான்'
'கோச்சடையான்’ மே 9-ல் ரிலீஸ் ஆவதில் சிக்கல். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் முரளி மனோகருக்கு எதிராக திரைப்பட விநியோகஸ்தர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளதுதான் பிரச்னைக்குக் காரணம்.
ஈராஸ் நிறுவனத்தின் சார்பில் ஏராளமான பொருட்செலவில் 'கோச்சடையான்’ படத்தை பிரமாண்டமாகத் தயாரித்து இருக்கிறார் முரளி மனோகர். இதற்கு முன்பு ஈராஸ் வாயிலாக சூர்யா நடித்த 'மாற்றான்’ படத்தை வாங்கி ரிலீஸ் செய்தார். அதில் விநியோகஸ்தர்களுக்கு 12 கோடி ரூபாய் நஷ்டம். 'கோச்சடையான்’ படத்தைத் தருவதாகச் சொல்லி முன்கூட்டியே விநியோகஸ்தர்களிடம் 26 கோடி ரூபாய் வாங்கியிருக்கிறார். மொத்த பணத்தையும் செட்டில் செய்த பிறகுதான் 'கோச்சடையான்’ படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று கிடுக்கிபிடிப் போட்டு இருக்கிறார்களாம். இதுதொடர்பாக பஞ்சாயத்து பேசிய பனியன் நகரைச் சேர்ந்த மணியான மனிதரிடம், 'என்னை 'கோச்சடையான்’ படத்துல நடிக்க கூப்பிட்டாங்க... நடிச்சேன். ஃபைனான்ஸ், ரிலீஸ் பிரச்னை பத்தி எனக்குத் தெரியாது...’ என்று கட் அண்ட் ரைட்டாக பதில் சொல்லிவிட்டாராம் ரஜினி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக