செவ்வாய், 22 ஏப்ரல், 2014

தலைவர்களின் இறுதி கட்ட பிரசாரம்

தமிழகத்தைப் பொறுத்தவரை நாடாளுமன்றத் தேர்தலுக்கு இறுதிக் கட்டம் நெருங்குகிறது. வலம்வரும் தலைவர்கள் சொல்வது என்ன?

''மக்களை பிரிக்க நினைக்கிறார் மோடி!''
காங்கிரஸ் கட்சியின் இளம் சிங்கமாக சோலோவாக மாநிலம் மாநிலமாகச் சென்று தீவிர பிர​சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் காங்​கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி. இது அவருக்கு வாழ்வா சாவா பிரச்னை. பி.ஜே.பி-யை அக்குவேறு ஆணிவேறாகக் கிழித்து தோரணம் கட்டுகிறார். பேசும்போது நடு நடுவே காமெடி, கோபம் என கலந்துகட்டி அடிக்கிறார் மனிதர்.
கடந்த வாரம் அசாமில் பேசும்​போது ''ஆங்கிலேயர் ஆட்சியைப் போன்று பி.ஜே.பி-யும், மோடியும் பிரித்தாள நினைக்கிறார்கள். இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர்கள், சீக்கி​யர்கள்... என பல மதத்தினர் இந்தி​​யாவில் வாழ்கின்றனர். இவர்​களின் ஒற்றுமைதான் இந்தி​யாவின் வலிமையே. ஆனால், இவர்களுக்குள் பிரிவினையை உண்டாக்குகிறார்கள். பெண்கள் முன்னேற்றம் குறித்து பேசும் மோடி, சுவரொட்டிகளில்கூட பெண்களின் படத்தை இடம்பெறச் செய்வது இல்லை. பெண்களைப் புறக்கணிக்கிறார்கள். தன் மனைவியையே இவ்வளவு நாட்களாக மறைத்து இருக்கிறார் என்றால், இவர் எப்பேர்பட்ட பொய் ஆசாமி என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். மங்களூரில் அந்தக் கட்சியினர் பெண்களைத் தாக்குகிறார்கள். குஜராத்தில் ஒரு பெண்ணின் தொலைபேசி உரையாடல் ஒட்டுக் கேட்கப்படுகிறது; அவரது நடவடிக்கைகளைக் கண்காணிக்க அதிகாரிகள் பின்தொடர்கின்றனர். மோடி நாட்டுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல். உங்கள் கையில், ஒரு விரலில்தான் மந்திரம் இருக்கிறது. மோடியைத் தேர்ந்தெடுத்து, எதிர்காலத்தில் வருத்தப்படாதீர்கள்'' என்று போட்டுத்தாக்குகிறார் ராகுல்.
- நா.சிபிச்சக்கரவர்த்தி
''இந்தக் கூட்டணி தொடரும்!''
பி.ஜே.பி. தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங்கின் தமிழகச் சுற்றுப்​பயணத்தில் அவரது பேச்சு தெளிவாக இருக்கிறது.
''தமிழகத்தில் பி.ஜே.பி. தலைமையிலான கூட்டணி, வரும் சட்ட​மன்றத் தேர்தலிலும் தொடரும். இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் ஆட்சியும் சரி... தமிழகத்தை ஆண்ட தி.மு.க., அ.தி.மு.க-வும் சரி... தலைவிரித்தாடும் மீனவப் பிரச்னைக்கு என்ன செய்தார்கள்? ஒன்றுமே செய்யவில்லையே! மோடி தலைமையில் மத்தியில் ஆட்சி அமைந்தால், மாநில அரசுடன் இணைந்து தேசிய மீனவர் நலவாரியம் அமைத்து, மீனவர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்போம். இலங்கை பிரச்னையிலும் மத்திய, மாநில அரசுகள் உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இலங்கையின் வடக்குப் பகுதியில் அதிகாரப் பகிர்வை கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் அதையும் செய்துகொடுப¢போம்.
2003-ம் ஆண்டு சிக்கிம் எங்களுடைய பகுதி என¢று சொன்னது சீனா. அப்போது ஆட்சி செய்த எங்கள் வாஜ்பாய், 2004-ம் ஆண்டு சீனா சென்று, சீன பரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தி, சிக்கிம் இந்தியாவின் பகுதிதான் என்று சொல்ல வைத்தவர். அதுபோன்று காங்கிரஸ் தலைவர்களால் செய்ய முடியுமா?
நம்முடைய ராணுவ வீரர்கள் பகைவர்களால் சுட்டுக்கொல்லப்​பட்டது மட்டுமல்லாமல், அவர்களின் தலையை வெட்டி எடுத்து அவர்கள் நாட்டுக்கே கொண்டுசென்றுவிட்டார்கள். இதைப் பார்த்துவிட்டு பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, ராகுல் காந்தி மௌனமாக இருக்கிறார்கள். ஏன்? பயமா? தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மோடி தலைமையில் அமைந்தால், அதற்கு நாங்கள் ஒரு முடிவு கட்டாமல் விடமாட்டோம். இது நாடாளுமன்றத் தேர்தல். அதனை மனதில் வைத்து வாக்களியுங்கள்!'' என¢று கர்ஜித்தார் ராஜ்நாத் சிங்.
- ஏ.ராம்
''காய்ச்சல் இருந்தாலும் வந்து சந்திப்பேன்!''
ஹெலியில் பிரசாரத்தை முடித்து, இப்போது சென்னையில் வேனில் சுற்றி பிரசாரம் செய்கிறார் ஜெயலலிதா.
திருவல்லிக்கேணியில் மத்திய சென்னை வேட்பாளர் எஸ்.ஆர்.விஜயகுமாரை ஆதரித்துப் பிரசாரம் செய்தபோது, ''நானும் சோனியாவும் மோதிக்கொள்வதால்தான் தமிழக மீனவர் பிரச்னையை தீர்க்க முடியவில்லை என கன்னியாகுமரியில் மோடி பேசியிருக்கிறார். அவரே ராமநாதபுரத்தில் பேசும்போது, மத்தியில் வலுவான அரசு இல்லாததால்தான் மீனவர்கள் தாக்கப்​படுவதாகச் சொன்னார். குஜராத் மீனவர்களை பாகிஸ்தான் அரசு சிறைப்பிடிப்பதற்குக் காரணம், நரேந்திர மோடியும் சோனியாவும் மோதிக்கொள்வதால்தான் என்று எடுத்துக்கொள்ளலாமா? தமிழக மீனவர்கள் மீது உண்மையான அக்கறை கொண்டவர்கள் நாங்கள்தான். இன்று எனக்குக் கடுமை​யான காய்ச்சல் இருக்கிறது. மாத்திரையைப் போட்டுக்கொண்டு வந்துவிட்டேன். அதுதான் உங்கள் அன்புச் சகோதரியின் நடைமுறை'' என்று சென்டிமென்ட் டச் செய்தார்.
- நா.சிபிச்சக்கரவர்த்தி
''மக்கள் மறித்துவிடுவார்கள் என்ற பயம் ஜெயலலிதாவுக்கு!''
திருச்சியில் தொடங்கினால் ஜெயம் எனும் நம்பிக்கையில் எப்போதும் திருச்சியில் இருந்து பிரசாரத்தைத் தொடங்கும் தி.மு.க. பொருளாளர் முக.ஸ்டாலின், இந்த முறை திருச்சியில் பிரசாரத்தை முடிக்கிறார்.  
''தேர்தலுக்காக வந்து செல்பவர்கள் நாங்கள் இல்லை. ஆட்சியில் இருந்தாலும் இல்லை என்றாலும், எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் உங்களுடன் இருக்கிறவங்க நாங்கதான்.  அந்த உரிமையோடு ஓட்டுக் கேட்டு வந்திருக்கிறோம். இன்று நாட்டில் எத்தனையோ தலைவர்ங்க இருக்காங்க... சில தலைவர்ங்க தேர்தல் நேரத்தில் மட்டும் ஓட்டுக்கேட்டு வருவாங்க என்பது உங்களுக்குத் தெரியும்.
இப்போ நாங்க ஹெலிகாப்டரில் வரல. ஹெலிகாப்டர் என்றால், ஜெயலலிதா; ஜெயலலிதா என்றால், ஹெலிகாப்டர்! அப்படி ஜெயலலிதா ஹெலிகாப்டரில் கிளம்பி... டகடக டக டகடக டகன்னு (ஹெலிகாப்டர் செல்வதுபோல் சத்தமிடுகிறார்) பறந்து வர்றாங்க. ஜெயலலிதா ஹெலிகாப்டரில் கிளம்பும்போது போலீஸார், 'கிளம்பிவிட்டார் ஓவர், பறக்கிறார் ஓவர்’ எனச் சொல்கிறார்கள். அதுபோல் தமிழ்நாட்டு மக்கள்,  ஜெயலலிதா ஆட்சிக்கு ஓவர் என்று சொல்லும் நேரம் வந்துவிட்டது.
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து மூணு வருஷமாச்சு. இந்த மூணு வருஷத்துல மக்களை எங்கயாவது நேரில் சந்தித்ததுண்டா? அவருக்கு மக்களைப் பற்றியோ நாட்டைப் பற்றியோ கவலை இல்லை. அ.தி.மு.க. வேட்பாளர்கள் ஓட்டுக் கேட்க போகும்போது மக்கள் மறிக்கிறார்கள் ஊருக்குள் விட மறுக்கிறார்கள். அப்படி தன்னையும் மக்கள் மறித்துவிடுவார்கள் என்கிற பயம்தான் ஜெயலலிதாவுக்கு'' என்று போட்டுத்தாக்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...