வியாழன், 17 ஏப்ரல், 2014

பொது சிவில் சட்டம் இந்துக்களுக்கே எதிரானது! பி.ஜே.பி-யின் தேர்தல் அறிக்கை.. அலசும் அரசியல் தலைவர்கள்!

பொது சிவில் சட்டம் இந்துக்களுக்கே எதிரானது!
பி.ஜே.பி-யின் தேர்தல் அறிக்கை.. அலசும் அரசியல் தலைவர்கள்!
லேட்டாக வந்த பி.ஜே.பி-யின் தேர்தல் அறிக்கையில் லேட்டஸ்டாக எதுவுமே இல்லை. அயோத்தியில் ராமர் கோயில், பொது சிவில் சட்டம், காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரம் ரத்து... என்ற பழைய பழரசத்தையே புதிய கோப்பையில் மீண்டும் ஒருமுறை ஊற்றிக்கொடுத்துள்ளது.

இதுபற்றி அரசியல் தலைவர்கள் என்ன நினைக்கிறார்கள்?
ராமகோபாலன், இந்து முன்னணி தலைவர்: ''எல்லா மக்களும் சட்டத்தின் முன் சமம் என்றால், பொது சிவில் சட்டம் அவசியம் தேவை. இதன்மூலம் முஸ்லிம் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு கிடைக்கும். பலதார மணம், குழந்தைத் திருமணம் தடுக்கப்படும். இந்து சமுதாயத்துக்குள் இருக்கும் பழக்கவழக்கங்கள் சிறிது பாதிக்கப்படலாம். ஆனால், ஒரு நல்ல லட்சியத்தை எட்டும்போது சில பாதிப்புகள் வரத்தான் செய்யும். அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு ராமர் கோயில் கட்டப்பட வேண்டும். ஏனென்றால், அது கோடிக்கணக்கான மக்களின் பல வருட கனவு. பல ஆண்டுகள் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து இருந்துவிட்டது. இனிமேல் அதை ரத்து செய்யலாம். சிறப்பு அந்தஸ்து கொடுத்தபோதே ரத்து செய்யவதற்கான வழிகளும் அரசியல் சாசனத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது. அதை நிறைவேற்ற வேண்டிய காலம் வந்துவிட்டது.''
ஜெய்னுல் ஆபிதீன், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்: ''பி.ஜே.பி-யுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகளே இதை ஏற்க மாட்டார்கள். அதனால்தான், கூட்டணியை விட்டு வெளியேற முடியாத நிலைக்கு அவர்களைக் கொண்டுவந்துவிட்டு, அதன் பிறகு தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உள்ளனர். பொது சிவில் சட்டம் என்பது ஏதோ முஸ்லிம்கள் பிரச்னை என்பதுபோல பார்க்கிறார்கள். முதலில், அது இந்துக்களுக்குத்தான் விரோதமானது. இந்து சமூகத்தில் ஒவ்வொரு சாதிக்கும் ஒரு பழக்கம் உள்ளது. சடங்குகள் உள்ளன. அப்படி பிளவுபட்டுள்ள இந்து சமூகத்துக்கே ஒரு பொது சிவில் சட்டம் கொண்டுவர முடியாது. பிறகு எப்படி முஸ்லிம்களுக்கு கொண்டுவர முடியும். இது ஏமாற்று வேலை. மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, ஒவ்வொரு மாநிலத்துக்கும் சட்டம் இயற்ற அதிகாரம் கொடுக்கப்பட்டது. இப்போது பொது சிவில் சட்டம் கொண்டுவருவது என்றால், மாநிலங்களே இல்லாமல் செய்தால்தான் வரும்.  
முஸ்லிம்கள் அவர்கள் சட்டப்படி திருமணம் செய்துகொள்ளலாம் என்று அரசியல் சாசனத்தில் இருக்கிறது. அதை எதிர்க்கும் இவர்கள், நாங்கள் பலதார திருமணம் செய்கிறோம் என்று குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால், உண்மை என்ன? உங்களுக்குத் தெரிந்த முஸ்லிம் தலைவர்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் யாரும் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால், இந்து பிரபலங்கள் இரண்டு திருமணங்கள் செய்திருக்கின்றனர். இந்து திருமணச் சட்டத்தில் இரண்டு திருமணம் தவறு என்று இருக்கும்போது, அந்தச் சட்டம் இவர்களை ஒன்றும் செய்யவில்லையே? அதுபோல் பொது சிவில் சட்டம் கொண்டுவந்தால், அது எங்களையும் ஒன்றும் செய்யாது.
ராமர் கோயில் விஷயத்தைப் பொறுத்தவரை, அரசியல் சாசனப்படி கட்டுவோம் என்கிறார்கள். இது, அரசியல் சாசனப்படி விதிகளை மீறுவோம்  என்பதைப்போல உள்ளது. காஷ்மீர் பிரச்னையைப் பொறுத்தவரை நாம் அவர்களுக்கு வாக்குறுதி கொடுத்து, காஷ்மீரை நம்மோடு சேர்த்தோம். அதையெல்லாம் இப்போது நாம் மீற முடியாது.''
தோழர் தியாகு: ''பி.ஜே.பி-யின் தேர்தல் அறிக்கை, அந்தக் கட்சி இன்னும் திருந்தவில்லை என்பதைக் காட்டுகிறது. இந்துத்துவா நிலைப்பாட்டில் அது உறுதியாக இருக்கிறது என்பதை தெளிவுபடுத்தி உள்ளது. இடையில் அவர்கள் போட்ட நடுநிலை வேஷத்தை இப்போது முற்றிலுமாக கலைத்து உள்ளனர். அதுபோல், பொருளியல் கொள்கையில் காங்கிரஸுக்கு மாற்றாக எதையும் அவர்கள் சொல்லவில்லை. இந்தியாவில் நடைபெற்ற கொடிய செயல்களில் மிகப்பயங்கரமான கொடிய செயல் பாபர் மசூதி இடிப்பு. பழைய நினைவுச் சின்னத்தை இடித்துவிட்டு, புதிதாக ஆயிரக்கணக்கான கல்லறைகள் கட்டுவதற்கு வழிவகுத்த நிகழ்ச்சி அது. மீண்டும் அதே பல்லவியைப் பாடி உள்ளனர். ஈழ விவகாரத்தில் பி.ஜே.பி-யின் தமிழக அமைப்புகள் பல நாடகங்கள் ஆடின. ஈழ ஆதரவு கட்சிகளும் அவர்களுடன் போய் கூட்டணி எல்லாம் வைத்தனர். ஆனால், பி.ஜே.பி-யின் தேர்தல் அறிக்கையில் ஈழம் பற்றியும், தமிழகத்தின் பிரச்னைகள் பற்றியும் ஒரு வரிகூட இல்லை. மொத்தத்தில் அவர்களின் நிலைப்பாடு என்பது மதச்சார்பற்ற தன்மைக்கு, சிறுபான்மை இன மக்களுக்கு, உழைக்கும் மக்களுக்கு, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு விரோதமானது.''
கொளத்தூர் மணி: ''காஷ்மீர் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் மோடி பேசுகிறபோது, மக்கள் கருத்தறிந்த பிறகுதான் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து பற்றி முடிவெடுப்போம் என்றார். ஆனால், இப்போது அதை அப்படியே மறந்துவிட்டு, தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளனர். பொது சிவில் சட்டம் என்பது எல்லா மதத்தினருக்கும் பொதுவான சட்டம் என்று அர்த்தம். அதைக் கொண்டுவருவதாகச் சொல்லும் பி.ஜே.பி-யினர், முதலில் எல்லா இந்துக்களுக்குமே ஒரு பொதுவான சட்டத்தைக் கொண்டுவந்துவிட முடியுமா? எல்லா சாதிக்காரர்களும் அர்ச்சகர் ஆவதை பி.ஜே.பி. ஏற்குமா? பிறகு எப்படி இந்தியாவுக்கே பொது சிவில் சட்டம் கொண்டுவருவார்கள். இது எல்லாம் இந்துக்களை ஏமாற்றும் செயல். ராமர் கோயில் என்பது அவர்கள் எல்லா காலமும் சொல்லிக்கொண்டிருப்பதுதான். அது தேசியத் திட்டமெல்லாம் கிடையாது. மீண்டும் இந்து மேலாதிக்கத்தைக்  கொண்டுவருவதற்கான முயற்சிதான் இது.''
விடுதலை ராஜேந்திரன்: ''இந்துத்துவா என்ற கொள்கையில் உறுதியாக இருக்கிறோம் என்பதை நாட்டு மக்களுக்கு இந்தத் தேர்தல் அறிக்கையின் மூலம் பி.ஜே.பி. தெளிவுபடுத்தி உள்ளது. என்னைப் பொறுத்தவரை, அவர்கள் இப்படி வெளிப்படையாகச் சொன்னதை நேர்மையான விஷயமாகத்தான் பார்க்கிறேன். ரகசியமான ஒரு தீர்மானத்தை, உள்ளுக்குள் வைத்துக்கொண்டு செயல்படுவதைவிட... தாங்கள் யார், தங்களுடைய அடையாளம் என்ன என்பதை வெளிப்படையாக அவர்கள் சொன்னது நல்லது. அதே நேரத்தில் இவர்கள் சொல்லியுள்ள விஷயங்களைச் செய்தால், அது இந்தியாவுக்கு மிகப்பெரிய தீமையாக முடியும். காஷ்மீர் மீது கை வைத்தால் அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட முஸ்லிம் நாடுகள் பிரச் னைகளை ஏற்படுத்தும். சிறுபான்மையினர் உரிமைகள் பறிக் கப்பட்டால், உலகில் வல்லரசுகளாக உள்ள கிறிஸ்தவ நாடுகள் இந்தியாவுக்குப் பிரச்னை ஏற்படுத்தும். இதனால், நாட்டில் அமைதி இல்லாத சூழ்நிலை உருவாகும். அதுபோல் ராமர் கோயிலை அரசியல் சாசனத்துக்கு உட்பட்டுக் கட்டுவோம் என்று சொல்கின்றனர். அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு எப்படி கட்ட முடியும்? விவகாரம் உச்ச நீதிமன்றத்தில்  உள்ளது. இதை எல்லாம் செய்ய முடிகிறதோ, இல்லையோ... ஆனால், இந்தப் பிரச்னைகளில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று நாட்டு மக்களுக்குச் சொல்கிறார்கள். இது மக்கள் ஒற்றுமையைக் குலைக்கும் செய்தி. மக்களுக்கு எதிர்காலத்தில் மிகப்பெரிய ஆபத்து இருக்கிறது என்பதற்கான செய்தி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...