சனி, 17 பிப்ரவரி, 2018

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்தாண்டு 1217 சாலை விபத்தில் 354 பேர் பலி



தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்தாண்டு நிகழ்ந்த 1217 சாலை விபத்துகளில் 354 பேர் பலியாகியுள்ளனர்.தூத்துக்குடி மாவட்டத்தில் நாளுக்கு நாள் இரு, நான்கு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக தூத்துக்குடி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நாளொன்றுக்கு சுமார் 71 ஆயிரம் வாகனங்களும், டூவீலர்களும் சென்று வருகின்றன என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே மாவட்டத்தில் உயிர்ப்பலி ஏற்படும் விபத்துகளும் அதிகரித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் நடந்துள்ள விபத்துகள் மூலம் பலியானவர்களின் விபரம்:தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையில் மொத்தம் 1217 விபத்துகள் நடந்துள்ளன. இவற்றில் சிறிய மற்றும் உயிர்பலி கொண்ட விபத்துகள் அனைத்தும் அடங்கும். இந்த விபத்துகளின் மூலம் 354 பேர் பலியாகியுள்ளனர். கடந்த ஆண்டு நடந்த விபத்துகளின் மூலம் 1380 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாகவே விபத்துகளும், அவற்றினால் ஏற்பட்ட உயிர்பலிகளும், காயமடைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வந்த நிலையில் கடந்த 2017ல் விபத்துகள் எண்ணிக்கையும், அதில் பலியானவர்கள் எண்ணிக்கையும் சற்று குறைந்துள்ளது.
வட்டார போக்குவரத்து துறை, காவல்துறை, போக்குவரத்து காவல்துறையினர் ஆண்டு முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் விபத்துகள் எண்ணிக்கை சிறிதளவே குறைந்துள்ளது.
உயிர்பலி ஏற்பட்ட விபத்துகளில் 110க்கும் மேற்பட்ட விபத்துகளுக்கு காரணமான டிரைவர்கள் குடிபோதையில் இருந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. உயிர்பலி விபத்துகள் பெரும்பாலானவை நெடுஞ்சாலையில், அதிகாலையில் 2 மணியில் இருந்து 4.30 மணிக்குள்தான் நடந்துள்ளன.

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் சிலர் கூறுகையில்: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2016ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2017ல் விபத்துகள் குறைவுதான். நெடுஞ்சாலைகள் பெரும்பாலும் முறையான பராமரிப்பில்லாமலும், குண்டும் குழியுமாக உள்ளதும் விபத்துகளுக்கு ஒரு காரணம்.

இம்மாவட்டத்தில் அதிக விபத்துகள் டூவீலர்களால் நடந்துள்ளது. 20-30 வயதுக்குபட்டவர்களால் அதிகம் விபத்து ஏற்பட்டுள்ளது. 
மது அருந்திவிட்டு வாகனங்கள் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். பைக் ரேஸ் நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. ரேஸ் பைக் வைத்திருப்பவர்களின் நடவடிக்கை சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
விபத்துகளை தவிர்க்க பல்வேறு வழிகளில் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. தொடர் முயற்சிகளால் அடுத்து வரும் ஆண்டுகளில் விபத்துகள் குறையும் என நம்புகிறோம் என்றனர்.

1.78 லட்சம் வழக்குகள் 

தூத்துக்குடி மாவட்டத்தில் விபத்துகளை குறைப்பதற்காக மோட்டார் வாகன வழக்குகளை போலீசார் அதிகமாக பதிவு செய்து வருகின்றனர். 2017 ஜனவரி முதல் டிசம்பர் வரையில் 1,78,291 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.ஓய்வெடுக்காத டிரைவர்கள்வட்டார போக்குவரத்து அதிகாரி ரெங்கநாதன் கூறுகையில், ‘‘பெரும்பாலான விபத்துகள் அதிகாலை 2 மணி முதல் 5 மணிக்குள் தான் நடந்துள்ளன. இரவில் வாகனங்களை ஓட்டும் டிரைவர்கள் பகலில் நன்றாக தூங்கி உடல் நிலையை சிறப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். மனநிலையையும், சிந்தனையையும் சிதறவிடாமல் ஒருமுகத்தன்மையுடன் தனது வாகனத்தில் வரும் அனைத்து உயிர்களுக்கும் நாமே பொறுப்பு என்ற தன்மையுடன் பணியை மேற்கொள்ள வேண்டும். டிரைவிங்கின் போது போதை வஸ்துகளை தவிர்ப்பதன் மூலமும் விபத்துகளை தவிர்க்கலாம்’’ என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...