செவ்வாய், 13 பிப்ரவரி, 2018

ஏரல் அருகே குறுகிய பாலத்தால் விபத்து அபாயம்


ஏரல், பிப். 13:  ஏரல் அருகே திருவழுதிநாடார்விளை பஸ்நிறுத்தம் அருகே உள்ள குறுகலான பாலத்தினால் விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏரலில் இருந்து மங்களகுறிச்சி செல்லும் மெயின் ரோட்டில் திருவழுதிநாடார்விளை பஸ் நிறுத்தம் அருகே பழமையான குறுகலான தரைமட்ட பாலம் உள்ளது. இந்த ரோட்டின் வடக்கு பக்கத்தில் இருந்து தென்பக்கத்தில் உள்ள விவசாய நிலத்திற்கு தண்ணீர் கொண்டு செல்வதற்காக இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. 

ஏரலில் இருந்து மங்களகுறிச்சி செல்லும் ரோடு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது இந்த பாலத்தை விரிவு படுத்தாமல் அப்படியே விட்டுவிட்டனர். இதனால் பாலத்தில் ஒரு பஸ் மட்டுமே செல்லும் அளவில் ரோடு மிக குறுகலாக இருப்பதால் இந்த இடத்தில் எதிரே வரும் வாகனத்திற்கு வழி விடமுடியவில்லை. மங்களகுறிச்சி, மேல மங்களகுறிச்சி, பெருங்குளம், சிவகளை உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஏரல் பள்ளிகளில் படித்து வரும் 500க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகளும் இந்த வழியாகத்தான் ஏரல் வந்து செல்கின்றனர். 
இந்த ரோட்டின் இருபக்கத்திலும் நெல் மற்றும் வாழை விவசாயம் நடந்து வருவதால் விவசாயிகளும் அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர். மேலும் ஏரலில் இருந்து மங்களகுறிச்சி வழியாக ஸ்ரீவைகுண்டம், நெல்லை மற்றும் பண்டாரவிளை வழியாக தூத்துக்குடிக்கு தினமும் பஸ்கள் மற்றும் ஆயிரத்திற்கு மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. 

இந்த குறுகிய பாலத்தில் வாகனங்கள் தட்டுதடுமாறியே செல்கின்றன. மேலும், இதில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே திருவழுதிநாடார்விளை பஸ் நிறுத்தம் அருகில் விபத்தை ஏற்படுத்தி வரும் குறுகலான பாலத்தை அப்புறப்படுத்திவிட்டு ரோடு விரிவாக்கத்திற்கு தகுந்தாற் போல் பாலத்தை விரிவுப்படுத்தி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...