புதன், 11 ஜூலை, 2018

இண்டிகோ விமானநிறுவனத்தால் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு நேரடி விமானசேவை.



இண்டிகோ விமானநிறுவனத்தால் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு நேரடி விமானசேவை.*
இந்தியாவின் பெரிய மற்றும் இந்தியாவின் உள்நாட்டு விமானப்போக்குவரத்தில் முன்னனி விமானநிறுவனமான இண்டிகோ விமானநிறுவனமானது வரும் ஜூலை 26ம் தேதி முதல்,
முத்து நகரில் இருந்து முத்து முத்தாய்,
ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று தினசரி நேரடி விமானசேவைகளை சென்னைக்கு தொடங்கவிருக்கிறது.
துறைமுகத்தைப் பொறுத்த அளவில்,
இந்தியாவின் பத்தாவது மிகப்பெரிய துறைமுகம்,
தமிழ்நாட்டின் சென்னைக்கு அடுத்த இரண்டாவது பெரிய துறைமுகம்,
அனைத்து பருவ காலங்களிலும் (Climatic Condition) செயல்படும் துறைமுகம்,
தமிழகத்தின் முக்கிய மீன்பிடி துறைமுகங்களில் ஒன்று,
மீன்பிடி கப்பல்கள் மற்றும் உபகரணங்கள் தயாரிப்பு மற்றும் பராமரிக்கும் துறைமுகம்,
சிறிய இரக சரக்கு கப்பல் கட்டும் துறைமுகம்,
முத்துக்குளிக்கும் துறைமுகம் என துறைமுக அளவில் பன்முக பரிமாணங்களைக் கொண்ட இந்திய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகம் தூத்துக்குடி துறைமுகமாகும்.
அதுமட்டுமன்றி,
கொழும்பு, சிங்கப்பூர், ஹாங்காங், கராச்சி, ஸலாலாஹ், ஜபல்அலி, ஜித்தா, ரொட்டர்டோம் போன்ற துறைமுகங்களுடன் நேரடி சரக்குப்போக்குவரத்தால் இணைந்துள்ள முக்கியமான துறைமுகமாகும்.
தூத்துக்குடி நகரத்தைப் பொறுத்த அளவில்,
அனல்மின் உற்பத்தி,
காற்றாலை மின் உற்பத்தி,
உணவு உப்பு உற்பத்தி,
வேதி உப்பு மற்றும் வேதி அமிலங்கள் உற்பத்தி,
விவசாய உரங்கள் உற்பத்தி,
தேங்காய் எண்ணெய் உற்பத்தி,
மேலும் மத்திய, மாநில மற்றும் தனியார் கடல்வளம், மீன் ஆராய்ச்சி நிலையங்கள் என்று,
இந்தியாவில் உள்ள அரிதான *பன்முகத்தன்மை* (Multi face) கொண்ட நகரங்களில் ஒன்று தூத்துக்குடியாகும்.
மனித மேம்பாட்டுக் குறியீடு (HDI)ல்,
தமிழகத்தைப் பொறுத்து சென்னைக்கு அடுத்து இரண்டாமிடத்தில் உள்ளது தூத்துக்குடி ஆகும்.
இவ்வளவு சிறப்புப் பொருந்திய தூத்துக்குடியானது விமானப் போக்குவரத்தைப் பொறுத்து இவ்வளவு நாட்கள் ஏனோ பாராமுகமாய் இருந்தது.
ஸ்பைஸ்ஜெட் விமானநிறுவனமானது தினசரி இரண்டு சேவைகளை இங்கிருந்து சென்னைக்கு வழங்கியது. கடந்த ஜூலை 1 முதல் இங்கிருந்து பெங்களூருவுக்கும் சேவை தொடங்கியது.
இந்நிலையில் இண்டிகோ விமானநிறுவனமானது தனது விமானசேவைகளை இங்கிருந்து வரும் ஜூலை 26 முதல் தினசரி மூன்று சேவைகளை தூத்துக்குடி மற்றும் சென்னைக்கிடையில் தொடங்கவிருக்கிறது.
அதற்கான கால அட்டவணைகள் வருமாறு.
*சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு புறப்பாடுகள்*
1. சென்னையில் அதிகாலை 5.50க்கு புறப்படும் 6E 7183 விமானமானது தூத்துக்குடியை காலை 7.30க்கு வந்தடையும்.
2. சென்னையில் காலை 10.25க்கு புறப்படும் 6E 7185 விமானமானது தூத்துக்குடியை மதியம் 12.05க்கு வந்தடையும்.
3. சென்னையில் மதியம் 14.40க்கு புறப்படும் 6E 7187 விமானமானது தூத்துக்குடியை மாலை 16.20க்கு வந்தடையும்.
*தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு புறப்பாடுகள்*
1. தூத்துக்குடியில் காலை 7.55க்கு புறப்படும் 6E 7184 விமானமானது சென்னையை காலை 9.30க்கு சென்றடையும்.
2. தூத்துக்குடியில் மதியம் 12.35 க்கு புறப்படும் 6E 7186 விமானமானது சென்னையை மதியம் 14.15க்கு சென்றடையும்.
3. தூத்துக்குடியில் மாலை 16.40க்கு புறப்படும் 6E 7188 விமானமானது சென்னையை மாலை 18.15 க்கு சென்றடையும்.
சென்னையில் இருந்து இந்தியாவின் அனைத்து ஊர்களுக்கும் இணைப்பு விமானசேவை உள்ளது.
வழக்கம்போல் பயணஉடைமைக்கான "த்ரூ செக் இன்" வசதி உள்ளது.
அதாவது விமானப்பயணி தூத்துக்குடியில் இருந்து சென்னை வழியாக டெல்லிக்கு பயணிக்கும் பட்சத்தில்,
சென்னையில் பயணி மட்டும் இறங்கி இணைப்பு விமானத்தில் ஏறினால் போதும். பயணியின் பயணஉடைமையானது இண்டிகோ விமானநிறுவனத்தால் டெல்லி விமானத்திற்கு மாற்றப்பட்டுவிடும். பயணி தனது உடைமையை டெல்லியில் சென்று எடுத்துக்கொள்ளலாம்.
சென்னை விமானநிலையம் வழியாக,
கொழும்பு,
சிங்கப்பூர்,
துபை மற்றும்
தோஹாவிற்கு
இரு வழித்தடங்களிலும் இணைப்பு விமானசேவை உள்ளது.
இண்டர்நேசனல் "த்ரூ செக் இன்" வசதியும் உள்ளது.
உள்நாட்டு "த்ரூ செக் இன்" வசதியில் 15 கிலோ பயண உடைமையும்,
இண்டர்நேசனல் "த்ரூ செக் இன்" வசதியில் 30 கிலோ பயண உடைமையும் இரு வழித்தடத்திலும் அனுமதிக்கப்படும்.
இண்டர்நேசனல் "த்ரூ செக் இன்" வசதியில்,
பன்னாட்டு விமான பயணியின் புறப்பாடு மற்றும் வருகையைப் பொறுத்த குடியேற்றம் மற்றும் சுங்கம் சார்ந்த நடைமுறைகளுக்கு தூத்துக்குடி விமானநிலையத்தில் பயணிகளுக்கு இண்டிகோ விமானநிறுவனம் வழிகாட்டும்.
தூத்துக்குடி விமானநிலையத்தில் இண்டிகோ விமானநிறுவனத்தின் வருகையையொட்டி,
இந்திய விமானநிலையங்கள் ஆணைக்குழுமமானது (AAI) பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தத் தொடங்கியுள்ளது.
விமானப்போக்குவரத்து கட்டுப்பாட்டின் (ATC) பணிநேரத்தை நீட்டிக்கவுள்ளது.
இரவு நேரத்தில் விமானத்தை இறக்கி ஏற்றும் வசதிகளை அறிமுகப்படுத்தவுள்ளது.
இவ்வசதிகள் அதிகரிக்கப்படும் பட்சத்தில் இன்னும் அதிக விமானசேவைகள் தூத்துக்குடிக்கு கிடைக்கும்.
விமானநிலைய ஓடுதளத்தை அதிகரிக்க தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறது.
தற்போதுள்ள தூத்துக்குடி விமானநிலைய ஓடுதளத்தில் 68 முதல் 80 இருக்கைகள் வரை உள்ள ATR-72 மற்றும் பம்பார்டியர் வகை Dash Q400 வகை இலகு இரக விமானங்களை மட்டுமே இறக்கி ஏற்ற முடியும். ஓடுதளம் அதிகரிக்கப்படும் பட்சத்தில் 150 முதல் 210 இருக்கைகள் வரையுள்ள ஏர்பஸ் A 320 வகை விமானங்கள் மற்றும் போயிங் B 737 வகை விமானங்களை இறக்கி ஏற்ற முடியும்.
மொத்தத்தில் இண்டிகோவின் வரவால் தூத்துக்குடி விமானநிலையமும் புதிய பரிணாமத்தை எட்டவுள்ளது.
இண்டிகோவின் இந்த விமானசேவைகள் தூத்துக்குடிக்கு மட்டுமன்றி,
தூத்துக்குடி விமானநிலையத்தைச் சார்ந்துள்ள,
திருநெல்வேலி,
காயல்பட்டினம்,
திருச்செந்தூர்,
கோவில்பட்டி மற்றும் சுற்றியுள்ள அனைத்து ஊர் மக்களுக்கும் பயனுள்ளதாகவும் தேவையுள்ளதாகவும் இருக்கும். இந்த ஊர்கள் அனைத்தும் இப்புதிய விமானசேவைகளால் நிறைய வளர்ச்சி மற்றும் பொருளாதாரப் பயன்களைப் பெறும் என்பதில் ஐயம் இல்லை.
பயணிகள் மட்டுமன்றி,
திருநெல்வேலி அல்வா,
தூத்துக்குடி தேங்காய் எண்ணை,
கோவில்பட்டி கடலை மிட்டாய்,
உடன்குடி கருப்பட்டியும் விரைவில் உள்நாடு மட்டுமல்ல, வெளிநாட்டிற்கும் பயணிக்கும் என நம்புவோம்.
இண்டிகோவின் வரக்கூடிய மூன்று விமானசேவைகளையும் சேர்த்தால் தூத்துக்குடி விமானநிலையம் நாளொன்றிற்கு ஆறு விமானசேவைகளையும்,
(சென்னைக்கு 5, பெங்களூருவுக்கு 1)
அதிகபட்சம் இருவழித்தடத்திலும் சேர்த்து 900 விமானப்பயணிகளையும் கையாளும் வாய்ப்பைப் பெறுகிறது.
இண்டிகோவின் வரவால் தூத்துக்குடி விமானநிலையமானது,
விரைவில்,
இந்தியாவின் மற்ற துறைமுக நகரங்களான விசாகப்பட்டினம், புவணேஸ்வரம் (பாரதீப்), மங்களூரு, கோவா போன்ற துறைமுக நகரங்களுக்கு இணையான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானசேவைகளைப் பெற வாழ்த்துவோம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...