சனி, 28 ஜூலை, 2018

கருணாநிதி உடல்நலம் குறித்து நேரில் சென்று விசாரித்தார் தமிழக ஆளுநர் பன்வாரிலால்

கருணாநிதி உடல்நலம் குறித்து மு.க.ஸ்டாலினிடம் விசாரிக்கும் ஆளுநர் பன்வாரிலால் | படம்: ம.பிரபு
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்து திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குறித்து மு.க.ஸ்டாலினிடம் விசாரித்தார்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தீவிர அரசியலிலிருந்து விலகி ஓய்வெடுத்து வரும் திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த 18-ம் தேதி முதல் காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து, அவரது உடல்நலம் குறித்த செய்திகள் வெளியாகின. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ட்ரக்யோஸ்டமி குழாய் புதிதாக பொருத்தப்பட்டதால் காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாகவும், தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
இதுகுறித்து காவேரி மருத்துவமனை தரப்பில், “கருணாநிதியின் உடல்நலத்தில் சிறிது நலிவு ஏற்பட்டுள்ளது. சிறுநீரகப் பாதையில் ஏற்பட்டுள்ள நோய்த் தொற்றின் காரணமாக காய்ச்சல் வந்துள்ளது. அதற்குத் தேவையான மருந்துகள் செலுத்தப்படுகின்றன. அவரை 24 மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய மருத்துவக் குழு கவனித்துக்கொள்கிறது. வீட்டிலேயே மருத்துவமனைகள் அடங்கிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன” என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கோபாலபுரம் இல்லத்திற்கு வந்து மு.க.ஸ்டாலினிடம் கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரித்து சென்றனர். திமுக தொண்டர்களும் ஏராளமானோர் அங்கு குவிந்தனர்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் கருணாநிதிக்கு திடீரென ரத்த அழுத்தம் குறைந்தது. உடனடியாக மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் அவருக்கு கூடுதல் சிகிச்சை அளிக்க வேண்டிய தேவை ஏற்பட்டதால் உடனடியாக காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதனால் நள்ளிரவிலும் காவேரி மருத்துவமனை முன்பு ஏராளமான தொண்டர்கள் கூடினர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சற்று நேரத்தில் கருணாநிதியின் உடலில் ரத்த அழுத்தம் சீராகத் தொடங்கியது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆ.ராசா, “கருணாநிதிக்கு ரத்த அழுத்தம் குறைந்ததால் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய அவசியத்திற்கு ஆளானார். மருத்துவ சிகிச்சைக்கு பிறகு அவர் ரத்த அழுத்தம் குறைந்து அபாய கட்டத்தை தாண்டி விட்டார்” என்று தெரிவித்தார். காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையிலும் இந்தத் தகவலே குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், சனிக்கிழமை காலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்து திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோரை சந்தித்து விசாரித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...