சனி, 28 ஜூலை, 2018

தி.மு.க., தலைவர் கருணாநிதி, பூரண நலம் பெற பிரார்த்திக்க






சென்னை: காய்ச்சல், சிறுநீரக தொற்று காரணமாக, உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் தி.மு.க., தலைவர் கருணாநிதி, பூரண நலம் பெற வேண்டும் என அக்கட்சியினர் பிரார்த்திக்க துவங்கி உள்ளனர். 24 மணி நேரமும் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருக்கும் கருணாநிதியை காணவும் நலம் விசாரிக்கவும், கட்சித் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் குவிவதால் சென்னை கோபாலபுரம் பரபரப்புடன் காணப்படுகிறது.
சென்னை, கோபாலபுரம் வீட்டில் மருத்துவமனையில் இருப்பதை போன்று அனைத்து மருத்துவ வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு கருணாநிதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது தொண்டையில் பொருத்தப் பட்டிருந்த குழாய் மாற்றப் பட்டதில் நோய் தொற்று உருவாகி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. மேலும் சிறுநீரக பாதையிலும் தொற்று அதிகரித்துள்ளது.
இந்நிலையில் நேற்று காலை அவரது உடல் நிலையில் மேலும் பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக சிறப்பு சிகிச்சை அளிக்க காவேரி மருத்துவமனையில் இருந்து நான்கு டாக்டர்கள் விரைந்து வந்தனர். திடீர் பாதிப்புக்கான காரணத்தை கண்டறிந்து உரிய சிகிச்சையும் அளித்தனர்.
இருப்பினும், அவரால் படுக்கையை விட்டு எழுந்திருக்க முடிய வில்லை; கண் திறக்க முடியவில்லை. படுத்த படுக்கையாகவே இருக்கிறார். நோய் தொற்று குணமடைய அவரது உடல் தாங்கக் கூடிய அளவுக்கு எதிர்ப்பு சக்தி மருந்துகள் அளிக்கப்பட்டு உள்ளன.இதனால் ஏற்பட்ட பரபரப்பான சூழ்நிலையில் தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் அவசரமாக செய்தியாளர்களை அழைத்து ''கருணாநிதி,காய்ச்சலில் இருந்து குணமடைந்து வருகிறார். அது மட்டுமல்லாமல் அவருக்கு ஏற்பட்டிருந்த நோய் தொற்றும் குணமாகி வருகிறது. 
எனவே கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது,'' என, விளக்கம் அளித்தார். டில்லியிலிருந்து நேற்று மாலை அவசரமாக சென்னை திரும்பிய கனிமொழி கூறுகையில் ''கருணாநிதி, விரைவில் தேறி விடுவார். அவருக்கு 24 நேரமும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. கோபாலபுரம் இல்லத்தில் சிகிச்சை அளிக்க கூடிய வசதிகள் அனைத்தும் உள்ளன. அவர் குணமாகி, மீண்டும், தமிழக மக்களுக்கு பணியாற்ற வருவார்'' என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு கூறுகையில் ''நேற்றை விட இன்று கருணாநிதியின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளது. அவர் நலமாக உள்ளார்,'' என்றார்.பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா கூறுகையில் ''கருணாநிதியின் உடல் நலம் குறித்து ஸ்டாலினிடம் விசாரித்தேன். காய்ச்சலுக்கான சிகிச்சை தொடர்கிறது. உடல்நிலை முன்னேறி வருவதாக டாக்டர்கள் கூறியதாக ஸ்டாலின் சொன்னார். கருணாநிதிபூரண நலம் பெற பிரார்த்திக்கிறேன்'' என்றார்.ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்வர் குமாரசாமி ஆகியோரும் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தனர்; பூரணமாக குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் தி.மு.க., பொதுசெயலர் அன்பழகன், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் செயலர் தா.பாண்டியன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை, குமரி அனந்தன், பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட பல தலைவர்கள், கோபாலபுரம் வந்த வண்ணம் இருந்தனர்.
கருணாநிதி வீடு அமைந்துள்ள தெரு முழுவதும் தொண்டர்கள் திரண்டிருந்தனர். இதற்கிடையில் கருணாநிதியின் துணைவி ராஜாத்தி மகள் செல்வி உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் சென்னையில் உள்ள சில கோயில்களில் நேற்று சிறப்பு பிரார்த்தனைகள் செய்தனர். தி.மு.க.,வினரும், கருணாநிதி நலம் பெற வேண்டி பிரார்த்தனைகளில் ஈடுபட்டுள்ளனர்.
ஆதரவாளர்களுடன் அழகிரி முகாம்

● கருணாநிதிக்கு சிகிச்சை அளிக்க தேவையான சில மருத்துவ உபகரணங்கள் காவேரி மருத்துவமனையில் இருந்து, நேற்று மாலை 'ஆம்புலன்ஸ் வேனில்' கொண்டு வரப்பட்டன
● கருணாநிதியின் மகன் அழகிரி நேற்று காலை மூன்று கார்களில் தன் ஆதரவாளர்களுடன், சென்னை வந்தார். அவர் போயஸ் கார்டனில் உள்ள மகன் தயாநிதி வீட்டிற்கு சென்று விட்டு, பின் கோபாலபுரம் வந்து கருணாநிதியை சந்தித்தார்.
இதையடுத்து தன் ஆதரவாளர்களிடம் 'கருணாநிதியின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவரை பற்றி கவலைப்பட வேண்டாம். ஆனால் நான் நான்கைந்து நாட்கள் தங்க வேண்டியது இருக்கும்' என அழகிரி கூறியுள்ளார். அவரது ஆதரவாளர்களும் சென்னையில் தங்க திட்டமிட்டுள்ளனர்.
வதந்திகளை நம்பாதீர்: ஸ்டாலின்
தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் அறிக்கை: கருணாநிதியின் உடல்நிலை பற்றி விஷமிகள் பரப்பும் வதந்திகள் எதையும் தொண்டர்களும் மக்களும் நம்ப வேண்டாம். கருணாநிதிக்கு அளிக்கப்பட்டு வரும் தொடர் சிகிச்சையின் விளைவாக, உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. டாக்டர்கள் 24 மணி நேரமும் நன்கு கவனித்து, சிகிச்சை அளித்து வருகின்றனர். டாக்டர்களின் வேண்டுகோளுக்கிணங்க கட்சி தொண்டர்கள் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கருணாநிதியை சந்திக்க வருவதை தவிர்க்க வேண்டும். விஷமிகள் திட்டமிட்டு பரப்பும் எந்த வதந்திகளுக்கும் செவிமடுக்க வேண்டாம்; வதந்திகளை நம்ப வேண்டாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...