தூத்துக்குடி,
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா? என்று வாக்குச்சாவடிகளில் சரிபார்த்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ம.ரவிகுமார் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:–
நடத்தை விதிகள் அமல்
தேர்தல் ஆணையம் பாராளுமன்ற தேர்தலுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள் இன்று முதல் அமலுக்கு வந்து உள்ளது. தேர்தல் நேர்மையாகவும், அமைதியாகவும் நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. தொகுதியில் 1,413 வாக்குச்சாவடிகள் உள்ளன. மேலும் 23 வாக்குச்சாவடிகள் அமைக்க ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. 2009–ம் ஆண்டு தேர்தலில் 69.24 சதவீதம் வாக்குகளும், 2011–ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 74.83 சதவீதம் வாக்குகளும் பதிவாகி உள்ளன.
இந்த தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைத்து வாக்காளர்களையும் ஓட்டுபோட வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்காக விழிப்புணர்வு சிறப்பு தேர்தல் பார்வையாளர் நியமிக்கப்பட உள்ளார். யாருக்கும் வாக்களிக்க விரும்பாத வாக்காளர்கள் நோட்டா பொத்தானை பயன்படுத்தலாம். வருகிற 9–ந் தேதி அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியல் பார்வைக்கு வைக்கப்படும். பொதுமக்கள் தங்களது பெயர் உள்ளதா? என்பதை சரிபார்த்துக் கொள்ளலாம். பெயர் சேர்க்கப்படாதவர்கள் படிவம் 6–ல் தங்களது பெயரை சேர்க்க மனு செய்யலாம்.
பதற்றமான...
பொதுமக்கள் தேர்தல் தொடர்பாக எந்த புகாராக இருந்தாலும் கட்டணமில்லாத டெலிபோன் எண் 1800 4257040 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். அதே போன்று tut2014நீஷீனீஜீறீணீவீஸீts@ரீனீணீவீறீ.நீஷீனீ என்ற இணையதள முகவரியிலும் புகார்களை அனுப்பலாம்.
தேர்தலையொட்டி 36 பறக்கும் படைகள் மற்றும் தேர்தல் செலவுகளை கண்காணிப்பதற்கு தனியாக 6 குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது. அதே போன்று பதற்றமான வாக்குச்சாவடிகளாக 233 முதல் 250 வாக்குச்சாவடிகள் அடையாளம் கண்டறியப்பட்டு உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும்.
அரசு விழாவுக்கு தடை
வருகிற 29–ந் தேதி தேர்தல் அறிவிக்கை வெளியிடப்படுகிறது. 5–ந் தேதி வரை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யலாம். அடுத்த மாதம் 24–ந் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. அரசு விழாக்கள், குறைதீர்க்கும் நாள், மனுநீதிநாள் ஆகியவை தேர்தல் பணிகள் முடிவடையும் வரை நடக்காது. அரசியல் கட்சி, வேட்பாளர்கள் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு விரும்பும் பட்சத்தில் கூட்டம் நடைபெறும் நாள், இடம், நேரம் குறித்த விவரங்களை போலீசுக்கு தெரிவித்து ஒப்புதல் பெற வேண்டும்.
ஊர்வலங்கள் நடத்துவதற்கு தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முன் அனுமதி பெற வேண்டும். ஒலிபெருக்கியுடன் வாகன பிரசாரம் செய்ய தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முன் அனுமதி பெற வேண்டும். ஒலிபெருக்கியை இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பயன்படுத்தக்கூடாது. அரசியல் கட்சியினரால் எழுதப்பட்ட சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள், பேனர்கள் அனைத்தும் அவர்களாகவே அப்புறப்படுத்த வேண்டும். இல்லையெனில் அரசு செலவில் அகற்றப்பட்டு சம்பந்தப்பட்ட வேட்பாளரின் செலவு கணக்கில் சேர்க்கப்படும்.
பணம் எடுத்தல்
வங்கியில் இருந்து தனிநபர் ரூ.1 லட்சத்துக்கு மேல் பணம் எடுக்கும் போது உரிய ஆவணங்கள் வைத்து இருக்க வேண்டும், வேட்பாளரோ, அவரது பிரதிநிதியோ போஸ்டர்கள் அல்லது மது போன்ற ரூ.10 ஆயிரத்துக்கு மேல் பெறுமானம் உள்ள தடை செய்யப்பட்ட பொருட்கள், பரிசு பொருட்கள் வாகனத்தில் வைத்து இருந்தால் அந்த வாகனம் கைப்பற்றப்படும். பெரிய அளவில் வழிபாட்டு தலங்களுக்கு வெளியில் அன்னதானம் நடத்தக்கூடாது.
இவ்வாறு மாவட்ட கலெக்டர் ம.ரவிகுமார் கூறினார்.
அப்போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) ஆறுமுகம், தேர்தல் பிரிவு தாசில்தார் நெல்லை நாயகம் ஆகியோர் உடன் இருந்தனர். முன்னதாக தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான ம.ரவிகுமார் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்து உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக