ஸ்ரீவைகுண்டம் அணையில் ஆக்கிரமித்து உள்ள அமலைச்செடிகளை அகற்றி, தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
அமலைச்செடிகள்
நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்கும், விவசாய பயன்பாட்டுக்கும் ஆதாரமாக தாமிரபரணி ஆறு விளங்குகிறது. தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணை ஸ்ரீவைகுண்டத்தில் அமைந்து உள்ளது. இங்கிருந்து வடகால், தென்கால் மூலம் பாசன வசதிக்காக தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. வடகால் மூலம் ஏரல், தூத்துக்குடி பகுதிகளும், தென்கால் மூலம் ஆழ்வார்திருநகரி, தென்திருப்பேரை, குரும்பூர் பகுதிகளும் பாசன வசதி பெறுகின்றன.
தற்போது ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி அணை முழுவதும் ஏராளமான அமலைச்செடிகள் ஆக்கிரமித்து உள்ளன. மேலும் அணையில் அதிகளவு சகதி, மணல் மேடு நிறைந்து உள்ளது. இதனால் அணையில் போதிய அளவு தண்ணீரை தேக்கி வைக்க முடியவில்லை. கடந்த சில நாட்களாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் தாமிரபரணி ஆற்றின் மூலம் ஸ்ரீவைகுண்டம் அணைக்கு வந்த தண்ணீரை தேக்க முடியாமல் வீணாக கடலுக்கு செல்கிறது.
அகற்ற கோரிக்கை
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், அணையில் உள்ள அமலைச்செடிகளை அகற்றுவதற்காக தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் முயற்சி செய்தன. ஆனாலும் அவற்றை அகற்றிய சில நாட்களிலேயே மீண்டும் அதே இடத்தில் அமலை செடிகள் தோன்றுகின்றன. வெளிநாடுகளில் மருந்து தெளித்து அமலை செடிகளை அழிக்கின்றனர். ஆனால் அந்த மருந்தானது தண்ணீரை மாசுபடுத்தும் அபாயம் உள்ளது. அதிகமான வெள்ளம் வரும்போது மட்டும் தான் அமலை செடிகளை முழுவதுமாக ஆற்று நீர் அடித்து கடலுக்கு கொண்டு செல்லும். ஆனாலும் அணையில் உள்ள அமலை செடியின் வேரானது மீண்டும் சில நாட்களில் முளைத்து விடுகிறது.
எனவே அணையின் அடியில் உள்ள சகதிகள், மணல் மேடுகளை அகற்றும்போது, அமலை செடியின் வேரும் அகற்றப்படுவதால் அமலை செடிகள் மீண்டும் வளர்ச்சி அடைய வாய்ப்பு இருக்காது. எனவே ஸ்ரீவைகுண்டம் அணையில் உள்ள அமலை செடிகள், மணல் மேடுகளை அகற்றி தூர்வார அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என்று தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக