பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் சேதுக்குவாய்த்தான் கிராமத்தில் மண்பானைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நிகழாண்டில் இங்கு தயாரிக்கப்படும் மண்பானைகள் சென்னைக்கு அனுப்பப்படுவதால் மண்பாண்ட தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின்போது, புது மண்பானையில் பச்சரிசி மற்றும் வெல்லம் ஆகியவற்றை வைத்து பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்வது வழக்கம். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாள்களே உள்ளதால் தூத்துக்குடியில் பொங்கல் பண்டிகைக்கு தேவையான மண்பானைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பொங்கல் பண்டிகைக்குத் தேவையான மண்பானைகள், மண் அடுப்பு போன்றவை தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை, சேதுக்குவாய்த்தான், வாழவள்ளான், அரியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இங்கு தயாரிக்கப்படும் மண்பானைகள், மண் அடுப்பு போன்றவை தாமிரவருணி ஆற்றுமணல் கொண்டு தயாரிக்கப்படுவதால் மிகவும் உறுதியாக இருக்கும். எனவே, இங்கு தயாரிக்கப்படும் மண்பானைகளை தூத்துக்குடி மாவட்டம் மட்டுமன்றி திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற அருகில் உள்ள மாவட்டங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுவது உண்டு.
இதற்கிடையே, நிகழாண்டில் சேதுக்குவாய்த்தான் கிராமத்தில் தயாரிக்கப்படும் மண்பானைகள் விற்பனைக்கு சென்னைக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதால் மண்பாண்டத் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதற்காக பல்வேறு விதமான மண்பாண்டங்களை தயாரித்து வருவதாக தொழிலாளி முருகன் தெரிவித்தார்.
இருப்பினும், மண்பாண்டம் தயாரிக்க தேவையான மண்ணுக்கு தட்டுப்பாடு, மழைவெள்ளம் போன்ற இயற்கை இடர்பாட்டால் ஆண்டுக்கு இரண்டு மாதம் தொழில் முடக்கம் உள்ளிட்ட காரணங்களால் மண்பாண்டத் தொழிலை தொடர்வதற்கு போதிய ஆள் இல்லை என்றார் அவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக