உடன்குடியில் ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து பள்ளிவாசல்- வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
கொள்ளை முயற்சி
உடன்குடி கூல தெருவில் முஸ்லிம் பள்ளிவாசல் உள்ளது. நேற்று முன்தினம் இரவில் வழக்கம்போல் பள்ளிவாசலை அதன் நிர்வாகிகள் பூட்டிச் சென்றனர். பின்னர் நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள் பள்ளிவாசல் கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர். அங்கு அனைத்து இடங்களிலும் மர்மநபர்கள் தேடி பார்த்தனர். ஆனால் எந்த விலை உயர்ந்த பொருட்களும் இல்லாததால் மர்மநபர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
அதே தெருவில் வசித்து வருபவர் ஜெயலட்சுமி அம்மாள். இவர் நேற்று முன்தினம் வெளியூருக்கு சென்று விட்டார். இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் இரவில் ஜெயலட்சுமி அம்மாளின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். அங்கும் விலை உயர்ந்த பொருட்களும் ஏதும் இல்லாததால் மர்மநபர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
போலீசார் விசாரணை
நேற்று காலையில் பள்ளிவாசல் மற்றும் ஜெயலட்சுமி அம்மாளின் வீட்டுக் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை பார்த்து அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக