ஞாயிறு, 14 பிப்ரவரி, 2016

ஏரலில் 2 ஆண்டுகளாக மக்கள் பயன்படுத்திய பாலத்தை ஜெ. இன்று திறந்து வைத்தார் -


2/14/2016 2:11:10 PM
ஏரல் : கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கட்டிமுடிக்கப்பட்ட ஏரல் உயர்மட்ட பாலத்தை மக்கள் பயன்படுத்திவரும் நிலையில், முதல்வர் ஜெயலலிதா இன்று அந்த பாலத்தை திறந்து வைத்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஏரல், பெரு வணிக நகரமாகும். இங்கு குரும்பூர் உள்ளிட்ட தென்பகுதி கிராமங்களிலிருந்து தினமும் தொழில் மற்றும் வணிக காரணங்களுக்காக ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இந்த பகுதி மக்கள்  தங்களின் போக்குவரத்துக்காக தாமிரபரணியில் உள்ள பழைய தாம்போதி பாலத்தை பயன்படுத்தி வந்தனர். மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது தாம்போதி பாலம் தண்ணீரில் மூழ்கிவிடும். அப்போது பாலத்தில் போக்குவரத்து துண்டிக்கப்படும்போது வியாபாரிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஆத்தூர், ஆழ்வார்திருநகரி பாலம் வழியாக பல கி.மீ., தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலைமை இருந்தது.

இதனால் ஏரல் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்று வியாபாரிகள், பொதுமக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனர். கடந்த 2011ம் ஆண்டு அதிமுக ஆட்சி பொறுப்பேற்றதும் நபார்டு திட்டத்தின் மூலம் ஏரல் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே ரூ.16.39 கோடியில் புதிய உயர்மட்ட பாலம் கட்ட அனுமதியளிக்கப்பட்டது. இதற்கான அடிக்கல் 2012ம் ஆண்டு ஜூன் 28ம் தேதி நாட்டப்பட்டு அன்றே பணிகள் தொடங்கப்பட்டன. அப்போது நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் 18 மாதங்களில் இப்பாலம் கட்டி முடிக்கப்படும் என்றனர். 2014ம் ஆண்டு ஜனவரியில் பாலம் கட்டிமுடிக்கப்பட்டன. ஆனால் பாலத்தின் தென்பகுதியில் இணைப்புச்சாலை அமைக்க வனத்துறை அனுமதி கிடைக்கவில்லை. இணைப்புச்சாலைக்கு வனத்துறையிடம் அனுமதி கேட்டு கடிதம் எழுதியுள்ளதாக நெடுஞ்சாலைத் துறையினரும் அந்த கடிதத்தை அரசின் பார்வைக்கு அனுப்பி வைத்திருப்பதாக வனத்துறையினரும் சொல்லி நாட்களை கடத்தி வந்தனர்.

இதனால் பாலம் கட்டி முடிக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் இணைப்புச்சாலை இல்லாததால் தாமிரபரணியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பழைய தாம்போதி பாலத்தையும் பயன்படுத்த முடியாமல், புதிய உயர்மட்ட பாலத்திலும் செல்ல முடியாமல் பொதுமக்கள் கடும் சிரமப்பட்டனர்.
புதிய பாலத்துக்கு இணைப்பு சாலை அமைக்கக் கோரி திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்திலும் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுதவிர பல்வேறு கட்சிகளும் இணைப்புச்சாலை அமைக்க வலியுறுத்தின. இந்த நிலையில், கடந்த 2015ம் ஆண்டு ஜூலையில் வனத்துறை அனுமதி கிடைத்ததும் இணைப்புச்சாலை அமைக்கப்பட்டது. நவம்பர் முதல் வாரம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த பெருமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கு ஏற்பட்டன. நவம்பர் 9ம் தேதி தாம்போதி பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் சென்றதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. மறுநாள் தீபாவளி என்பதால் பட்டாசு, துணிமணிகள், பாத்திரங்கள் வாங்குவதற்காகவும் ஏரிலிருந்து தென்பகுதிக்கு செல்வதற்காகவும் ஆயிரக்கணக்கான மக்கள் தாம்போதி பாலத்தின் இருபுறங்களிலும் நின்றுக்கொண்டிருந்தனர்.

அப்போது புதிய பாலத்தின் வழியாக பொதுமக்கள் சென்று விடக்கூடாது என்பதற்காக பாலத்தின் இறங்கும் வழியில் பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. இதைப் பார்த்த மக்கள் ஆத்திரம் அடைந்து ஜேசிபி இயந்திரத்தை வரவழைத்து குழிகளை மூடி புதிய பாலத்தில் சென்றனர். நவம்பர் 10,11,12 தேதிகளில் மழை வெள்ளம் குறைந்து தாம்போதி பாலத்தில் தண்ணீர் வடிந்ததும் உயர்மட்ட பாலம் வழியாகத் தான் பஸ்கள், ஆட்டோக்கள், கார்கள், டூ வீலர்கள் இயக்கப்பட்டன. ஆனால் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் கான்ட்ராக்டர்கள் நவ.13ம் தேதி மீண்டும் ஜேசிபி மூலம் பால இறக்கத்தில் ராட்சத பள்ளம் தோண்டி போக்குவரத்தை துண்டித்துவிட்டனர். இதனால் தாம்போதி பாலம் வழியாக தட்டுத்தடுமாறி பஸ்களும், இதர வாகனங்களும் சென்றுவந்தன.

நவ.15ம் தேதி தாமிரபரணி ஆற்றில் மீண்டும் வெள்ள பெருக்கு ஏற்பட்டதால்தாம்போதி பாலம் மூழ்கியது. வழக்கம்போல் புதுப்பாலத்தில் பள்ளத்தை பொதுமக்களே நிரப்பி சீரமைத்து போக்குவரத்தை தொடங்கினர். இதன்பிறகு தாம்போதி பாலத்தில் வெள்ளம் குறையவே பேரிக்காடு, கற்கள், ஜல்லிகளை குவித்து போலீசார் அடைப்பு ஏற்படுத்தி மக்கள் செல்ல தடை விதித்தனர். இதை மீறி அந்த பாலத்தின் வழியாக சென்றவர்களை அதிமுகவினர் தாக்கினர்.
இதனிடையே நவ.19ம் தேதி மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படவே மீண்டும் உயர்மட்ட பாலத்தின் தடுப்புகள் அகற்றப்பட்டு போக்குவரத்துக்கு விடப்பட்டது. தாம்போதி பாலத்தில் வெள்ளப் பெருக்கு குறைந்ததும் போலீசார் புதுப்பாலத்தை அடைப்பதும், கூடும் போது புதுப்பாலத்தை பொதுமக்களே திறப்பதுமாய் இருந்தது.

இதன்பிறகு புதுப்பாலத்தை அடைப்பதை நெடுஞ்சாலைத்துறையினரும் போலீசாரும் கைவிட்டனர். இணைப்புச் சாலை தார்ச்சாலையாக மாற்றப்பட்டது. தற்போது புதுப்பாலத்தில் பஸ்கள் மற்றும் அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன. ரோட்டின் இருபுறமும் தடுப்பு கம்பிகள் அமைக்கும் பணி முடிவடைந்த நிலையில் வடக்கு பகுதி இணைப்புச் சாலையில் இன்னும் கற்கள் பரப்பப்படாமல் கிடக்கிறது. இந்நிலையில் இந்த பாலத்தை முதல்வர் ஜெயலலிதா வீடியோ கான்பரசிங் மூலம் இன்று திறந்துவைத்தார். கட்டி முடிக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு பிறகு பொதுமக்கள் பயன்படுத்த தொடங்கி 4 மாதங்களுக்கு பிறகு ஏரல் உயர்மட்ட பாலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...