வியாழன், 26 நவம்பர், 2015

ஏரல் தரைமட்ட பாலத்தை தண்ணீர் அரித்தது

ST
தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், ஏரல் தரைமட்ட பாலத்தை தண்ணீர் அரித்துச் சென்றது.

தரைமட்ட பாலம்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முக்கிய வணிக நகரங்களில் ஏரலும் ஒன்றாகும். இங்கிருந்து குரும்பூர் செல்லும் சாலையில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே தரைமட்ட தாம்போதி பாலம் உள்ளது. மழைக்காலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து செல்லும்போது, தரைமட்ட பாலத்தை மூழ்கடித்து செல்வது வழக்கம். எனவே அதன் அருகில் ரூ.16 கோடியே 39 லட்சம் செலவில் புதிய உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி கடந்த 28-6-2012 அன்று தொடங்கியது.

புதிய பாலத்தின் தெற்கு பகுதியில் வனத்துறையினரிடம் அனுமதி பெற்று, 2 ஆண்டுகளுக்கு பிறகு இணைப்பு சாலை அமைக்கப்பட்டது. புதிய பாலத்தின் இரு புறமும் இணைப்பு சாலைகளில் தார் சாலை அமைப்பது, தடுப்பு சுவர், மின் விளக்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற வேண்டி உள்ளது.

வெள்ளம் அரித்துச் சென்றது

இந்த நிலையில் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஏரல் தரைமட்ட தாம்போதி பாலத்தை 3 முறை வெள்ளம் மூழ்கடித்து சென்றது. இதனால் அதன் அருகில் உள்ள புதிய உயர்மட்ட பாலத்தில் தற்காலிகமாக போக்குவரத்து தொடங்கப்பட்டது. கடந்த 3 நாட்களாக தரைமட்ட பாலத்தை மூழ்கடித்தவாறு வெள்ளம் ஓடியது. இதனால் அனைத்து வாகனங்களும் புதிய உயர்மட்ட பாலத்தின் வழியாகவே செல்கின்றன.

நேற்று காலையில் வெள்ளம் குறைந்து, தரைமட்ட தாம்போதி பாலத்தின் வழியாக தண்ணீர் ஓடியது. அப்போது தரைமட்ட பாலத்தில் ஏற்கனவே 2 இடங்களில் ஓட்டை விழுந்த பகுதி முழுவதையும் வெள்ளம் அரித்துச் சென்றது தெரிய வந்தது. பாலத்தின் அடியில் இருந்த ராட்சத குழாய்கள் வெளியே தெரிந்தன.

அதிகாரிகள் ஆய்வு

ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் இளங்கோ, வருவாய் ஆய்வாளர் சாமிநாதன், கிராம நிர்வாக அலுவலர் கோபால், நகர பஞ்சாயத்து தலைவர் பாலகிருஷ்ணன், கிராம நிர்வாக உதவியாளர்கள் ராமசாமி, கர்ணன் ஆகியோர் வெள்ளத்தால் சேதம் அடைந்த தரைமட்ட பாலத்தை பார்வையிட்டனர்.

பின்னர் அதிகாரிகள் கூறுகையில், தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் குறைந்தவுடன், சேதம் அடைந்த தரைமட்ட பாலத்தை சீரமைக்கும் பணி தொடங்கப்படும் என்று தெரிவித்தனர். எனவே ஏரல் புதிய உயர்மட்ட பாலத்தில் விரைவில் அனைத்து பணிகளையும் நிறைவு செய்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு நிரந்தரமாக திறக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...