வியாழன், 10 ஆகஸ்ட், 2017

ஏரலில் முழு கடையடைப்பு போராட்டம் (500க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து) 3000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.





ஏரலில் முழு கடையடைப்பு போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. 3000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 
======================
பாபநாசம் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறந்து விடக்கோரி ஏரல் சுற்றுவட்டாரப்பகுதி பொதுமக்கள் சார்பில் கடையடைப்பு போராட்டம் மற்றும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடந்தது. 
தமிழகம் முழுவதும் பருவமழை கடந்த ஆண்டு பொய்த்த காரணத்தினால் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதரமாக விளங்கிய தாமிரபரணி நதி தற்போது வறண்டு போய் வருகிறது. இதனை நம்பியுள்ள 1000க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஆங்காங்கே குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியல் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். ஏரல் சுற்றுவட்டாரப்பகுதி பொதுமக்களுக்கும் இதே நிலைமை தான். 
முன்னொரு காலத்தில் தாமிரபரணியில் கடைசி அணைக்கட்டு ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு மட்டும் தான். மழைக்காலங்களில் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டை தாண்டி விழும் தண்ணீர் வீணாக கடலுக்கு சென்றது. அந்த சமயத்தில் ஸ்ரீவைகுண்டம் கீழ்பகுதியில் உள்ள ஏரல், முக்காணி, ஆத்தூர், வாழவல்லான் உள்பட 50க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு தாமிரபரணி தண்ணீர் முறையாக கிடைத்து வந்தது. 
இதற்கிடையில் ஓட்டப்பிடாரம், தூத்துக்குடிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் நோக்கத்தோடு அரசு குரங்கணி அருகே ஒரு தடுப்பணையை சுமார் 8 வருடங்களுக்கு முன்பு அமைத்தது. அந்த தடுப்பணை முன்பு சுமார் 50க்கும் மேற்பட்ட உறைகிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது. தடுப்பணை அமைத்த பின் தடுப்பணை தாண்டி மழைக்காலங்கள் தவிர மற்ற நேரங்களில் தண்ணீர் வரத்து மிகவும் குறைந்தது. 
இந்நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் கடும் வறட்சியின் காரணமாக தாமிரபரணி ஆற்றிலும் தண்ணீர் குறைந்தது. தடுப்பணை தாண்டி தண்ணீர் விழவில்லை. இதனால் கீழ்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமத்திற்கு தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. ஏரல் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தின் அருகே தற்போது தண்ணீர் குறைவான அளவு உள்ளது. இதனை ஏரல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதி மக்கள் ஆற்றுப்பாலத்திற்கு மேல்பகுதியில் உள்ள பொதுமக்கள் குடிநீருக்கு உபயோகித்து வருகின்றனர். மேலும் ஏரல் ஆற்றுப்பாலத்தை தாண்டி தண்ணீர் வரவில்லை. இதனால் ஆற்றுப்பாலத்தின் கீழ்பகுதியில் உள்ள முக்காணி, வாலவல்லான், ஆத்தூர் உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தண்ணீர் வரத்து முழுவதும் தடைபட்டது. 
இந்நிலையில் கடந்த வாரம் முக்காணி, வாலவல்லான் பகுதி மக்கள் ஏரல் பகுதி மக்களுக்கு தண்ணீர் வழங்கும் மேல் பகுதி பாலத்திற்கு கீழ்பகுதியில் துளை போட்டு தண்ணீர் கொண்டு சென்ற விவகாரத்தால் இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. உடனே ஸ்ரீவைகுண்டம் வட்டாச்சியர் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். ஆனால் அது உடன்பாடு ஆகவில்லை. 
இதற்கிடையை 4 முறை முக்காணி பொதுமக்கள் குடிநீர் வழங்க வலியுறுத்தி சாலை 
மறியலில் ஈடுபட்டனர். 
இந்நிலையில் ஏரல் பகுதி மக்களுக்கு முறையாக தண்ணீர் வழங்க வேண்டும் என்றும், பாபநாசம் அணையில் இருந்து கூடுதலாக கூடிநீருக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்றும் ஏரல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதி மக்கள் இன்று 500க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் ஏரல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதி ஆரவாரமற்று கிடந்தது. 
காலை இதற்கு ஆதரவு தெரிவித்து ஏரல் மெயின் பஜாரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள், வியாபாரிகள் சங்கத்தினர் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உட்பட 3000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் உடனே குடிநீருக்கு முக்காணியில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை நிரம்பும் வரை பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.










தகவல்ஏரலில் இருந்து பீர்தவ்ஸ் அப்துல் ரஹ்மான் 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...