செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

தூத்துக்குடியில் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் போராட்டம்: அரசு அலுவலகங்கள் வெறிச்சோடின

அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் போராட்டம்: அரசு அலுவலகங்கள் வெறிச்சோடின
தூத்துக்குடியில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. ஆசிரியர்கள் பணிக்கு செல்லாததால் பெரும்பாலான பள்ளிக்கூடங்கள் செயல்படவில்லை. கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி, 

தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 8-வது ஊதிய மாற்றத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். அதுவரை 01-01-16 முதல் 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்கள் அடங்கிய ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் போராட்டம் நடந்தது.

இந்த வேலைநிறுத்தத்தையொட்டி மாவட்ட கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம், உதவி கலெக்டர் அலுவலகங்களில் ஊழியர்கள் யாரும் வேலைக்கு வரவில்லை. இதனால் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. ஆசிரியர்கள் பணிக்கு செல்லாததால், பெரும்பாலான பள்ளிக்கூடங்கள் செயல்படவில்லை. பள்ளிக்கூடங்களுக்கு வந்த மாணவ, மாணவிகள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். காலை முதல் மாலை வரை தலைமை ஆசிரியர்கள், ஊழியர்கள் பள்ளிக்கூடங்களில் இருந்து விட்டு சென்றனர்.

நேற்று காலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தூத்துக்குடி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தூத்துக்குடி வட்ட தலைவர் அண்ணாமலை பரமசிவம் தலைமை தாங்கினார். ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி துணை பொதுச் செயலாளர் மயில், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகம் முன்பு, அரசு ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்டார தலைவர் கருப்பசாமி தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தால் ஓட்டப்பிடாரத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் வெறிச்சோடி காணப்பட்டன. இதனால் அரசு அலுவலகங்களுக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். பெரும்பாலான பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் உதவி கலெக்டர் அனிதா உள்பட 2 பேர் மட்டுமே பணிக்கு வந்தனர். கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் உள்பட யாரும் பணிக்கு வராததால், தாலுகா அலுவலகம் பூட்டி கிடந்தது. கோவில்பட்டி வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் பணியாற்றும் 40 ஆசிரியர்களில் 4 பேரும், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் பணியாற்றும் 69 ஆசிரியர்களில் 15 பேரும் பணிக்கு வந்தனர்.

கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு நடந்த அரசு ஊழியர் சங்க வட்டார தலைவர் பார்த்தசாரதி, ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார தலைவர் சகாயராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர்.

விளாத்திகுளம் தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மூர்த்தி தலைமை தாங்கினார். அங்குள்ள தாலுகா அலுவலகத்தில் ஊழியர்கள் யாரும் வேலைக்கு செல்லாததால் வெறிச்சோடிக் காணப்பட்டது. யூனியன் அலுவலகத்திலும் பெரும்பாலான ஊழியர்கள் வேலைக்கு செல்லவில்லை. அரசு பள்ளிக்கூடங்களிலும் பெரும்பாலான ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை. பள்ளிக்கூடங்கள் செயல்படவில்லை.

திருச்செந்தூர் பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க வட்டார தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அங்குள்ள உதவி கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம், யூனியன் அலுவலகத்தில் பெரும்பாலான ஊழியர்கள் வேலைக்கு செல்லவில்லை. பெரும்பாலான அரசு பள்ளிக்கூடங்கள் செயல்படவில்லை.

ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலக வளாகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க வட்டார செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். அங்குள்ள தாலுகா அலுவலகம், யூனியன் அலுவலகம், கருங்குளம் யூனியன் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் பெரும்பாலான ஊழியர்கள் வேலைக்கு செல்லாததால் வெறிச்சோடியது. அரசு பள்ளிக்கூடங்களிலும் பெரும்பாலான ஆசிரியர்கள் பணிக்கு செல்லவில்லை.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அலுவலக பணியாளர்கள் சுமார் 3 ஆயிரத்து 700 பேரும், வருவாய்த்துறையினர் சுமார் 500 பேரும் போராட்டத்தில் பங்கேற்றனர். அதே போன்று கூட்டுறவுத்துறை, ஊரகவளர்ச்சித்துறை, வணிகவரித்துறையிலும் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக அமைச்சு பணியாளர்கள் 79 பேரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அரசு அலுவலக பணிகள் முற்றிலும் முடங்கின. இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...