ஸ்ரீவைகுண்டத்தில் விவசாய நிலங்களில் தண்ணீர் எடுத்து வந்த 18 டேங்கர் லாரிகளை நாம் தமிழர் கட்சியினர் சிறைபிடித்தனர்.
ஸ்ரீவைகுண்டம்,
ஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளம்– தாதன்குளம் ரோட்டில் உள்ள விவசாய நிலங்களில் சிலர் முறைகேடாக ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீரை உறிஞ்சி எடுத்து, டேங்கர் லாரிகளின் மூலம் தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்வதாக புகார் எழுந்தது.
இந்த நிலையில் நேற்று மாலையில் கருங்குளம் பகுதிகளில் இருந்து தண்ணீர் எடுத்து வந்த 18 டேங்கர் லாரிகளை நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு, தெற்கு மாவட்ட செயலாளர் சுப்பையா பாண்டியன் உள்பட அக்கட்சியினர் ஸ்ரீவைகுண்டம் பொன்னங்குறிச்சியில் மறித்து சிறைபிடித்தனர். அந்த டேங்கர் லாரிகள் நெல்லை– திருச்செந்தூர் மெயின் ரோட்டின் ஓரத்தில் வரிசையாக நிறுத்தப்பட்டன.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) தீபு, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசன் (ஸ்ரீவைகுண்டம்), கோகிலா (ஆழ்வார்திருநகரி), சப்– இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், தாசில்தார் தாமஸ் பயஸ் அருள் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அப்போது நாம் தமிழர் கட்சியினர் கூறுகையில், கருங்குளம் பகுதிகளில் விவசாய நிலங்களில் இருந்து முறைகேடாக டேங்கர் லாரிகளில் தண்ணீர் எடுத்து வந்ததை கேமரா மூலம் பதிவு செய்து உள்ளோம். அதனை ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர்.
இதையடுத்து தாசில்தார் மற்றும் அதிகாரிகள் கருங்குளம் பகுதிகளில் விவசாய நிலங்களில் ஆய்வு நடத்தினர். அப்போது அங்குள்ள ஒரு வயலில் டேங்கர் லாரி மூலம் தண்ணீரை எடுத்தது தெரியவந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியினர் பதிவு செய்த வீடியோ காட்சி மூலம் இன்றும் (வியாழக்கிழமை) விவசாய நிலங்களில் ஆய்வு நடத்துவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிறைபிடிக்கப்பட்ட லாரிகள் நெல்லை–திருச்செந்தூர் மெயின் ரோட்டில் ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்துக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக