டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் முற்றுகை

ஏரல் அருகே டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
ஏரல்,
ஏரல் அருகே டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
டாஸ்மாக் கடையை முற்றுகை
ஆத்தூரை அடுத்த முக்காணி ரவுண்டானாவில் இருந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது. அதற்கு பதிலாக ஏரல் அருகே உள்ள கொற்கை குளக்கரை சாலையில் உள்ள தென்னந்தோப்பு பகுதியில் டாஸ்மாக் கடையை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சுற்று வட்டார கிராம மக்கள் மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு வழங்கினர்.
ஆனாலும் அங்கு டாஸ்மாக் கடையை திறப்பதற்காக நேற்று முன்தினம் மது பாட்டில்கள் இறக்கி வைக்கப்பட்டன. நேற்று காலையில் அங்கு டாஸ்மாக் கடையை திறப்பதற்காக ஊழியர்கள் வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சுற்று வட்டார கிராம மக்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டனர்.
கொளுத்தும் வெயிலில்...
ஏழூர் நாடார் நலச்சங்க தலைவர் ஏ.முருகேசன், செயலாளர் எஸ்.முருகேசன், பொருளாளர் செல்லச்சாமி, வாழவல்லான் ஊர் தலைவர் சுப்பையா இளவழகன், கொற்கை மணலூர் ஊர் தலைவர் ஆனந்தராஜ், கிராம கமிட்டி தலைவர் காமராஜ் காந்தி,
இந்து முன்னணி ஒன்றிய தலைவர் நாராயணன், தி.மு.க. மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ராயப்பன், ஒன்றிய துணை செயலாளர் மகராஜன், பட்டுராஜ், பாரத் மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் கொளுத்தும் வெயிலிலும் திரளாக கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தை
உடனே ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு மாதவன், தாசில்தார் தாமஸ் பயாஸ், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கோகிலா (ஏரல் பொறுப்பு), விஜயகுமார் (ஆத்தூர்), வெங்கடேசன் (ஸ்ரீவைகுண்டம்), சப்– இன்ஸ்பெக்டர்கள் சரவணன், சண்முகசுந்தரம், கிராம நிர்வாக அலுவலர் முத்துமாரி மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று, முற்றுகையிட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது டாஸ்மாக் கடையை இங்கு திறக்க கூடாது. டாஸ்மாக் கடையில் உள்ள அனைத்து மது பாட்டில்களையும் எடுத்து சென்றால்தான், அங்கிருந்து கலைந்து செல்வதாக கிராம மக்கள் தெரிவித்தனர். இதையடுத்து டாஸ்மாக் ஊழியர்கள் அங்கிருந்த அனைத்து மது பாட்டில்களையும் மினி லாரியில் ஏற்றி சென்றனர். தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக