செவ்வாய், 14 மார்ச், 2017

தூத்துக்குடி மாவட்டத்தில் வரலாறு காணாத வறட்சி கருகி வரும் பனைமரங்கள்; பதநீர் உற்பத்தி பாதிப்பு



தூத்துக்குடி மாவட்டத்தில் வரலாறு காணாத வறட்சி கருகி வரும் பனைமரங்கள்; பதநீர் உற்பத்தி பாதிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் பருவமழை பொய்த்து, வரலாறு காணாத வறட்சி நிலவி வருவதால் பனைமரங்கள் கருகி வருகின்றன.
தூத்துக்குடி, 
தூத்துக்குடி மாவட்டத்தில் பருவமழை பொய்த்து, வரலாறு காணாத வறட்சி நிலவி வருவதால் பனைமரங்கள் கருகி வருகின்றன. இதனால், பதநீர் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. பனங்கிழங்கு விளைச்சலும் வெகுவாக குறைந்துள்ளது.
வரலாறு காணாத வறட்சி
தூத்துக்குடி மாவட்டம் வடகிழக்கு பருவமழையால் அதிக மழையை பெற்று வருகிறது. கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால், இந்த மாவட்டம் வறட்சியின் பிடியில் சிக்கி தவித்துக் கொண்டு இருக்கிறது. வரலாறு காணாத வறட்சி நிலவி வருவதால், தாமிரபரணி ஆறும் வறண்டு போயுள்ளது. இதனால், இந்த ஆற்றிலிருந்து செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டங்களிலும் தண்ணீரின்றி வறட்சி நிலவுகிறது. இதனால், மாவட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி உள்பட பெரும்பாலான ஊர்களில் குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. பெரும்பாலான கிராமங்களில் மாதம் இருமுறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யும் நிலை உள்ளது.
பனை தொழில் பாதிப்பு
அதே நேரத்தில், எத்தகைய கோடை வெயிலையும் தாங்கி நிற்கக்கூடிய பனை மரங்கள் காய்ந்து கருகி வருகின்றன. மாவட்டத்தில் தூத்துக்குடி, சாத்தான்குளம், விளாத்திகுளம், குளத்தூர், குரும்பூர், திருச்செந்தூர், காயாமொழி, உடன்குடி, காயல்பட்டினம்,ஆத்தூர், முக்காணி, நாசரேத், ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் ஏராளமான பனை மரங்கள் உள்ளன. விவசாயத்துக்கு அடுத்ததாக பெரும்பாலான விவசாயிகள் பனைமர தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம் ஆண்டு தோறும் ஜனவரி மாதம் இறுதியில் பதநீர் இறக்கும் பணியை பனை தொழிலாளர்கள் தொடங்குவது வழக்கம்.
இந்த ஆண்டு போதுமான மழை பெய்யாததால் பனை மரங்களில் பாளை சரிவர வளர்ச்சி அடையவில்லை. இதனால் பதநீர் இறக்கும் பணி தாமதம் அடைந்து உள்ளது. நொங்கு விளைச்சலும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் பனங்கருப்பட்டி உள்ளிட்ட பனை பொருட்கள் உற்பத்தியும் பாதிக்கப்பட்டு வருகிறது.
கருகி வரும் பனைமரங்கள்
எந்த ஆண்டும் இல்லாத வகையில் வறட்சியை தாங்க முடியாமல் பனைமரங்கள் ஆங்காங்கே காய்ந்து கருகி வருகின்றன. தூத்துக்குடி அருகே உள்ள அந்தோணியார்புரத்தில் ஏராளமானவர்கள் பனை தொழில் செய்து வருகின்றனர். தற்போது பனை மரங்கள் காய்ந்து வருவதால் பனை தொழில் முற்றிலும் நசிந்து உள்ளது. சாத்தான்குளம் பகுதியில் பெரும்பாலான பனைமரங்கள் கருகி உள்ளன. இதனால் நடப்பு ஆண்டில் கருப்பட்டி உள்ளிட்ட பனை பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
பனங்கிழங்கு விளைச்சல் பாதிப்பு
மேலும், பனக்கிழங்கு விளைச்சலும் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. பெரும்பாலான இடங்களில் பனங்கொட்டை பயிரிடப்பட்ட இடங்களில் சிறிதளவு கூட தண்ணீர் இல்லாததால், பனங்கிழங்கு விளைச்சல் ஆகாமல், பூமிக்கடியில் கொட்டைகள் வீணாகி விட்டன. இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். கடற்கரை ஓரங்களிலும், மோட்டார் பம்பு செட்டுக்கு அருகிலும் சிறிதளவு பனக்கிழங்கு விளைச்சல் ஆகியுள்ளது.
நிவாரணம் வழங்கப்படுமா?
இது குறித்து பனை தொழிலாளர்கள் கூறுகையில், ‘பருவமழை பொய்த்ததால், மாவட்டத்தில் பனை தொழில் மிகவும் நசிந்து உள்ளது. இந்த ஆண்டு பெரும்பாலான பனைமரங்கள் பாளைகள் இல்லாமல் உள்ளன. பதநீர் உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. ஆகையால் பனை தொழிலாளர்களுக்கு அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...