புதன், 10 மே, 2017

ஓராண்டாக இருளில் மூழ்கி கிடக்கிறது ஏரல் ஆற்றுப்பாலத்திற்கு `வெளிச்சம்’ தருவது யார்?

ஓராண்டாக இருளில் மூழ்கி கிடக்கிறது
ஏரல் ஆற்றுப்பாலத்திற்கு `வெளிச்சம்’ தருவது யார்?
ஏரல் தாமிரபரணி ஆற்றில் புதிய உயர்மட்ட பாலம் திறந்து ஓராண்டாகியும் மின்விளக்கு அமைக்கப்படாமல் உள்ளது.
தூத்துக்குடி
மாவட்டம் ஏரல் தாமிபரணி ஆற்றில் உள்ள தாம்போதி பாலம் 50 ஆண்டு களுக்கு முன் கட்டப்பட்ட மிக பழமையானது. மழைக்காலத்தில் ஆற்றில் வெள்ளம் வரும் போது இந்த பாலம் தண்ணீரில் மூழ்கி ஏரல்-குரும்பூர் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு வந்தது. இதனால் ஏரல் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் ஏரல் ஆற்றில் உயர்மட்ட பாலம் அமைத்து தரவேண்டும் என அரசுக்கு நீண்ட வருடங்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதன் பேரில் இந்த பாலத்தின் அருகிலேயே ரூ.16 கோடி 50 லட்சம் செலவில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு கடந்த ஆண்டு பிப். 14ம் தேதி அப்போதைய முதல் வர் ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டது.
புதிய பாலத்தில் போக்குவரத்து தொடங்கி ஒரு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் பாலத்தில் மின்விளக்கு வசதி இன்னும் அமைக்கவில்லை. இதனால் பாலம் இரவு இருளில் மூழ்கி கிடக்கிறது. இதனால் இரவு நேரத்தில் மக்கள் ஏரல் ஆற்றுப்பாலம் வழியாக நடந்து செல்வதற்கு அஞ்சுகின்றனர். இந்த புதிய பாலத்தின் தரைதளம் உடைந்து காணப்படுகிறது. இதனால் பெரிய வாகனங்கள் அந்த இடத்தில் செல்லும் போது அதிர்வு சத்தம் ஏற்படுகிறது. எனவே அரசு அதிகாரிகள் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நலன் கருதி ஏரல் ஆற்றுப்பாலத்தில் மின் விளக்கு அமைத்து, உடைந்த நிலையில் உள்ள தரை தளத்தினையும் போட உடன் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என கோருகின்றனர்.
இதேபோல் இதன் அருகில் உள்ள பழைய தாம்போதி பாலம் ஆற்றில் ஒரு தடுப்பு அணை போல் செயல்பட்டு வருவதால் ஏரல் ஆற்றில் எப்பொழுதும் தண்ணீர் வற்றாமல் தேங்கிய நிலையில் உள்ளது. தற்போது இந்த தண்ணீருக்கு ஆபத்து வந்தது போல் பழைய தாம்போதி பாலம் அடியில் ஓட்டை விழுந்து தண்ணீர் அதன் வழியாக வெளியேறி வருகிறது. இதனால் பாலத்திற்கு மேல்பக்கம் தேங்கி கிடந்த தண்ணீர் குறைந்து வருகிறது. மேலும் வரும் மழை காலத்தில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது பழைய பாலத்தில் ஓட்டை விழுந்துள்ள இடத்தில் பாலம் துண்டிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்படி பழைய பாலம் துண்டிக்கப்பட்டால் ஏரல் ஆற்றில் ஓரு சொட்டு தண்ணீர் கூட தேங்கி கிடக்காத நிலை ஏற்படும். இதனால் ஏரல் பகுதி ஆற்றில் தண்ணீர் இல்லாதோடு, இப்பகுதியில் நிலத்தடி தண்ணீரும் இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டுவிடும். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழைய பாலத்தில் விழுந்துள்ள இந்த ஓட்டையை கான்கிரிட் போட்டு அடைத்து, அதன் வழியாக தண்ணீர் வெளியேறி செல்வதை இப்போதே அடைத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என ஏரல் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

நன்றி நெல்லை முரசு - ஏரல் நகர் மலர் - தேதி 10 -05-2017



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...