
தி.மு.க. மாவட்ட செயலாளர் மறைந்த என்.பெரியசாமி உடலுக்கு தூத்துக்குடியில் மு.க.ஸ்டாலின்,
தூத்துக்குடி,
கனிமொழி உள்பட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். அவருடைய உடல் அடக்கம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நடக்கிறது.
பெரியசாமி மரணம்
தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக இருந்த என்.பெரியசாமி (வயது 79) கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் காலை சிகிச்சை பலனளிக்காமல் அவர் மரணம் அடைந்தார்.
அவரது உடல் சென்னையில் இருந்து ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடி போல்பேட்டை பகுதியில் உள்ள அவருடைய வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
மு.க.ஸ்டாலின்
நேற்று அவருடைய உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவருடைய உடலுக்கு நேற்று அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
நேற்று காலை 11 மணி அளவில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் போல்பேட்டையில் உள்ள என்.பெரியசாமி வீட்டுக்கு வந்தார். அவர் என்.பெரியசாமி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அதனை தொடர்ந்து வந்த கனிமொழி எம்.பியும், பெரியசாமி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
முன்னாள் அமைச்சர்கள்
முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, பொன்முடி, கே.என்.நேரு, பொன்.முத்துராமலிங்கம், பூங்கோதை, தங்கம் தென்னரசு, மதிவாணன், தமிழரசி, முன்னாள் எம்.பி. ஜெயதுரை, முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில குழு உறுப்பினர் கனகராஜ், இந்திய கம்யூனிஸ்டு முன்னாள் எம்.பி. அப்பாதுரை, எம்.எல்.ஏ.க்கள் அனிதா ராதாகிருஷ்ணன், வசந்தகுமார், கருணாஸ், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அப்பாவு, மார்க்கண்டேயன், என்.கே.பெருமாள், கருப்பசாமி பாண்டியன், தி.மு.க. மாநில இளைஞர் அணி துணை செயலாளர் ஜோயல், தட்சணமாற நாடார் சங்க தலைவர் சபாபதி நாடார், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் மற்றும் பொதுமக்கள், உறவினர்கள், தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.
இன்று உடல் அடக்கம்
மரணம் அடைந்த பெரியசாமியின் உடல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு போல்பேட்டை பகுதியில் உள்ள அவரது வீட்டின் அருகே அவருக்கு சொந்தமான இடத்தில் அடக்கம் செய்யப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக