தூத்துக்குடி ஜூலை 21 ;
சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு, முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் 30.7.2014 அன்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 110-ன்கீழ் சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு, முதலமைச்சர் மாநில இளைஞர் விருது என்ற புதிய விருது உருவாக்கப்படும் என்று அறிவித்தார்கள். 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று இவ்விருது வழங்கப்படும் என்றும், இந்த முதலமைச்சர் மாநில இளைஞர் விருது, ரூபாய் 50,000/- ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கத்தை உள்ளடக்கியதாக இருக்கும் என்று அறிவித்தார்கள்.
அதன்படி, 2016-2017ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருது எதிர்வரும் 15.08.2017 அன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்படவுள்ளது. இவ்விருது தொடர்பாக கீழ்க்காணும் தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.
1. 15 வயது முதல்35 வயது வரையுள்ள ஆண்/பெண் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். கடந்த ஏப்ரல் 1ந் தேதி அன்று 15 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும் அல்லது மார்ச் 31-ந்தேதி அன்று 35 வயதுக்குள்ளாக இருத்தல் வேண்டும்.
2. அவர்கள் சமுதாய நலனுக்காக தொண்டாற்றியிருப்பவர்களாக இருத்தல் வேண்டும்.
3. அவ்வாறு அவர்கள் செய்த தொண்டு, சமூக/சமுதாயத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தினை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
4. அவர்கள் செய்த சேவையின் தாக்கம் தெளிவாக கண்டறியப்படக் கூடியதாகவும், அளப்பரியதாகவும் இருத்தல் வேண்டும்.
5. பள்ளி/கல்லுhரி/பொதுத் துறை நிறுவனங்கள்/மத்திய/மாநில அரசுப் பணியில் உள்ளவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள் ஆவர்.
6. உள்ளூர் சமுதாய மக்களிடம் அவர்களுக்குள்ள மதிப்பினை இவ்விருதிற்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும்.
மேற்காணும் முதலமைச்சர் மாநில இளைஞர் விருது பெற 15 வயது முதல் 35 வயதிற்குட்பட்ட தகுதி வாய்ந்த இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவ்விண்ணப்பப் படிவங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணைய தளத்திலிருந்தும் பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் 25.07.2017 மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பதரார் கீழ்க்கண்ட முகவரியில் அலுவலக நேரத்தில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர்,
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்,
மாவட்ட விளையாட்டரங்கம்,
ஜார்ஜ் ரோடு, தூத்துக்குடி.
தொலைபேசி எண் - 0461 2321149
மேற்கண்ட தகவலை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் லூ.தீர்த்தோஸ் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக