ம்

ஏரல் பகுதியில் உள்ள தோட்டங்களில் ஏற்பட்ட திடீர் தீயால் வாழைகள், பனை மரங்கள் எரிந்து நாசமாயின.
ஏரல்,
ஏரல் பகுதியில் உள்ள தோட்டங்களில் ஏற்பட்ட திடீர் தீயால் வாழைகள், பனை மரங்கள் எரிந்து நாசமாயின. இதனால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
வாழைகள் எரிந்து சேதம்
தூத்துக்குடி மாவட்டம் ஏரலை அடுத்த வாழவல்லானில் குடிநீர் வடிகால் வாரிய நீரேற்றும் மையம் உள்ளது. இதன் பின்புறத்தில் வாழவல்லானைச் சேர்ந்த பச்சை பெருமாள், பொன்ராஜ், கடற்கரை, உமரிக்காட்டைச் சேர்ந்த கார்த்தீசன், அதிசயபுரத்தைச் சேர்ந்த அந்தோணி ஆகியோருக்கு சொந்தமான வாழை தோட்டங்கள் உள்ளன. தற்போது வாழை மரங்கள் முதிர்ச்சி அடைந்து குலை தள்ளிய நிலையில் இருந்தன.
நேற்று முன்தினம் மாலையில் வாழை மரங்களின் காய்ந்த இலை சறுகுகளில் திடீரென்று தீப்பிடித்தது. அப்போது காற்று பலமாக வீசியதால் தீ நாலாபுறமும் வேகமாக பரவியது. அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று கிணற்று மோட்டாரை இயக்கி தண்ணீரை பாய்ச்சி தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த வாழைகளின் மீது ஊற்றி அணைத்தனர். இந்த தீ விபத்தில் சுமார் 10 ஆயிரம் வாழைகள் எரிந்து நாசமானதாக விவசாயிகள் தெரிவித்தனர். தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து ஏரல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பனை மரங்கள் எரிந்தன
இதேபோன்று பழையகாயலை அடுத்த மஞ்சள்நீர்காயலில் இருந்து காவல்காடு செல்லும் சாலையோரம் ஏராளமான பனை மரங்கள் உள்ளன. நேற்று முன்தினம் மதியம் இந்த பனை மரங்களில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது.
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் இருந்து 3 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். தீ விபத்தில் சுமார் 500 பனை மரங்கள் எரிந்து சேதம் அடைந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர். பனை மரங்களிலும் எப்படி தீப்பிடித்தது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். ஏரல் பகுதியில் பனை, வாழை மரங்களில் தீப்பிடித்து எரிந்ததால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக