
திருச்செந்தூர் அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமையில் சாலைமறியல் போராட்டம் நடந்தது.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமையில் சாலைமறியல் போராட்டம் நடந்தது.
சாலைமறியல்
திருச்செந்தூர் அருகே உள்ள அடைக்கலாபுரம்– ஆறுமுகநேரி இடையே காட்டு பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை கடந்த 6–ந் தேதி திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அடைக்கலாபுரம் பகுதி மக்கள் கடந்த 3 நாட்களாக டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் டாஸ்மாக் கடை திறக்கப்படவில்லை.
இதற்கிடையே டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி, நேற்று இரவில் டாஸ்மாக் கடையின் முன்பு அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமையில் பொதுமக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக சென்று, வீரபாண்டியன்பட்டினம் மூன்று பிரிவு சந்திப்பு ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
அடைக்கலாபுரம் பங்குதந்தை ஜஸ்டின், தி.மு.க. ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், நகர செயலாளர் மந்திரமூர்த்தி, ஆறுமுகநேரி முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவர் கல்யாணசுந்தரம், வக்கீல் கிருபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனால் திருச்செந்தூர்– காயல்பட்டினம், ஆறுமுகநேரி ரோட்டில் வாகன போக்குவரத்து முடங்கியது. சாலையின் மூன்று புறங்களிலும் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் திருச்செந்தூர் உதவி கலெக்டர் கணேஷ்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்து டாஸ்மாக் கடையை அகற்றுவது குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் சுமார் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக