
ஏரல் அருகே தனியார் தோட்டத்தில் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் எடுக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஏரல்,
ஏரல் அருகே தனியார் தோட்டத்தில் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் எடுக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
குடிநீர் திட்டங்கள்
ஏரல் அருகே மங்கலகுறிச்சிக்கும், குரங்கணிக்கும் இடையில் தாமிரபரணி ஆற்றில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு தடுப்பணை கட்டப்பட்டது. இங்குள்ள தாமிரபரணி ஆற்றுப்படுகையில் 15 உறைகிணறுகள் அமைத்து, சுற்று வட்டார கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மேலும் அங்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் நீரேற்றும் மையம் அமைத்து, தூத்துக்குடி, சாயர்புரம் பகுதிகளுக்கு கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் அனுப்பப்படுகிறது.
தனியார் தொழிற்சாலைகளுக்கு...
இந்த நிலையில் அங்கு தாமிரபரணி ஆற்றின் அருகில் உள்ள தனியார் தோட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 4 ஆழ்குழாய் கிணறுகள் புதிதாக அமைக்கப்பட்டன. நேற்று முன்தினம் இரவில் ஆழ்குழாய் கிணறுகள் மூலம் 4 டேங்கர் லாரிகளில் தண்ணீரை உறிஞ்சி தனியார் தொழிற்சாலைகளுக்கு கொண்டு சென்றனர்.
பொதுமக்கள் எதிர்ப்பு
இதனை அறிந்த மங்கலகுறிச்சி, மேல மங்கலகுறிச்சி, கீழ மங்கலகுறிச்சி, கோட்டைக்காடு, ஆற்றாம்பழம், தேவராஜபுரம் பகுதி மக்கள் தனியார் தோட்டத்தில் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று காலையில் தனியார் தோட்டத்துக்கு செல்லும் பாதையை வழிமறித்து முற்றுகையிட்டனர். முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சின்னத்துரை, பஞ்சாயத்து செயலாளர் பிச்சைபாண்டி, விஜயசங்கர், ராமஜெயம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து அங்கு டேங்கர் லாரிகள் தண்ணீர் எடுக்க வரவில்லை. பின்னர் மாலை வரையிலும் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக