
தூத்துக்குடியிலுள்ள மாவட்ட அரசு இசை பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் சேர்க்கை நடந்து வருகிறது.
தூத்துக்குடி,
தூத்துக்குடியிலுள்ள மாவட்ட அரசு இசை பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் சேர்க்கை நடந்து வருகிறது.
இகுறித்து கலெக்டர் வெங்கடேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;–
மாணவர் சேர்க்கை
தூத்துக்குடியிலுள்ள மாவட்ட அரசு இசைப்பள்ளியில் இந்த ஆண்டுக்கான மாணவ, மாணவிகள் சேர்க்கை, கடந்த 1.6.2017 முதல் நடைபெற்று வருகிறது. இந்த பள்ளிக்கூடத்தில் சேர்வதற்கு வயது 12 வயதுக்கு மேல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
குரலிசை, பரத நாட்டியம், தேவாரம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகளுக்கு 7–ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தவில், நாதசுரம் ஆகிய கலைகளுக்கு எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால் போதுமானது.
கல்வி உதவித்தொகை
இசைப்பள்ளிக்கூடத்தில் படிப்பின் காலம் 3 ஆண்டுகள் ஆகும். இந்த பள்ளிக்கூடத்தில் படிக்கின்ற அனைத்து மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.400 கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.
பள்ளிக்கூடத்தில் சேரும் அனைத்து மாணவ– மாணவியர்களுக்கும் அரசு விடுதி வசதி செய்து தரப்படும். வெளியிடங்களில் இருந்து வரும் மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ் வசதியும் செய்து தரப்படும்.
வேலைவாய்ப்பு
3 ஆண்டுகள் பயின்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் கர்நாடக இசைக் கச்சேரிகள் நடத்தவும், நாதசுரம் மற்றும் தவில் வாசித்து தொழில் புரியவும், தேவாரம் பாடுதல் மற்றும் கோவில்களில் பணிபுரியவும் வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று திறமைகளை வெளிப்படுத்தவும் வாய்ப்புகள் உள்ளன.
கோவில்களில் தேவார ஓதுவார் பணியில் சேர்ந்திட இசைப்பள்ளியில் தேவார இசை பயின்று தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு முன்னுரிமை அளித்து வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று அரசு ஆணையிட்டு உள்ளது.
எனவே கலை ஆர்வம் உள்ள மாணவ– மாணவிகள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு தலைமை ஆசிரியை, மாவட்ட அரசு இசைப்பள்ளி, குரூஸ்புரம் சமுதாய நலக்கட்டிடம், தூத்துக்குடி என்ற முகவரியிலும் 0461– 2300605 மற்றும் 94438 10926 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் கூறி உள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக