சனி, 22 ஜூலை, 2017

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறுபான்மையின மக்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் மேலாண்மை இயக்குனர் தகவல்

சிறுபான்மையின மக்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் மேலாண்மை இயக்குனர் தகவல்
சிறுபான்மையின மக்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
தூத்துக்குடி, 
சிறுபான்மையின மக்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று தூத்துக்குடியில் நடந்த நலத்திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் சிறுபான்மையின நலத்துறை மேலாண்மை இயக்குனர் வள்ளலார் கூறினார்.
ஆய்வு கூட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் சிறுபான்மையின மக்களுக்கான நலத்திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு சிறுபான்மையினர் நலத்துறை மேலாண்மை இயக்குனர் வள்ளலார் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் டாம்கோ மேலாண்மை இயக்குனர் வள்ளலார் கூறியதாவது;–
மத்திய, மாநில அரசுகள் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையின மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துகின்ற வகையில் கல்வி உதவித்தொகை, தொழில் தொடங்குவதற்கான கடன் உதவி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நலத்திட்டங்கள் குறித்து சிறுபான்மையின மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகளில் அதிக அளவு விளம்பர பதாகைகள் வைத்து விளம்பரப்படுத்த வேண்டும்.
ரூ.30 லட்சம் வரை கடன்
சிறுபான்மையின சுயஉதவி குழுக்களுக்கு 6 சதவீதம் குறைந்த வட்டியுடன் ரூ.30 லட்சம் வரை கடன் வழங்கப்பட்டு வருகிறது. தொழில் கடனாக 3 சதவீத குறைந்த வட்டியுடன் 5 வருடங்கள் வரை திரும்ப செலுத்துவதற்குரிய கடன்கள் வழங்கப்படுகிறது. மேலும் தொழில் தொடங்குவதற்கு தொழில் சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
கல்வி பயிலும் சிறுபான்மையின மாணவர்களுக்காக ‘போஸ்ட் மெட்ரிக்‘ மற்றும் ‘பிரிமெட்ரிக்‘ என 2 வகை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. 1–ம் வகுப்பு முதல் 10–ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஒருமுறை விண்ணப்பித்து பெறப்படும் ‘பிரிமெட்ரிக்‘ உதவித்தொகையானது 10–ம் வகுப்பு வரை தொடர்ந்து வழங்கப்படும்.
‘போஸ்ட் மெட்ரிக்‘ உதவித்தொகையானது 11, 12–ம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ., பாலிடெக்னிக், ஆசிரியர் பட்டயபயிற்சி, செவிலியர் பயிற்சி, இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சி படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும். இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க ஆதார் அட்டை, புகைப்படம், சாதி சான்றிதழ் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
இணையதள முகவரி
தமிழ்நாட்டில் பிறந்து இந்தியாவில் எந்த மாநிலத்தில் படித்தாலும் இந்த கல்வி உதவித்தொகை வழங்கப்படும். அதுவும் ஒரு குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகளுக்கு மட்டுமே வழங்கப்படும். இந்த உதவித்தொகையை புதுப்பிக்கவும், புதிதாக பெறவும் மாணவ– மாணவிகள் www.scholerships.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு டாம்கோ மேலாண்மை இயக்குனர் வள்ளலார் கூறினார்.
கூட்டத்தில் உதவி கலெக்டர் (பயிற்சி) சரவணன், திட்ட இயக்குனர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) பிச்சை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின அலுவலர் சேகர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் காளிமுத்து, கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் அமைப்பு நிர்வாகிகள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...