
தூத்துக்குடி மாவட்டத்தில் சிறுபான்மையின மாணவர்கள் கல்விக்கடன் பெற சிறப்பு முகாம் 1, 4, 5 ஆகிய தேதிகளில் தொடங்குகிறது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் சிறுபான்மையின மாணவர்கள் கல்விக்கடன் பெற சிறப்பு முகாம் 1, 4, 5 ஆகிய தேதிகளில் தொடங்குகிறது.
இதுகுறித்து கலெக்டர் வெங்கடேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;–
கல்விக்கடன்
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (டாம்கோ) கல்விக்கடன் திட்டத்தின் கீழ் 2017– 18–ம் கல்வியாண்டில் கிறிஸ்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த மதத்தினர் போன்ற சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க உள்ளது.
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை, தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி படிக்கும் மாணவர்கள் இந்த திட்டத்தின் மூலம் குறைந்த வட்டி விகிதத்தில் கல்வி கடன் பெறலாம்.
வருமானம்
முதலாவது கல்விக்கடன் திட்டத்தின்கீழ் கடன் பெற, ஆண்டு வருமானம் நகர்புறத்தில் ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்துக்கு கீழும், கிராமப்புறத்தில் ரூ.81 ஆயிரத்துக்கு கீழும் இருக்க வேண்டும். தொழிற்கல்வி, தொழில்நுட்பக்கல்வி மற்றும் வேலை வாய்ப்பு படிப்புகளுக்கு ஆண்டுக்கு ரூ.3 லட்சம் விதம் அதிகபட்சம் 5 ஆண்டுகளுக்கு ரூ.15 லட்சம் வழங்கப்படும்.
முதுகலை தொழில்நுட்பக்கல்வி படிப்புகளுக்கு ஆண்டுக்கு ரூ.3 லட்சம் வீதம் 3 ஆண்டுகளுக்கு அதிகபட்சம் ரூ.9 லட்சம் வரை வழங்கப்படும். வெளிநாடுகளில் தொழிற்கல்வி, தொழில்நுட்பக்கல்வி படிப்புகளுக்கு ஆண்டுக்கு ரூ.4 லட்சம் வீதம் 5 ஆண்டுகளுக்கு அதிகபட்சம் ரூ.20 லட்சம் வரை விதிமுறைகளுக்கு உட்பட்டு வழங்கப்படும். வட்டி விகிதம் ஆண்டுக்கு 3 சதவீதமாகும்.
2–வது கல்விக்கடன்
2–வது கல்விக்கடன் திட்டத்திற்கு தனிநபர் ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்துக்கு கீழ் இருக்க வேண்டும். குறுகிய கால உயர்திறன் வளர்ச்சி படிப்புகளுக்கு ஒரு ஆண்டுக்கு ரூ.3 லட்சம் வரையும், தொழிற்கல்வி, தொழில் நுட்பக்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு படிப்புகளுக்கு ஆண்டுக்கு ரூ.4 லட்சம் வீதம் 5 ஆண்டுகளுக்கு ரூ.20 லட்சம் வரை வழங்கப்படும்.
முதுகலை தொழிற்கல்வி, தொழில்நுட்பக்கல்வி படிப்புகளுக்கு ஆண்டுக்கு ரூ.3 லட்சம் வீதம் 3 ஆண்டுகளுக்கு ரூ.9 லட்சம் வழங்கப்படும். வட்டி விகிதம் மாணவர்களுக்கு ஆண்டுக்கு 8 சதவீதமும், மாணவிகளுக்கு 5 சதவீதமும் ஆகும்.
திரும்ப செலுத்த வேண்டிய கால அளவு 60 மாதங்கள் ஆகும். இந்த கல்விக்கடன் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் நகர கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படும்.
சிறப்பு முகாம்
இத்தகைய கல்விக்கடன் வழங்குவதற்கான சிறப்பு முகாம் தூத்துக்குடி மாவட்டத்தில் அடுத்த மாதம் 1–ந் தேதி (சனிக்கிழமை) தொடங்குகிறது. 1–ந்தேதிகோவில்பட்டி நகரசபை அலுவலகம் அருகே உள்ள, தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கோவில்பட்டி கிளை வளாகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.
4–ந் தேதி திருச்செந்தூர் கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. 5–ந் தேதி தூத்துக்குடி எட்டயபுரம் போல்பேட்டை பகுதியில் உள்ள தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடக்கிறது.
விண்ணப்பங்கள்
இதற்கான விண்ணப்பங்கள் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், தூத்துக்குடி கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர், தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், பொறியியல் கல்லூரிகளில் கிடைக்கும்.
விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து பின்னர் உரிய ஆவணங்களுடன் முகாம் நடக்கும் இடங்களில் நேரில் கொடுக்கலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக